திங்கள், 22 அக்டோபர், 2018

NBFC பங்குகளில் என்ன நடக்கிறது?

தற்போது இந்திய பங்குசந்தையில் நடக்கும் வீழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணமும் சொல்லப்படுகின்றன.


ஒரு நாள் கச்சா எண்ணைய் என்று சொன்னால், மறு நாள் ரூபாய் மதிப்பு என்று தொடர்கின்றன.



இன்று கூட காலையில் எழுந்த சந்தை மாலையில் பெட்டி பாம்பாக அடங்கி விட்டது.

சரி என்ன காரணம் என்று விசாரித்தால் கச்சா எண்ணையை சொல்லி இருந்தார்கள்.

அப்படி என்ன கூடி விட்டது என்று பார்த்தால் வெறும் 0.29% தான் கூடி இருந்தது. ரூபாய் மதிப்பில் கூட அவ்வளவு வீழ்ச்சி இல்லை.

தற்போது காரணங்களை தேடிக் கொண்டிருந்தால் உருப்படியாக எதுவும் இறுதி வரை கிடைக்காது.

ஏனென்றால் ட்ரேடர்கள் செய்யும் Profit Booking மேலே எழ வைத்து விழ வைக்கிறது.

ஒரு வேளை சந்தை Bulls Market ட்ரெண்டில் இருந்தால் ட்ரேடர்கள் Short எடுக்க பயப்படுவார்கள். அந்த சூழ்நிலையில் இந்த மாதிரியான ஏற்ற, இறக்கங்களை நாம் பார்க்க முடியாது.

ஆனால் தற்போது சந்தை காளையின் பிடியில் இல்லாததால் ட்ரேடர்கள் கையில் தான் அடுத்த ஒன்பது மாதங்கள் இருக்கும் போல் தெரிகிறது.

இனி நவம்பர் 4, மாநில தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தல்கள், ரிசர்வ் வங்கி கூடும் தேதி போன்றவற்றை நன்றாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நாளை பொறுத்து ஏற்றி இறக்குவார்கள்...

சரி..மேல் சொன்ன அணைத்தும் உலக அளவிலான காரணிகள். நிதர்சனத்தில் இந்தியா நினைத்து ஒரு துரும்பை அசைக்க முடியாது.

அதனால் அவற்றை விட்டு விட்டு முதலீட்டாளராக உள்நாட்டில் உள்ள அடுத்த பிரச்சினைகளை ஆராய்வோம்.

அதில் ஒரு முக்கியமான பிரச்சினை...NBFC நிறுவனங்கள் தான்.

NBFC என்பது Non Banking Finance Companies. வங்கி சாராத நிதி நிறுவனங்கள்..

எலெக்ட்ரானிக்ஸ், மோட்டார் வாகன நிலையங்களில் கூவி கூவி கடன் கொடுக்கும் Bajaj Finance போன்ற நிறுவனங்கள் தான்.

பெரிய வங்கிகள் இந்த அளவு வீதிகளில் இறங்கி கடன் கொடுக்க முன் வராது.

அதனால் இந்த வங்கி சாராத நிறுவனங்கள் பெரிய வங்கிகளிடம் கடன் வாங்கி அதனை விட வட்டியை கூட்டி வைத்து நமக்கு குறுகிய கால கடன்கள் கொடுக்க முன் வரும்.

இது தவிர Commercial Papers என்று சொல்லப்படும் பத்திரங்களை விற்றும் நிதி திரட்டுவார்கள். மூன்றில் ஒரு பங்கு நிதி இது வழியாக தான் இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கிறது.

இந்த பத்திரங்களில் தான் தற்போது பிரச்சினை வந்துள்ளது.

உதாரணத்திற்கு கடந்த வருடம் 7.5% சதவீதம் அளவிற்கு வட்டியில் இந்த நிதியை நிறுவனங்கள் பெற்று வந்தன.

ஆனால் தற்போது ILFS நிறுவனம் பத்திரங்களில் வாங்கிய கடனுக்கு வெறுங்கையை காட்டிய பிறகு நிலைமை மாறி விட்டது.

நிதி நிறுவனங்களின் பத்திரங்கள் மீதான பாதுகாப்பு தரம் குறைந்து போனதால் இந்த வட்டி விகிதமும் 9.5% அளவிற்கு கூடி விட்டது.

அப்படி இருந்தும் நிதி கிடைக்க பெறவில்லை என்பது அதற்கு மேலுள்ள பிரச்சினையும் கூட..

அதிக அளவு வட்டிக்கு நிதியை பெறும் போது அதிக அளவு மார்ஜின் வைத்து கடனும் கொடுக்க முடியாது. அந்த சூழ்நிலையில் லாபமும் குறையும்.

இவ்வாறு நிதி கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக புதிய கடன்கள் கொடுப்பது குறைந்து இந்த நிறுவனங்களின் வளர்ச்சியும் குறையலாம் என்று சந்தை எதிர்பார்க்கிறது.

இதனால் தான் பல NBFC பங்குகள் 50%க்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளன.

இவ்வாறு நிதி பெறுவதில் உள்ள சிக்கல் காரணமாக வங்கிகள் வேறு ஒரு வழியை NBFC நிறுவனங்களுக்கு காட்டியுள்ளன.

தங்களிடம் இருக்கும் கடன்களை பெரிய வங்கிகளுக்கு விற்று விடலாம்.

இதனால் கிடைக்கும் நிதியை வைத்து புதிய கடன்கள் கொடுப்பதற்கு NBFC நிறுவனங்கள் முயற்சிக்கலாம்.

ஒரு குறுகிய காலத்திற்கு பிரச்சினையை சமாளிப்பதற்கு இந்த வழி உதவும்.

ஆனால் நீண்ட காலத்திற்கு சமாளிக்க வேண்டும் என்றால் NBFC நிறுவனங்கள் தங்களது Credit Rating நிலையை உயர்த்திக் கொள்வதும் அவசியமானது. அப்பொழுது தான் Commercial Papers வழியாகவும் நிதி கிடைக்கும்.

அதனால் AAA தர நிலையை பெற்றுள்ள நிறுவனங்கள் அல்லது Tata, Bajaj, L&T போன்ற பலமான பின்புலம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக