ஞாயிறு, 7 அக்டோபர், 2018

பணக்கடவுள் வாரன் பப்பெட் - புத்தக விமர்சனம்

பங்குச்சந்தையின் தற்போது வீழ்ச்சியை பார்த்து பதற்றத்தில் இருக்கும் நண்பர்களுக்கு,

தங்கள் பொன்னான நேரத்தை அடுத்த சில மாதங்களுக்கு தினசரி பங்குச்சந்தை புள்ளிகளை பார்த்து டென்சன் அடையாதீர்கள்!அதற்கு மாற்று வழியாக நீண்ட கால முதலீடு தொடர்பான பங்குச்சந்தை படிப்பினைகளில் கவனம் செலுத்தக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது தளத்திலும் அது தொடர்பான கட்டுரைகள் அதிகம் வெளிவரும்.

அதில் தொடக்கமாக செல்லமுத்து குப்புசுவாமி அவர்கள் எழுதிய 'பணக்கடவுள் வாரன் பப்பெட்' என்ற புத்தகத்தின் விமர்சனத்தை இங்கு பகிர்கிறோம்.


பங்குசந்தையில் ஒரு வெற்றியை சுய சரிதையாக படிப்பதில் உற்சாகமாக  இருப்பதை காண முடிகிறது.

இந்த புத்தகத்தை எழுதிய செல்லமுத்து குப்புசுவாமி அவர்கள் தொய்வு இல்லாமல் பக்கங்களை நகர வைப்பதும் அருமையாக உள்ளது.

இவர் முன்பு பங்குசந்தை தொடர்பாக தமிழில் கட்டுரைகள் எழுதி வந்தார் என்பதும் கூடுதல் தகவல்.

பதினோரு வயதில் 100 டாலரை வைத்துக் கொண்டு பங்குசந்தையில் முதலீடு செய்து, 13 வயதில் தமது முதல் வருமான வரி தாக்கலும் செய்துள்ளார்.

இந்த அளவிற்கு முன் கூட்டி திட்டமிடுதலை யாரும் செய்து இருப்பார்களா? என்பது ஆச்சர்யமே!

சிறு வயதிலே சாக்லேட் விற்றல், பத்திரிகை விநியோகம் செய்தல் என்று அவர் செய்த பகுதி வேலைகளில் தமது முதலீட்டிற்கான பணத்தை பெற்று கொண்டார்.

கலிபோர்னியா மேலாண்மை கல்லூரியில் சேர்தல், அங்கு பெஞ்சமின் க்ராஹாம் அவர்களை சந்தித்தல் போன்றவை திருப்புமுனைகள்.

பெஞ்சமின் க்ரஹாம் தான் பங்குசந்தையின் பைபிளான Intelligent Investor என்ற புத்தகத்தை எழுதியவர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

அதன் பிறகு அடிமட்ட விலைகளில் இன்சுரன்ஸ் நிறுவன பங்குகளை வாங்குதல் என்று அவரது வெற்றி பெரிய அளவில் விரிவடைய துவங்குகிறது.

இப்பொழுது அவரது சொந்த முதலீட்டு நிறுவனமான Berkshire Hathway என்பது கூட வெறும் முதலீட்டு நிறுவனமல்ல.

அது பங்குகளை வாங்கி பெறப்பட்ட ஒரு டெக்ஸ்டைல் நிறுவனம் தான். அந்த நிறுவனம் எவ்வாறு ஒரு பெரிய முதலீட்டு நிறுவனமாக மாறியது என்பதை படிப்பதில் பெரிய அளவு சுவராஸ்யம் உள்ளது.

எல்லாவற்றையும் விட வாரன் பப்பெட்டின் வெற்றி என்பது ட்ரேடிங் செய்து ஒரே நாளில் ஏற்பட்டதல்ல.

எல்லாவற்றிலும் வியாபர அடிப்படைகளும், வளர்ச்சியும் தான் அவரது முக்கிய இலக்காக இருந்தது.

தற்போது அவரது சொத்து மதிப்பு ஆறு லட்சம் கோடி ரூபாய். எல்லாவற்றையும் தானம் செய்து விட்டார்.

இந்த கடினமான நேரத்தில் ஒரு மன வலிமையை பெறுவதற்கு இந்த புத்தகம் கட்டாயம் உதவும். பரிந்துரை செய்கிறோம்!

புத்தக இணைப்பு இங்கே உள்ளது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக