Wednesday, October 3, 2018

RBI அதிரடிகளால் அலறும் வங்கி நிறுவனர்கள்

கடந்த சில மாதங்களாக RBI மேற்கொண்டு வரும் சில அதிரடி நடவடிக்கைகளால் சில நல்ல வங்கி பங்குகள் கூட அகல பாதாளத்திற்கு சென்று வருகின்றன.


இது தொடர்பாக கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.ரிசர்வ் வங்கி விதிகளின் படி,

புதிதாக ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு வங்கி அந்தஸ்து கொடுக்கப்படும் போது அந்த வங்கி

அடுத்த,
  • மூன்று ஆண்டுகளுக்குள் வங்கி நிறுவனர்களின் பங்கு விகிதத்தை 40%க்குள் குறைக்க வேண்டும்.
  • 15 வருடங்களுக்குள் வங்கி நிறுவனர்களின் பங்கு விகிதத்தை 20%க்குள் குறைக்க வேண்டும்.
  • 17 வருடங்களுக்குள் வங்கி நிறுவனர்களின் பங்கு விகிதத்தை 12%க்குள் குறைக்க வேண்டும்.
  • இறுதியில் 10%க்குள் குறைக்க வேண்டும்.

வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணம் அல்லது இதர முதலீடுகளுக்கு நிறுவனர்களின் தாக்கத்தால் எதுவும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக செய்யப்படும் முன் எச்சரிக்கை இது.

தங்கள் வங்கி மீது வைத்து இருக்கும் அதீத நம்பிக்கை காரணமாக கையில் இருக்கும் பங்குகளை மற்றவர்களுக்கு கொடுக்க எளிதில் மனது வராது. அதனால் மேற்சொன்ன விதிமுறைகளை  சில நிறுவனர்களால் பின்பற்ற முடியவில்லை.

முதலாக,

Bandhan Bank

வட கிழக்கு இந்தியாவில் வங்கி என்பது பரவலாக இல்லாத சூழ்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் வழியாக குக்கிராமங்களில் கூட பரவி இருக்கும் வங்கி.

இந்த ஒற்றைக் காரணமாக தான் வங்கி அந்தஸ்து கூட மூன்று வருடங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.

அப்பொழுது வங்கி நிறுவனரிடம் 87% பங்குகள் இருந்தது.

அதன் பிறகு கடந்த ஆண்டு ஐபிஒ வழியாக பங்குகளை விற்றதில் பங்கு சதவீதம் 82% ஆக குறைந்தது.

தற்போது மூன்று ஆண்டும் முடிவடைகிறது. ஆனால்  RBI சொல்லிய 40%க்குள் கொண்டு வர முடியவில்லை.

பங்குகளை விற்காமல் இன்னொரு பெரிய வங்கியை சேர்த்துக் கொண்டால் பங்கு சதவீதத்தைக் குறைக்கலாம். அதே நேரத்தில் அவர்கள் கையில் இருக்கும் பங்கு மதிப்பும் அப்படியே இருக்கும்.

அதனால் பஞ்சாப் தேசிய வங்கி நீரவ் மோடியால் பிரச்னையில் தவித்த போது அதனை வாங்க முற்பட்டார்கள். ஆனால் அதுவும் வெற்றியடைய வில்லை.

அதனால் தற்போது ரிசர்வ் வங்கி நிறுவனரின் சம்பளத்தையும் நிறுத்தி வைத்து மேலும் கிளைகளையும் திறக்க கூடாது என்று சொல்லி விட்டது.

இதனால் தான் ஐபிவில் வந்து இரட்டிப்பு லாபம் கொடுத்த அதே பந்தன் வங்கி தற்போது ஒரே நாளில் இருபது சதவீதம் அளவிற்கு சரிந்து உள்ளது.

இரண்டாவது,

Kotak Bank

2003ல் கோடக் வங்கிக்கு வங்கி அந்தஸ்து அளிக்கப்பட்டது. இந்த வங்கியின் நிறுவனர் உத்ய் கோடக்கிடம் இன்னும் 30% பங்குகள் உள்ளது.

ரிசார் வங்கி விதிப்படி, 15 வருடம் முடிய போவதால் இந்த டிசம்பருக்குள் இவர் தன்னிடம் இருக்கும் பங்குகளை 20%க்குள் கொண்டு வர வேண்டும்.

அதனால் மீதி இருக்கும் பத்து சதவீத பங்குகளுக்கு Preferential Issues என்ற பெயரில் புது பங்குகளை உருவாக்கினார்.

இதன்படி, இந்த புதிய பங்குகளை வாங்குவோருக்கு மூன்று வருடங்களுக்கு பிறகு தான் ஒரு குறிப்பிட்ட விலையில் பங்குகள் கிடைக்கும். இப்பொழுது பங்குதாரர் அந்தஸ்து கிடைக்காது.

இதனால் RBI இந்த மாதிரியான முறைகள் விதி வரம்புக்குள் வரவில்லை என்று கூறி விட்டது.

தற்போது இவரும் ஏதாவது வங்கியை வாங்க திட்டமிட்டுள்ளார். அதிலும் Axis Bank இந்த பட்டியலில் உள்ளதாக சில யூகங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மேற்சொன்ன,

இரண்டிலும் பொதுவாக பார்த்தால் நிறுவனர்கள் தங்கள் வங்கியில் மிக அதிகமாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்த நிறுவனங்களும் நன்றாகவே செயல்பட்டு வருகின்றன.

இதனை ஒரு முதலீட்டாளராக நாம் சாதகமான ஒன்றாகவே கருத வேண்டும்.

தற்போது ஏற்பட்டு இருக்கும் வீழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வை எட்டும் சூழ்நிலையில் மீண்டும் நல்ல பங்கு வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியின் இன்னொரு முடிவால் பாதிக்கப்பட்ட ஒரு வங்கி.

YES Bank

வங்கியின் CEO மீது நம்பிக்கை இல்லாமல் அவரை ஆறு மாதத்திற்குள் விலக சொல்லியுள்ளது. இதற்கு அவர் வாராக் கடன்களை முறையாக கணக்கு காட்டாததும் ஒரு காரணம்.

வங்கியின் மேலாண்மை மீது நம்பிக்கை இல்லாத இந்த முடிவை எதிர்மறையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மிக அதிக அளவில் பங்குகளை வைத்து இருக்கும் இந்த CEO வங்கியின் மீது ஒரு 'அம்மா ஆட்சியை ' கொண்டு வந்தால் முதலீட்டாளராக நாம் தான் பாதிக்கப்படுவோம்.


« முந்தைய கட்டுரைAdvt.

Email: muthaleedu@gmail.com


No comments:

Post a Comment