சனி, 6 அக்டோபர், 2018

ஒன்றுமே புரியவில்லை ...

பங்குசந்தையில் முதலீடு செய்து லாபங்கள் எதிரமறையில் சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நண்பர்களின் கவலையில் நாமும் பங்கு கொள்கிறோம்.


வெற்றி கொடி நாட்டிய ராகேஷ் ஜூன் ஜூன் வாலாவின்  பங்குகளில் சில 75% அளவு சரிந்திருக்கிறது என்பதையும் நினைத்து மனதை தேற்றிக் கொள்க!



அதே போல் வீழ்ச்சி என்பதும் நிரந்தரமல்ல, இன்னும் அடிப்படைகள் வலுவாக உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் நேரமிது.

ஏழரை சனியில் சனி பகவான் கடைசி உச்சக் கட்டத்தில் படுத்தி எடுத்து அதன் பின் வாங்கி வழங்குவது போல் தான் பங்குசந்தையும்.

2008 சரிவுகளிலோ அல்லது அதற்கு முன் ஹர்ஷத் மேத்தாவால் நடந்த சரிவுகளிலோ வீழ்ச்சி என்பது ஒரு வருடம் கூட முழுமையாக நிலைக்கவில்லை என்பதையும் கவனிக்கவும்.

நேற்று ICICI Securities கொடுத்த ஒரு ரிப்போர்ட்டில் வீழ்ச்சி என்பதன் மீழ்ச்சி காலம் சராசரியாக 66 நாட்கள் என்று தான் தரவுகளுடன் குறிப்பிட்டு இருந்தார்கள்.


அது போல் இந்த சரிவும் விரைவில் மீளும் என்று நம்புவோம்.

ஆனால் அடுத்த தேர்தல் வரை ஒரு குழப்பமான நிலை நீடிப்பதால் இந்த சரிவுகள் மீண்டும் மீண்டும் வந்து போகலாம்.

அது வரை ஒவ்வொரு இறக்கத்தையும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக கருதலாம்.

பங்குசந்தை சரிவுகளுக்கு தினசரி காரணங்களை தேடுகிறது. ஆனால் சந்தையின் உச்சக்கட்ட மதிப்பு, கச்சா எண்ணெய், ரூபாய் வீழ்ச்சி, வர்த்தக போர் போன்றவற்றை தவிர வேறு எந்த காரணங்களும் தற்காலிகமே.

இது எப்பொழுது சரியாகலாம்?

#1
 இனி நிறுவனங்கள் நல்ல நிதி அறிக்கை கொடுத்தால் மதிப்பீடல் மலிவாகும்..தற்போதைய வீழ்ச்சியில் ஏற்கனவே மலிவாகி உள்ளதையும் கவனிக்க. வரும் காலாண்டு முடிவுகளில் நல்ல வித மாற்றம் இருந்தால் சந்தை தனது இழப்புகளை குறைக்கலாம்.

#2 
 கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி நமது கையில் இல்லை. இந்தியா இரானிடம் எண்ணெய் வாங்குவதை தொடர்வதாக சொல்லி விட்டது. அநேகமாக மற்ற நாடுகளும் தொடர அதிக வாய்ப்புகள் உள்ளன.  அமெரிக்க அரசாங்கம் சில நிபந்தனைகளை தளர்த்தலாம் என்ற செய்திகளும் உலா வருகிறது.

ஆனால் OPEC நாடுகள் உற்பத்தியை செயற்கை தனமாக குறைத்துள்ளன. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் தேவை குறைந்து விலை குறையலாம். அல்லது OPEC நாடுகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு உற்பத்தியை கூட்டினால் குறையலாம். இந்த இரண்டும் உடனடியாக நடக்க  காலம் தேவைப்படுகிறது.

#3
 மேலே #2ல் சொன்ன பிரச்சினை சரியானால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் நிற்கலாம். இது போக, தினசரி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடுகளை விற்று வருகிறார்கள். அதுவும் சரியாகும் சூழ்நிலையில் ரூபாய் ஒரு விதத்தில் நிலை பெறும்.

 இந்த ரூபாய் வீழ்ச்சியில் ஏற்பட்ட பதற்றத்தை மத்திய அரசு இன்னும் முயன்று குறைத்து இருக்கலாம். இந்த சமயத்தில் கையிருப்பில் உள்ள கொஞ்சம் டாலர்களை விற்று கூட முயன்று இருக்கலாம்.

 ரிசர்வ் வங்கி கவர்னர் சொன்னது போல், எல்லாமே சந்தையே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சும்மா இருந்தால் பதற்றத்தில் அதை விட அதிக அளவு ரூபாய்கள் விற்கப்பட்டு விடும்.

#4
 ட்ரம்ப் ஆரம்பித்து வைத்த வர்த்தக போர் என்று முடியும் என்று தெரியவில்லை. ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது. ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்க கூடாது. ஏங்கிட்டே தான் வாங்க வேண்டும். ஆனால் ஏங்கிட்டே எதுவும் விற்க கூடாது.

எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை. ஒரு பைத்தியக்காரனிடம் இந்த உலகம் மாட்டிக் கொண்டு தவியோ தவி என்று தவிக்கிறது. ட்ரம்ப்புக்கு நல்ல புத்தி கொடுக்க கடவுளிடம் பிராத்திப்போம். வேறு வழி ஒன்றும் நம்மிடம் இல்லை.

நேற்று காலையில் நண்பரிடமிருந்து அழைப்பு..

வட்டி விகிதம் அரை சதவீதம் கூடினால் சந்தையில் நல்ல சரிவு ஏற்படும் போல என்று கூறினார். நாம் அந்த அளவு கூட்ட மாட்டார்கள். கால் சதவீதம் தான் கூட்ட வாய்ப்புள்ளது என்றோம்.

இறுதியில் கவர்னர் எதையுமே கூட்டவில்லை. ஆனால் சந்தையில் அதன் பிறகு சரிவுகள் மிக அதிகமானது.

அதே நண்பரிடமிருந்து மீண்டும் மாலையில் அழைப்பு. நல்ல செய்தி வந்தாலும் செய்தாலும் அடி வாங்குகிறது என்று கேள்வி..

ஒரு வேளை அவர் வட்டியைக் குறைத்தால் கூட சந்தை சரிந்து இருக்கும் என்றோம். விற்பவர்கள் பதற்றத்தில் எதற்காக விற்கிறோம் என்று தெரியாமல் விற்கிறார்கள். மோடி சொன்னால் கூட கேட்க மாட்டார்கள்.

அந்த அளவு ஒரு பதற்றம் சந்தையில் தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த பதற்றத்தில் யார் விலகி நிற்கிறார்களோ அவர்களே புயலுக்கு பின் வரும் அமைதியின் பலனில் பங்கு கொள்வார்கள்.

எல்லாம் வல்ல இறைவன் இன்னும் ஒரு குறுகிய காலத்திற்கு அந்த மன வலிமையை எமக்கும்.வாசகர்களுக்கும் கொடுக்க பிராத்திக்கிறோம்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக