வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

வாராக் கடனால் ரத்தக் களரியில் இந்திய பங்குச்சந்தை, என்ன செய்வது?

நேற்று இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது.


ஆரம்பத்தில் பெரிதாக சரிவில்லாமல் தான் சந்தை தொடங்கியது. அதன் பிறகு எஸ்பிஐ வங்கியின் நிதி நிலை அறிக்கை வந்த பிறகு நிலைமை மிகவும் மோசமாக மாறியது.



எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் மட்டும் 67% குறைந்தது.

அப்படி என்றால், டெபாசிட்கள் குறைந்ததோ அல்லது லோன் கொடுப்பது என்றோ அர்த்தமல்ல. இந்த இரண்டும் நல்ல வளர்ச்சியைத் தான் காட்டி உள்ளது.

ஆனால் ஏற்கனவே கொடுத்த கடன்கள் சொதப்பியதால் வாராக் கடன் 82% அதிகரித்துள்ளது.

என்ன, ஒரே காலாண்டில் இவ்வளவு அதிகரித்துள்ளதே என்ற ஆச்சர்யம் ஏற்படலாம்.

நாம் கடந்த இரு வாரங்கள் முன்பு எழுதிய ஒரு பதிவில், ரிசர்வ் வங்கி வாராக் கடன் நிலைமையை ஆய்வு செய்து வருவது பொதுத்துறை வங்கிகளை பாதிக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

ஆமாம். அது தான் தற்போது நடந்துள்ளது.

ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் பல பொதுத்துறை வங்கிகள் பல மாதங்களாக வாராக் கடன்களை முறையாக கணக்கில் எடுத்து கொள்ளவில்லை என்று தெரிய வருகிறது.

அதனால் ஆய்விற்கு பின், அணைத்து கணக்கில் வராத வாராக் கடன்களும் ஒன்று சேர்ந்து ஒரே காலாண்டில் வாராக் கடனை கணிசமாக கூட்டி விட்டன.

அதனைத் தொடர்ந்து வெளிவந்த பேங்க் ஒப் இந்தியாவும் இதே மாதிரியான நிதி அறிக்கையைத் தான் கொடுத்து உள்ளது.

மேலும் ஐஒபி போன்ற மற்ற பொதுத்துறை வங்கிகள் கூட இதே போன்று நிதி அறிக்கையைக் கொடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை.

ஆனாலும் இதனை நேர்மறையாக பார்க்க வேண்டும் என்றால், சரியான சமயத்தில் நடைபெற்ற அறுவை சிகிச்சை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மேலும் விட்டு இருந்தால் கோமா நிலையில் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு எடுத்து சென்று இருக்கும்.

இன்னும் எஸ்பிஐ வங்கியின் நிதி நிலை மிகவும் மோசமாக செல்லவில்லை என்பதே எமது கருத்து. அவர்களது மொத்த நிதி அளவைக் கருத்தில் கொள்கையில் இன்னும் மீள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் குறைந்தது மூன்று வருடமாவது காத்து இருக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் தவிர்க்க வேண்டும் என்று கருதும் இரண்டு துறைகளை டிப்ஸாக தருகிறோம்.

எஸ்பிஐ தவிர மற்ற பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்து இருந்தால் வெளியே வருவது மிகவும் நல்லது. அடுத்த இரண்டு, மூன்று காலாண்டுகளுக்கு பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து நஷ்டத்தை கொடுக்க வாய்ப்பு உண்டு.

அடுத்து, ஆட்டோ துறையில் சில பங்குகள்..

சீனாவில் ஏற்பட்ட பொருளாதார நடுக்கத்தில், பல பொருட்கள் இந்தியாவில் மலிவு விலையில் வந்து குவிகின்றன. அதில் ஸ்டீல் உலோகமும் ஒன்று.

இதனால் இந்திய உலோக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட, அவர்களைக் காப்பாற்றும் முயற்சிக்கு அரசு இறங்கி உள்ளது.

அதனால் குறைந்த பட்ச விலையை நிர்ணயிக்கும் பொருட்டு அதிக அளவு வரி ஸ்டீல் இறக்குமதிக்கு விதிக்கப்பட உள்ளது.

இது ஸ்டீல் நிறுவனங்களுக்கு நன்று. ஆனால் குறைந்த விலையில் ஸ்டீலை வாங்கி வந்த ஆட்டோ நிறுவனங்கள் அதிக லாபத்தை பெற்று வந்தன. அந்த நிலையில் தற்போது மாற்றம் ஏற்படலாம்.

இதனால் ஒவ்வொரு ஆட்டோ நிறுவனங்களுக்கும் 4 முதல் 8 சதவீதம் வரை லாபக் குறைவை இந்த வரி ஏற்படுத்தலாம்.

அதனால் விரைவில் ஆட்டோ நிறுவனங்களின் பங்குகளில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

இறுதியாக,

எமக்கு தெரிந்து பல நண்பர்கள் இந்த வீழ்ச்சியில் துவண்டு உள்ளார்கள் என்று அறிகிறோம்.

ஆனால் 2008ல் நடந்த வீழ்ச்சியை அனுபவப்பூர்வமாக அறிந்தவர்கள் இதனை சாதரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு கட்டத்தில் 20,000 சென்செக்ஸ் புள்ளிகளில் இருந்து 6,500 நிலைக்கு சென்று மீண்டும் ஓரிரு மாதங்களில் 16,000 நிலையை அடைந்தது என்பது எமது நியாபகம்.

அதே நிலை தான் தற்போதும் ஏற்படும் போல் தெரிகிறது.

தற்போது 20,000 புள்ளிகளுக்கு கூட சென்செக்ஸ் செல்லலாம். ஆனால் 25,000 என்ற நிலையை மிகவும் குறுகிய காலத்தில் சந்தை மீண்டும் பெறும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

அதனால் வீழ்ச்சி நினைவுகளில் சோர்ந்து விடாமல் நல்ல முதலீடுகளை தற்போது சராசரி செய்யுங்கள்.

அவ்வாறு சராசரி செய்ய பணம் இல்லாவிட்டால் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் சந்தையை பார்க்கலாம். இல்லாவிட்டால், சந்தை நிகழ்வுகள் வாழ்வின் மற்ற சந்தோசங்களை பாதிக்கலாம்.

அடுத்த ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்தில் நிலைமை முற்றிலும் மாறலாம். அது வரை காத்திருப்போம்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக