புதன், 3 பிப்ரவரி, 2016

வட்டி விகிதத்தை மாற்றாத ரிசர்வ் வங்கியும், தொடரும் சரிவுகளும்..

நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜன் வட்டி விகிதங்களில் எந்த வித மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.

அதனால் சந்தை நேற்று சரிந்தது.ஆனால் அவர் வட்டி விகிதங்களைக் குறைப்பார் என்று சந்தையில் இருக்கும் பத்து சதவீத முதலீட்டாளர்கள் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

அதற்கு கடந்த ஆண்டில் கணிசமாக வட்டி விகிதங்கள் குறைப்பட்டன என்பதையும் நினைவு பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

வெறும் வட்டி விகிதங்களை மட்டும் குறைப்பதால் மட்டும் வளர்ச்சி ஏற்படும் என்றால் அந்த வளர்ச்சி நிலையாக இருக்காது என்பதே உண்மை.

அந்த வகையில் அடுத்து, வங்கிகளின் வாராக்கடன்கள் குறைதல், அரசு அதிகமாக செலவழித்தல், மக்கள் வாங்கும் சக்தி அதிகரித்தல் போன்றவை தான் நம்மை அடுத்தக் கட்ட பொருளாதார நகர்விற்கு எடுத்து செல்லும்.

தற்போதைய காலாண்டு முடிவுகளில் நிறைய நிறுவனங்கள் நேர்மறை முடிவுகள் கொடுத்து இருந்தன. அதில் L&T, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் நல்ல முடிவுகள் கவனத்தை இழுக்கின்றது.

ஏனென்றால் இவை தான் துவண்டு கிடந்த தொழில் துறைகளை சார்ந்தவை. அவற்றில் ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்படும் போது கொஞ்சம் நம்பிக்கை தெரிகிறது.

இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்றாலும், டிசம்பர் காலாண்டு முடிவுகள் பெரிதளவு ஏமாற்றம் அளிக்கவில்லை என்று கூறலாம்.

நேற்றைத் தொடர்ந்து இன்றும் சரிவு ஏற்பட்டது. அதற்கு ஆசியா, அமெரிக்க சந்தைகளின் சரிவுகள் காரணமாக கூறப்பட்டது.

இதனைப் பற்றி கருத்து எதுவும் சொல்ல முடியவில்லை. உலகில் எங்கு எது நடந்தாலும் சரிவது கடந்த ஒரு மாதமாக இங்கு நடந்து வருகிறது.

ஆனால் வெளிநாட்டு முதலீட்ட்லாளர்கள் பத்து சதவீதத்திற்கும் மேல் தங்கள் முதலீடுகளை விற்று செல்வதே இதற்கு மறைமுக காரணம் எனலாம்.

ஒரு தனிப்பட்ட முதலீட்டாளனாக பார்த்தால் 24,000 சென்செக்ஸ் புள்ளிகள் நிலை என்பதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நல்ல முதலீடு என்று கருதிக் கொள்ளலாம்.

நம்முடைய பங்கு லாபம் என்பது நிறுவனங்களின் வளர்ச்சிகளுடன் சேர்ந்து நாம் வாங்கும் மலிவு பங்கு விலையும் பொறுத்து அமைகிறது.

அதனால் நல்ல பங்குகளை தற்போதைய மலிவு விலையில் வாங்குவது என்பது எதிர்காலத்தில் அதிக லாபத்தை பெறுவதற்கு பெரிதும் உதவும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக