திங்கள், 29 பிப்ரவரி, 2016

பங்குச்சந்தைக்கு சாதகமும், பாதகமும் இல்லாத பட்ஜெட்

நேற்று அருண் ஜெட்லி இந்த வருடத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


ஆனால் பங்குச்சந்தையில் எந்த முறையும் இல்லாத அளவு பட்ஜெட்டிற்கு மிகக் குறைந்த எதிர்பார்ப்பே வைக்கப்பட்டு இருந்தது.



அதனால் சந்தையும் பட்ஜெட்டிற்கு பிறகு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அதையும் தாண்டி நிதி நிலை அறிக்கை என்பது சந்தைக்கு சாதகமாகவே அமைந்தது.

நிதிப்பற்றாக்குறை 3.9% என்ற அளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே இருந்தது. அடுத்த வருடம் 3.5% என்று இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மொத்தமாக 7.6% என்ற அளவில் GDP வளர்ச்சி அடைந்துள்ளது. பணவீக்கம் நான்கரை சதவீத அளவில் நிலை பெற்றுள்ளது.

இப்படி நிதி அறிக்கையை பார்க்கையில் மற்ற உலக நாடுகளை விட இந்தியா எவ்வளவோ பரவாக இல்லை என்று தான் தோன்றுகிறது.

அடுத்து, தாக்கல் செய்த பட்ஜெட்டை பார்த்தால் விவசாயம், கிராமப்புறம், கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற, தொழில், உற்பத்தி துறைகள் அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை.

விவசாயத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வருடங்களில் விவசாய உற்பத்தியை இரட்டிப்பாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதிலும் சொட்டு நீர் பாசனத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது Jain Irrigation போன்ற நிறுவனங்களுக்கு அதிக அளவு சாதகமாக அமையும்,

கட்டமைப்பு துறையில் பார்த்தால் அதிக நிதி நெடுஞ்சாலைகள் கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு போன்ற திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.

இது போக, முதல் வீடு வாங்குபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அளவு தொகைக்கு கூடுதல் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வீடு வாங்குபவர்கள் விருப்பம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இதில் ஆதாயம் பெறலாம். ஆனால் தற்போது இருக்கும் தொய்வு நிலையில் இது மட்டும் போதுமா என்ற கேள்வியும் வருகிறது.

மற்றபடி, தனி நபர் வருமான வரி விலக்குகளில் பெரிய மாற்றம் வரவில்லை.

ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு பாதகமாக STT வரி கூட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பத்து லட்சத்திற்கு மேல் டிவிடென்ட் வந்தால் அதற்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் நல்ல விதமாக LTCG வரி விதிப்பில் எந்த வித மாற்றமும் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

மோடம், செட்-டாப் பாக்ஸ் போன்றவற்றின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது டெலிகாம் நிறுவனங்களுக்கும் சாதகமாக அமையலாம்.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் பெரிதளவு நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் நிதி அறிக்கை சாதகமாக அமைந்திருப்பது நீண்ட கால முதலீட்டிற்கு நன்று!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக