செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பட்ஜெட் பங்குச்சந்தையின் திசையை மாற்றுமா?

கடந்த இரு மாதங்களாக தொய்வில் இருக்கும் இந்திய சந்தை பட்ஜெட்டை ஒட்டி மீண்டும் வேகம் எடுக்கும் என்றதொரு நம்பிக்கை சந்தையில் பரவலாக இருக்கிறது.


அதனால் குறுகிய கால வர்த்தகர்கள் பங்குகளை வாங்கி பட்ஜெட் முடிந்த பிறகு விற்று லாபம் பார்க்கும் கதையும் நடந்து வருகிறது.ஆனால் அவ்வளவு இனிப்பாக பட்ஜெட் இருக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கும் போல் தான் தோன்றுகிறது.

பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்றால் அதற்கான பணம் அரசிடம் இருக்க வேண்டும்.

அதனை விட நிதிப் பற்றாகுறை குறைவாக இருக்க வேண்டும். ஜிடிபியில் மூன்றரை சதவீதத்திற்கு அருகில் கொண்டு வர வேண்டும் என்பது தான் கடந்த பட்ஜெட்டில் ஒரு இலக்காக வைக்கப்பட்டது.

ஆனால் அந்த மூன்றரை சதவீத இலக்கை நாம் இன்னும் அடையவில்லை என்பதால் இனிப்பான அறிவிப்புகளை எளிதில் அறிவிக்க முடியாது.

அதனால் தான் ரயில்வே அமைச்சகம் கேட்கும் நிதியைக் கூட நிதி அமைச்சகம் இன்னும் முழுமையாக ஒத்துக் கொள்ளவில்லை.

இப்படி இந்த வருடம் கொஞ்சம் கஞ்சத்தனமாக செலவு செய்யவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சந்தை பட்ஜெட்டிற்கு முன் எதிர்பார்ப்புடன் உயர்ந்து அதன் பிறகு ஏமாற்றத்துடன் அதே அளவு குறையவும் செய்யலாம்.

அதே வேளையில் நிர்வாக ரீதியாக பிரச்சினைகளால் நின்று போயிருந்த கட்டமைப்பு திட்டங்கள் மீண்டும் செயலாக்கத்தில் வந்துள்ளது கொஞ்சம் மகிழ்வைத் தருகிறது.

இந்த பட்ஜெட் உப்பு சப்பு இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்து GST வரி விதிப்பு மசோதாவும் வருகிறது.  இந்த மசோதா மீண்டும் கவனத்தை ஈர்க்கலாம்

கடந்த இரு கூட்டங்களைப் போல் இந்த முறையும் GST வரியில் சொதப்பாமல் உருப்படியாக வந்தால் அது சந்தைக்கு அதிக அளவில் புத்துணர்வை கொடுக்கலாம்.

தற்போதைய வீழ்ச்சி என்பது ஒரு பட்ஜெட், ஒரே திட்டம் போட்டு தீர்க்க கூடிய விடயமல்ல. கொஞ்சம் கொஞ்சமாக மீள வேண்டியது. அதற்கான வாய்ப்பு இன்னும் மங்காமலே உள்ளது.

இதற்கிடையே ஒரு புள்ளி விவரம் பார்க்க நேரிட்டது.

2000 முதல் 2007 வரை வருடத்திற்கு 26% என்ற விகிதத்தில் வளர்ந்த சென்செக்ஸ் அடுத்த ஏழு வருடங்களில் வருடத்திற்கு 1.5% அளவே வளர்ந்துள்ளது.

ஆனால் சென்செக்ஸ் நிறுவனங்களை பார்த்தால் இந்த ஒன்றரை சதவீதத்தை விட நல்ல லாப வளர்ச்சியை அடைந்துள்ளன.

அதே லாப விகிதத்திற்கு வளராத சந்தை அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் இதனை சமநிலைப்படுத்தி ஒரு நல்ல ரிடர்னை தரலாம் என்றே தோன்றுகிறது.

பீதியடையாமல் சந்தையில் தொடரலாம்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக