வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

குழந்தைகள் ம்யூச்சல் பண்ட்களை எப்படி பயன்படுத்துவது?

குழந்தை பிறந்துள்ளது என்று அறிந்தவுடனே நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ எல்ஐசி ஏஜென்ட்களுக்கு முன்பே தெரிந்து விடுகிறது. எப்படி அறிகிறார்கள் என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.


இருந்தாலும் அந்த நண்பர் சரியான நேரத்தில் குழந்தைகள் தேவைக்கு பொருளாதார திட்டமிடுதலை ஆரம்பிக்க வேண்டும் என்பதை நியாபகப்படுத்தி விட்டார். அதற்கு நன்றி சொல்ல வேண்டும்!



எம்மைப் பொறுத்தவரை எல்ஐசி பாலிசியும் தேவை தான். ஆனால் அதனை மட்டும் முழுமையாக நம்பி இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் மாறுபாடு உள்ளது.

குழந்தைகளுக்கு என்று திட்டமிடும் போது இரண்டு வகையாக திட்டமிட வேண்டி உள்ளது.


முதலாவது நமக்கு ஏதேனும் வாழ்க்கை இடர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது? என்பது வருகிறது. அந்த சூழ்நிலையில் தான் எல்ஐசி பாலிசிகள் துணை புரிகின்றன.  நம்முடைய மறைவிற்கு பிறகு பீரீமியம் முழுமையாக கட்டா விட்டாலும் காப்பீடு பணம் குடும்பத்திற்கு வந்து விடும்.

இந்த எதிர்மறை சூழ்நிலைக்கு வெறும் பத்து சதவீதத்திற்குள் மட்டும் வாய்ப்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம்.  ஆனால்  நம்மில் பலர் இந்த பத்து சதவீத வாய்ப்பிற்கு நூறு சதவீத சேமிப்பையும் கொட்டும் பழக்கம் இருந்து வருகிறது.

அதனால் இரண்டாவது வாய்ப்பான நாம் நலமாக இருந்து குழந்தைகளை வளர்க்கும் சூழ்நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவ்வாறு வரும் போது மொத்த சேமிப்பில் பாதிக்கும் குறைவை எல்ஐசியில் வைத்துக் கொண்டு மீதி பாதியை வேகமாக வளரும் முதலீடுகளுக்கும் திருப்ப வேண்டியது அவசியமாகிறது.

அந்த சூழ்நிலையில் தான் ம்யூச்சல் பண்ட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ம்யூச்சல் பண்ட்களை பொறுத்த வரை எவ்வளவு காலம் மக்கள் சேமிப்பை பண்ட்களில் வைத்து இருப்பார்கள் என்பது தான் பண்ட் மேலாளர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய சவால்.

ஏனென்றால், இது ஒரு பங்குச்சந்தை சார்ந்த முதலீடு என்பதால் மக்கள் ஒரு குறிப்பிட்ட லாபம் அடைந்த பிறகு உடனடியாக விற்கும் பழக்கம் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் பண்ட் மேலாளர்களுக்கு நீண்ட கால நோக்கில் திட்டமிடுதல் என்பது கடினமான விடயமாக மாறி விடும்.

ஆனால் குழந்தைகள் தொடர்பான திட்டம் என்பதால் பொதுவாக முதலீடு என்பது நீண்ட காலமாக இருக்கும். இது பண்ட் மேலாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு திட்டமிடுவதற்கு வசதியாகி விடுகிறது.

அதே போன்று நமக்கு பார்த்தால் இன்று வருடத்திற்கு இரண்டு லட்சம் என்று சராசரியில் இருக்கும் மருத்துவம் அல்லது பொறியியல் கல்வி கட்டணம் பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு பதினைந்து லட்சத்திற்கு மேல் சென்றாலும் ஆச்சர்யமில்லை.

எப்பொழுதுமே கல்விக்கான பண வீக்கம் என்பது மற்றவற்றின் பண வீக்கதினை விட அதிகமாகவே உள்ளது.

அதனால் சராசரி பணவீக்கத்தில் தரப்படும் பிக்ஸ்ட் டெபாசிட்டிற்கு மாற்றாக ஒரு வழியினைக் கண்டுபிடிப்பதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இந்த நிலையில் தான் ம்யூச்சல் பண்ட்டில் கிடைக்கும் ரிடர்ன் என்பது எதிர்கால கல்விக்கான தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதாக இருக்கிறது.

இதன் தேவையைக் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு என்று பரஸ்பர நிதிகளை ம்யூச்சல் பண்ட் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.

இதில் பல நிறுவனங்கள் இருந்தாலும் HDFC, ICICI, Axis நிறுவனங்களின் ம்யூச்சல் பண்ட்கள் மற்ற நிதிகளை ஒப்பிடுகையில் நன்றாக செயல்பட்டு வருகின்றன.

கீழே உள்ள இணைப்புகளில் மேலதிக விவரங்கள் உள்ளன.

இதில் HDFC Children Gift Fund மற்றவற்றை விட கொஞ்சம் நன்றாக தெரிகிறது.

பொதுவாக ம்யூச்சல் பண்ட்கள் என்பதில் பங்குச்சந்தை தொடர்பான ரிஸ்க் இருந்தாலும் நாம் காலத்தை அதிகமாக கொடுக்கும் சமயத்தில் சமநிலைப்படுத்தப்பட்டு விடும்.

இந்த குழந்தைகள் பண்ட்களில் மாதாந்திரம் பணம் செலுத்தும் வகையில் SIP முறையில் முதலீடு செய்வது சிறந்தது. சிறுக சேமித்தது போலும் ஆகி விடும். அதே சமயத்தில் பெரிய தொகை இறுதியில் கிடைத்து விடும்.

அதனால் FundsIndia போன்ற இணையதளங்கள் வழியாகவும் முதலீடு செய்வது எளிதாக இருக்கும். ஏற்கனவே முதலீடு செய்த நண்பர்கள் கூறிய கருத்துக்களும் நேர்மறையாகவே இருந்ததையும் பகிர்கிறோம்.

இந்த வகையான பண்ட்களில் Exit Load கட்டணம் என்பது கொஞ்சம் அதிகம். அதனால் குறைந்தது ஐந்து வருடத்திற்கு மேல் முதலீடு செய்யும் திட்டம் இருந்தால் குழந்தைகள் ம்யூச்சல் பண்ட்கள் அதிக பலனைத் தரும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக