சனி, 10 ஜூன், 2017

GST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்

ஜூலை 1 முதல் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக வரி விதிப்பில் பெரிய அளவில் மாற்றம் வரவிருக்கிறது. அது தான் GST என்று சொல்லப்படும் Goods and Services Tax.


இது வரை நமது வரி விதிப்பை பார்த்தால் ஊருக்கு ஒன்று என்று இருக்கும். ஆச்சி மசாலா பாக்கெட்டை எடுத்துக் கொண்டால் கூட தமிழ்நாட்டிற்கு ஒன்று இருக்கும். கர்நாடாகாவிற்கு வேறு இருக்கும்.



இதற்கு ஒவ்வொரு மாநிலமும் தமக்கு ஏற்றவாறு வரி விதிப்பை விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி என்று பல விதங்களில் விதித்து வந்தன.

ஆனால் தற்போது வரும் GST இதனை முழுமையாக நீக்கி விடுகிறது. அதாவது வரி என்ற ஒன்றே விற்கும் இடத்தில் தான் விதிக்கப்பட இருக்கிறது.

உதாரணத்திற்கு அதே ஆச்சி மசாலாவை எடுத்துக் கொள்வோம்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்து கர்நாடகாவில் விற்பனை செய்தாலும் ஒரே விலையாக தான் இருக்கும். தமிழ்நாட்டிற்கு உற்பத்தி வரி செலுத்த வேண்டியதில்லை. அதே நேரத்தில் விற்கும் கர்நாடகாவில் ஒரே வரி விதிக்கப்படும்.

இதுவும் எளிது தான். ஒவ்வொரு பொருளுக்கும் இவ்வளவு சதவீத வரி என்று நிர்ணயித்துள்ளார்கள். பாக்கெட் உணவு பொருளுக்கு 12% GST வரி என்றால் இந்தியா முழுமைக்கும் ஆச்சி மசாலாவிற்கு 12% வரி தான்.

இதனால் ஆச்சி மசாலா நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக தணிக்கையாளர்களை வைத்து வேலை செய்ய வேண்டய அவசியம் இல்லை.

அப்படி என்றால், அதிக அளவில் பொருட்களை உற்பத்தில் செய்யும் தொழில் துறை சார்ந்த மாநிலங்களுக்கு வரி வருவாயில் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும்.

அதனால் தான் தமிழ்நாடு, மகராஷ்டிரா போன்ற உற்பத்தி துறை சார்ந்த மாநிலங்கள் GST வரியை எதிர்த்தன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வரி வருவாயை இழக்க வேண்டி வரும்.

அதற்கு தற்போதைய மத்திய அரசு வரி இழப்பீட்டில் ஒரு பகுதியை அடுத்த ஐந்து வருடங்களுக்கு தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்து உள்ளார்கள்.

அதே நேரத்தில் எந்த மாநிலத்தில் உள்ள மக்கள் நல்ல செலவு செய்கிறார்களோ அந்த அரசிற்கு அதிக அளவு வரி வருவாய் கிடைக்கும்.

தற்போதைய GST வரி விகிதத்தை பார்த்தால்,
  • பால், அரிசி, கோதுமை, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த வரியும் கிடையாது.
  • 500 ரூபாய்க்குள் வரும் செருப்புகள், விவசாய உற்பத்தி சாதனங்கள், சோலார் மின் உற்பத்தி சாதனங்கள்,  டீ போன்றவற்றிற்கு 5% வரி விதிக்கப்படும்.
  • கணினி, பாக்கெட் உணவு பொருட்கள் போன்றவற்றிற்கு 12% வரி விதிக்கப்படும்.
  • விலை உயர்ந்த செருப்புகள், பிஸ்கட், சோப், பற்பசை போன்றவற்றிற்கு 18% வரி விதிக்கப்படும்.
  • கார், வாஷிங் இயந்திரம், குளிர்சாத பெட்டிகள், அழகு பொருட்கள் போன்றவற்றிற்கு 28% வரி விதிக்கப்படும்.
இந்த வரி விதிப்பில் சில எதிர்மறை விளைவுகளும் இல்லாமல் இல்லை.

தற்போது நூறு ரூபாய்க்குள் வரும் பிஸ்கட்களுக்கு 9% வரி விதிக்கப்படுகிறது. நூறு ரூபாய்க்கு மேல் உள்ளவற்றிற்கு 17% முதல் 23% வரை விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் GST வரியில் எல்லா பிஸ்கட்களுக்கும் 18% வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் ஆடம்பர கார்களுக்கு 30%க்கும் மேல் வரி இருந்தது. பட்ஜெட் கார்களுக்கு குறைந்த வரி விதிப்பே இருந்தது. ஆனால் தற்போது எல்லாவற்றிற்குமே 28% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் எளிய மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த எதிர்மறை விளைவுகள் என்பது நடைமுறைப் படுத்துவதில் உள்ள சில தவறுகள் தான். இவை சரி செய்யப்படுமாயின் GST என்பது இந்தியாவில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வர வாய்ப்பு உள்ளது.



நேர்மறையாக பார்த்தால்,

GST வரி விதிப்பால் இந்திய GDP ஒரு சதவீத அளவு அதிக வளர்ச்சி பெறவும் வாய்ப்பு உள்ளது.

எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் ஒரு கணக்கீடு சொல்கிறது. தற்போது பால் போன்ற அத்தியாவசிய மாத செலவுகளை கொண்ட குடும்பம் 16,000 ரூபாயை செலவழிக்கிறது என்றால் இனி 15,500 ரூபாய் செலவளித்தால் போதும்.

அந்த வகையில் பாமரனுக்கும் பலன் தான். பண வீக்கமும் குறைய வாய்ப்பு உள்ளது.

ஆனால் இன்னும் 60%க்கும் மேல் உள்ள வியாபாரிகள் தங்களை GSTக்கு தயார்படுத்திக் கொள்ளவில்லை என்று ஒரு சர்வே சொல்கிறது. அது தான் GSTயை நடைமுறை படுத்துவதற்கு மத்திய அரசிற்கு பெரிய சவாலாக அமையும்.

முடிவாக இது மன்மோகன் சிங் அரசின் திட்டம். மோடி அரசால் நடைமுறைக்கு வருகிறது. அதனால் கிரெடிட் என்பது இரண்டு பேருக்குமே செல்வது தான் சால சிறந்தது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக