திங்கள், 26 ஜூன், 2017

சாதகமான சூழ்நிலைகளை நோக்கி விமான பங்குகள்

இரண்டு, மூன்று வருடங்கள் பின் நோக்கினால் விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட திவால் நிலைக்கே சென்றன.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அப்படியே நிலைமை மாறி விட்டது.


அதனால் இந்த நேரம் மல்லையாவும், கலாநிதி மாறனும் King Fisher, Spice Jet நிறுவனங்களை ஏன் விற்றோம் என்று பீல் பண்ணி இருப்பார்.



ஒவ்வொரு வியாபாரத்திலும் வருடந்தோறும் சீராக இருபது, முப்பது சதவீத வளர்ச்சி இருப்பது என்பது அரிதான ஒன்றே.

ஒரு சமயம் நூறு சதவீத வளர்ச்சி கூட இருக்கலாம். மற்றொரு நேரம் கடுமையான நஷ்டத்தையும் கொடுக்கலாம்.

அதனால் நஷ்டம் கொடுக்கும் போது நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு பண புழக்கத்தை வைத்துக் கொண்டால் லாபம் வரும் போது மொத்தமாக அள்ள முடியும்.

உதாரணத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் ஒரு வியாபாரத்திற்கு தேவைப்பட்டால் பத்து லட்ச ரூபாய் மொத்தமாக கையில் வைத்து இருப்பது சாதக, பாதகங்களை தாங்குவதற்கு பெரிதும் உதவும்.

சரி. விமான துறைக்கு வருவோம்.

கடந்த ஒரு வருடத்தில் எரிபொருள் விலை குறைவு காரணமாக விமான பங்குகள் லாப திசையில் பயணிக்க ஆரம்பித்து இருந்தன.

தற்போது இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து பார்த்தால் மேலும் 20% கச்சா எண்ணெய் விலை குறைய ஆரம்பித்துள்ளது.

இதனை விமான நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

அப்படியே இன்னொரு திசையில் அரசின் கொள்கை முடிவுகளும் விமான நிறுவனங்களுக்கு சாதகமாக மாறி உள்ளது.

மோடி அரசு UDAN என்ற திட்டத்தை விமான துறையில் கொண்டு வந்துள்ளது.

அதன்படி பிரிட்டிஷ் காலத்தில் ஏகப்பட்ட விமான தளங்கள் அங்கிங்கு ஏற்படுத்த பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலனவை பயன்படுத்தப்படாத நிலையிலே உள்ளன.

அவற்றை குறைந்த வாடகையில் விட்டு விமானங்களை விட முடிவு செய்து உள்ளது.

உதாரணத்திற்கு பெங்களூர் விமான நிலையம் சிட்டியில் இருந்து பார்த்தால் குறைந்தது ஐம்பது கிலோ மீட்டர்களாவது இருக்கும்.

ஆனால் அந்த ஏர்போர்ட்டில் ஒரு விமானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றால் சர்வதேச விமான நிலைய வாடகை அளவு கொடுக்க வேண்டி உள்ளது.

அதே நேரத்தில் புதிய திட்டத்தின் படி ஓசூரில் பயன்படுத்தாத நிலையில் சிறு விமான நிலையம் அப்படியே உள்ளது.

அதனை குறைந்த வாடகைக்கு விட்டால் பெங்களூரின் தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு பகுதி மக்களுக்கு தற்போதைய ஏர்போர்ட்டை விட குறைவான நேரத்தில் குறைவான நெரிசலில் குறைவான செலவில் சென்று விடலாம்.

இது போல் பல சிட்டிகளுக்கு அருகாமையில் ஏர்போர்ட்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு மக்கள் விமானங்களை பயன்படுத்தும் நிலை திடீர் என்று மிக அதிகமானால் விமான நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தான்.

அதனால் அடுத்த ஐந்து, பத்து வருடங்களை நோக்கி பார்த்தால் ஒரு நல்ல விமான பங்கை கையில் வைத்துக் கொள்வது நல்லது. மக்கள் பறக்க, பறக்க நமது முதலீடும் பறக்கும்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக