வியாழன், 17 ஆகஸ்ட், 2017

குறையும் மின் கட்டணம், பவர் பங்குகளில் கவனம் தேவை

இரு வருடங்கள் முன்பு வரை மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு இருந்தோம்.


ஆனால் சூரிய ஒளி புண்ணியத்தால் இந்த நிலை விரைவில் மாற இருக்கிறது.



முன்பு தமிழக அரசு அடானி நிறுவனத்துடன் ஒரு யூனிட் ஏழு ரூபாய் அளவுக்கு வாங்கி இருந்தது.

ஆனால் அதன் பின் காலத்தில் சோலார் மின் துறை உபகரணங்களில் புதிய தொழில் நுட்பங்கள் வந்த பிறகு மின் கட்டணம் பாதிக்கும் கீழே வந்து விட்டது.

அதிக அளவில் சோலார் மின்சாரம் உபயோகிப்பு, பல நிறுவனங்களின் கடுமையான போட்டி போன்றவை சூர்ய மின்சாரத்தை 2.5 ரூபாய் என்ற நிலைக்கு இறக்கி விட்டது.

இவ்வளவு கீழ் நிலைக்கு சென்றதால் ஜெர்மன் தொழில் நுட்பங்கள் மாறி சீனாவின் ஆதிக்கம் கூட அதிகமாகி விட்டது. இதனால் சோலார் துறை உற்பத்தியில் இருக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் பாதிப்பு தான்.

இப்படி சூரிய ஒளி ஏற்படுத்திய மாற்றம் அடுத்த நிலையில்    காற்றாலைகளுக்கும் பரவி விட்டது.

ஏற்கனவே காற்று மின்சாரம் யூனிட் விலை 4.5 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது சோலார் ஏற்படுத்திய அதிர்வலையில் காற்றாலை நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை கடுமையாக குறைக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

இதனால் அரசு மின்சார வாரியங்கள் காற்றலை மின்சாரத்திற்கு 3.5 ரூபாய் தான் தருவோம் என்று ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களை கூட மாற்ற ஆரம்பித்துள்ளன.

அதில் பல நிறுவனங்கள் உடன்படாததால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள கதையும் நடந்துள்ளது.

இதனால் சுஸ்லான், ஐனாக்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த சூர்ய புரட்சி நிலக்கரி, நீர் மின்சாரங்களையும் விட்டு வைக்கவில்லை.

நிலக்கரி விலை குறைவு என்றாலும், அதன் போக்குவரத்து செலவுகள் என்பது அதிகம் பிடிப்பதால் அதன் தேவை குறைந்து வருகிறது. இது தவிர, காற்று மாசுபடுதலை தடுப்பதற்காக உலக நாடுகள் நிலக்கரி எரி மின்சாரத்திற்கு தடை செய்ய ஆரம்பித்து உள்ளது. இதனால் NTPC போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி பெரிய அளவில் கேள்விக்குறியே.

அடுத்து, நீர் மின்சாரத்தை பார்த்தால் பருவ மழை ஏற்கனவே பொய்த்து உள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததால் Jeypee போன்ற நிறுவனங்கள் கடுமையான நிதி சிக்கல்களில் மாட்டி உள்ளன.

இவ்வாறு பல முனைகளில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகம் இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது.

இதனால் பவர் பங்குகளை தவிர்ப்பது தற்போது நல்லது!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: