செவ்வாய், 18 ஜூன், 2019

கார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்?

தற்போதைய சந்தையின் சரிவிற்கு மிக முக்கிய காரணமாக சுட்டிக் காண்பிப்பது பொருளாதார தேக்கம்.


அதிலும் நான்கு, இரண்டு சக்கர வாகனங்களில் பத்து வருடங்களில் இல்லாத அளவு ஒரு தேக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை தேக்கம் என்று சொல்வதை விட, வாடிக்கையாளர்களின் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்று சொல்லலாம்.

உதாரணத்திற்கு தற்போது சிட்டியில் கார் வாங்கும் ஒருவர் யோசிப்பது.

ட்ராபிக்கில் எப்படி வண்டி ஓட்டுவது? அப்படியே புதிய இடத்திற்கு சென்றாலும் எங்கு வண்டியை பார்க் செய்வது? என்பது தான்.


அதிகரிக்கும் பெட்ரோல், டீஸல் விலையில் எலெக்ட்ரிக் காருக்கு மாறலாமா? என்பது போன்ற யோசனைகள் தான்.

இந்த தடுமாற்றத்திற்கு இடையே வந்த ஒலா, உபர் போன்ற வாடகை கார் பயண நிறுவனங்கள் முன்பை விட மலிவாக பயண செலவை குறைத்துள்ளன.

அப்படி, என்றால் புதிய காரை ஏன் வாங்குவது? போன்ற வாடிக்கையாளர்களின் மாற்றங்களை நமது வாகன உற்பத்தி நிறுவனங்கள் முன்பே கவனிக்க தவறி விட்டது போல் தான் தெரிகிறது.

அதன் விளைவு தான் தற்போது வெளிநாடுகளில் உள்ளது போல் கார்களை லீசுக்கு விடும் திட்டம்.

தற்போது Hyundai Elite i20 என்ற புதிய காரை வாங்க வேண்டும். அந்த வாடிக்கையாளர் ஐந்து வருட வங்கி கடனுக்கு செல்வதாக எடுத்துக் கொண்டால்,

காரின் விலை ஆறு லட்ச ரூபாய் ஆகும்.

அதில் அவர் 1.22 லட்ச ரூபாயை முதலில் Down Payment என்று கட்ட வேண்டும்.

இது போக, 10% வட்டியில் EMI கட்டினால் மாதத்திற்கு 11,000 ரூபாய் கட்ட வேண்டும்.

அப்படி என்றால், மொத்த செலவு 780000 ஆயிரம் மொத்த பணத்தை ஐந்து ஆண்டுகளுக்கு கட்டி இருப்பார்.

அதே காரை ஐந்து வருடங்களுக்கு பிறகு 30% தேய்மானம் என்ற அடிப்படையில் விற்றால் 3.4 லட்சம் கிடைத்து இருக்கும்.

அவருக்கு மொத்த செலவு 4.40 லட்சம்.

இப்பொழுது Hyundai நிறுவனம் இதே காரை ஐந்து வருட குத்தகைக்கு நமக்கு தருகிறது.

மாதந்தோறும் 9813 ரூபாய் வாடகை கட்ட வேண்டும்.

ஐந்து வருடங்களில் 588000 கட்டி இருப்போம்.

காரை சொந்தமாக வாங்கியதை விட 1.4 லட்சம் அதிகம்.

ஆனால் இங்கு Maintenance, Insurance போன்ற எல்லாவற்றையும் நிறுவனமே பார்த்துக் கொள்ளும்.

அதற்கு Down Payment எதுவும் இல்லை.

இரண்டு, மூன்று  வருடங்களில் இன்னொரு புதிய மாடலுக்கு மாற வேண்டும் என்றால் மாறிக் கொள்ள முடியும்.

ஆனால் கார் என்பது நமக்கு சொந்தம் இல்லை.

ஆக, இதில் லாபம் என்று பார்ப்பதை விட தேவையின் அடிப்படையில் செல்வதாக இருந்தால் இந்த குத்தகை முறை பல பேருக்கும் பொருந்தும்.

உலக அளவில் 30% கார் சந்தையானது இப்படி தான் இயங்குகிறது. ஆனால் நம் நாட்டில் வெறும் ஒரு சதவீதம் தான் லீசில் போகிறது.

இது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில்,  ஆட்டோ நிறுவனங்களின் தற்போதைய சரிவு என்பது கொஞ்சம் சமாளிக்க வாய்ப்பு இருக்கிறது.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக