திங்கள், 17 ஜூன், 2019

முன்சுவடுகள் - புத்தக விமர்சனம்

பொதுவாக எமது சொந்த ஊர் கன்னியாகுமரியில் பேசுவது தமிழா, மலையாளமா? என்று தெரியாது.


நாம் கொரியாவிற்கு புதிதாக சென்ற போது எமது பேச்சு நண்பர்களால் கேலிப்பேச்சானதும் நினைவிற்கு வருகிறது. வெங்காயத்தை உள்ளி என்று சொல்வதை இன்னும் எம்மால் மறக்க முடியவில்லை.
ஆனால் அங்கு தமிழ் எழுத்தாளர்களுக்கு பஞ்சமே இருக்காது.

சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், க்ரூஸ் என்று பிரபல எழுத்தாளர்கள் அதிகம். அதில் இருவர் சாகித்ய அகாடமி விருது கூட வாங்கி இருக்கிறார்கள்.

கேரளாவுடன் இருந்ததால் என்னவோ, கலையுணர்வும் அது தொடர்பான தர்க்கங்களும் அதிகமாவே இருக்கும்.

தர்க்கம் என்றால் எத்தகைய எல்லைக்கும் செல்லும் என்பதற்கு நேற்று முன்தினம் ஜெயமோகன் புளித்த இட்லி மாவிற்காக வாங்கிய அடியே உதாரணம்.


தேதி கடந்த இட்லி மாவை விற்ற கடைக்காரர் மீது குற்றமா? அல்லது ஜெயமோகன் ஏதாவது பேசி வாங்கி கிட்டாரா? என்பது அவர் அடுத்து 'புளித்த மாவு' அல்லது 'மாவுக்கட்டு' என்று புத்தகம் எழுதினால் தான் தெரியும்.

கடந்த சில மாதங்களாக நாஞ்சில் நாடன், ஜெயமோகன் புத்தங்களை படிக்கலாம் என்று தொடர்ந்தோம். கொஞ்சம் மண்வாசனை அதிகமாக இருப்பதால் தனிப்பட்ட விருப்பங்களும் அதிகமாகவே இருந்தது.

அதில் ஒன்று, ஜெயமோகன் எழுதிய 'முன்சுவடுகள்' என்ற புத்தகம்.

இது நாம் முன்பு சொன்னது போல், எமது மண்வாசனை தொடர்பான புத்தகம் அல்ல.

சில வரலாறுகளின் தொகுப்பு என்று சொல்லலாம். ஆனால் பெரும்பாலானவை தெரியாத வரலாறுகள்.

நேரு, இந்திரா காந்தி, எம்ஜிஆர், திருவிக என்று பல தலைவர்களின் மீடியா மூலம் தெரியாத பல நிகழ்வுகளும் இருக்கிறது.

அதிலும் நேருவின் உதவியாளர் என்று ஒருவர் எழுதிய புத்தகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட குறிப்புகள் இது வரை அறிந்து இராதவை.

ஆனால் தலைவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. எல்லாமே எவரோ ஒருவரால் பிரதி எடுக்கப்பட்டு விடுகிறதும் கடினமான விடயம் தான்.

தமிழ்நாடு அரசு பாடப்புத்தங்கள் உட்பட பல புத்தகங்களில் தலைவர்களை ஒன்று ஒரே அடியாக புகழ்ந்து இருப்பார்கள். அல்லது கிழித்து இருப்பார்கள்.

அப்படி மிகைப்படுத்தப்பட்டதாக இல்லாமல் இருப்பதால் உண்மைதனத்தையும் அறிய முடிகிறது.

இது போக, நிறைய கேரளாவில் நடந்த புரட்சிகர நிகழ்வுகளும் வருகின்றன. சில, இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்றும் தோன்ற வைக்கிறது.

ஜெயமோகனின் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் தமது கருத்தையும் முன் வைக்கிறார்.

இட்லி மாவு நிகழ்வை மறந்து ஒரு முறை படிக்கலாம்:)

அமேசான் இணைப்பு - முன்சுவடுகள் புத்தகம்

அடுத்து, ஜெயமோகனின் புல்வெளி தேசத்தையும் படித்து வருகிறோம். இன்னொரு பதிவில் காணலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: