ஞாயிறு, 14 ஜூன், 2020

கொரோனா இரண்டாவது அலைக்கு பயப்படும் சந்தை

தற்போது பங்குசந்தையானது 10100 புள்ளிகளில் தடுமாறி கொண்டிருக்கிறது.இது 100 நாள் சாராசரியில் இயங்கி கொண்டிருக்கும் இது ஒரு முக்கியமான தடை புள்ளி ஆகும்.

இதனை தாண்டி மேலே செல்ல வேண்டுமானால் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.



இது வரை அனுமானங்களில் தான் சந்தை மேலே உயர்ந்து உள்ளது. அதாவது எப்படியும் மீண்டு விடும் என்ற நம்பிக்கை சில முதலீட்டாளர்களிடம் இருப்பது. 

ஆனால் மற்ற பெரும்பான்மை முதலீட்டாளரார்கள் சந்தைக்குள் வர வேண்டும் என்றால் வெறும் நம்பிக்கை என்பதையும் தாண்டி சில நம்பிக்கை தரும் நிகழ்வுகளும் நடக்க வேண்டும்.

அதாவது  கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைதல் மற்றும் பொருளாதாரங்களில் ஏற்படும் நேர்மறை மாற்றங்கள் போன்றவையே இனி முக்கியமான காரணிகளாக இருக்க முடியும்.

கடந்த வெள்ளியன்று சந்தை சில மணி நேரங்களில் நான்கு சதவீத அளவு கீழே சரிந்தது. அதன் பிறகு மீண்டு விட்டது.

சரிவிற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்க்கப்பட்டது என்றால் கொரோனா இரண்டாவது அலை வந்து விடுமோ என்ற பயம் தான்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 30,000 பேர் கொரோனா நோயாளிகள் சேர்ந்து கொண்டிருந்தனர். அது படிப்படியாக குறைந்து 20,000 என்ற நிலைக்கு வந்து விட்டது. 

ஆனால் கறுப்பின இனவாதம் தொடர்பான போராட்டங்கள் சமூக இடைவெளியை குறைத்து விட்டதால் நியூயார்க் நகரில் மீண்டும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

இது தான் பங்குசந்தையில் கொரோனா இரண்டாவது அலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால் உலக அளவில் சந்தைகளும் சரிந்தது. அது இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. 

இந்தியாவை பொறுத்தவரை இன்னும் முதல் அலையில் தான் இருக்கிறோம். மற்ற எல்லா நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை குறையும் போது தான் லாக்-டவுன் திரும்ப பெறப்பட்டது. ஆனால் இந்தியாவில் உச்சத்தை தொடுவதற்கு முன்னரே லாக்-டவுன் விதிகள் தளர்த்தப்பட்டன. டேட்டாவை வைத்து பார்த்தால் நாம் இன்னும் உச்சத்தை கூட எட்டவில்லை.

இந்தியா போன்ற வளரும் நாட்டில் வேறு வழியில்லை. இதற்கு மேல் சென்றால் கொரோனாவை விட பொருளாதார வறுமையால், மன அழுத்தத்தால் அதிக இழப்பு வந்து விடுமோ என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் பொது வெளியில் பார்க்கும் போது தனி மனிதர் விலகல் என்பது அரிதாக தான் காண முடிந்தது. லாக்-டவுன் முடிந்ததால் கொரோனாவும் முடிந்து விட்டது என்று மக்கள் எண்ணுகிறார்கள் போல.

NOMURA என்ற ஜப்பானிய நிறுவனத்தின் கணிப்பில் கொரோனா இரண்டாவது அலை என்ற ஒன்று வந்தால் இந்தியா Danger Zoneல் இருக்கும் என்று கணித்துள்ளார்கள். மேல் உள்ள படத்தில் அதனை காணலாம் . இது உண்மையானால் தெற்கு ஆசிய நாடுகள் தான் மைய புள்ளியாக இருக்க முடியும். அப்படித் தான் கள நிலவரமும் உள்ளது.

மோடி நேற்று சுகாதார துறை செயலாளர்களை அழைத்து பேசும் போது எமெர்ஜென்ஸிக்கு தயாராக இருங்கள் என்று சொல்லியுள்ளார். அதாவது மருத்துவமனைகளில் மற்ற நாடுகளில் ஏற்பட்டது போல் தட்டுப்பாடு வருமோ என்ற அச்சமும் ஒரு காரணம்.

இப்படி வரிசை கட்டி நிற்கும் காரணங்கள் 100 நாள் சாராசரியில் இருந்து மேலே சந்தையை எடுத்து செல்ல எளிதில் விடாது. அதனால் கவனமாக முதலீடு செய்வதும் அவசியமாகிறது.

தொடர்பான பதிவு.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக