வியாழன், 20 செப்டம்பர், 2018

பரோடா வங்கியுடன் இணைப்பு, யாருக்கு பலன்?

நேற்று முன்தினம் மத்திய அரசு சில வங்கி இணைப்புகளை அறிவித்தது. நீண்ட நாளாகவே எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நடந்து விட்டது.


விளைவு எப்படி இருக்கும் என்பதையும் பார்ப்போம்.



தற்போது பரோடா வங்கியுடன் தேனா வங்கி, விஜயா வங்கி போன்றவை இணைக்கப்பட உள்ளன.

முதலில் தேனா வங்கியில் இருந்து ஆரம்பிக்கலாம். அவர்கள் பரோடா வங்கி விரும்பாவிட்டாலும் தான் இந்த இணைப்பிற்கும் முக்கிய காரணம்.

மத்திய அரசு வங்கிகளிலே மிக மட்டமாக செயல்படும் வங்கிகள் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தேனா வங்கிகளை குறிப்பிடலாம்.

இவற்றின் NPA என்று சொல்லப்படும் வாராக் கடன்கள் அபாய கட்டத்தை தாண்டி அதிகமாக சென்று விட்டது.

இதில் தேனா வங்கியின் நிகர NPA 11% ஆகும். இவ்வாறு வாராக் கடன்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் கடந்த இரு நிதி ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி நஷ்டத்தை காட்டியது.

புதிதாக கடன் கொடுக்க வேண்டும் என்றால் கூட பணம் இல்லை. அதற்கு மத்திய அரசு கடந்த வருடம் நிதி உதவி கொடுத்து பார்த்தது.

ஆனாலும் நிலைமை எல்லை மீறி செல்வதால் நஷ்டம் நின்ற பாடில்லை.

அதனால் மத்திய அரசு இனி பணத்தை கொடுத்து வீணாக்க வேண்டாம் என்று முடிவு செய்து மற்றொரு வழியை தேர்ந்தெடுத்தது.

அதில் ஒரு வழி தான். நன்றாக சென்று கொண்டிருக்கும் ஒரு பெரிய வங்கியின் தலையில் கட்டி விடுவது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெரிய வங்கி Bank Of Baroda.

இவர்களது NPA 5% அளவு தான். அந்த அளவு நிதி நிலைமை நன்றாக இருந்தது.

அதனால் மத்திய அரசு தேனா வங்கியை பரோடா வங்கியுடன் இணைத்துக் கொள்ளுமாறு கூறியது.

அதற்கு பரோடா வங்கி இந்த இணைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பதிலளித்து விட்டது.

இனி என்ன செய்யலாம் என்று யோசித்த மத்திய அரசு ஒரு நோஞ்சானுடன் இன்னொரு பயில்வானை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு விட்டது.

அது தான் விஜயா வங்கி.

கர்ந்டாகாவில் விவசாயிகள் மற்றும் கிராம புறங்களில் இருக்கும் வங்கி நிறுவனம். அதிக அளவு சிறிய விவசாய போன்ற கடன்கள் கொடுத்து இருப்பதால் அதிக அளவு வாராக் கடன்கள் இல்லை.

விஜயா வங்கியின் NPA 4% அளவு தான்.

அதனால் விஜயா வங்கியுடன் தேனா வங்கியை இணைத்து கொள்ள பரோடா வங்கி சம்மதித்து விட்டது.

பங்குதாரராக பார்த்தால் தேனா வங்கி பங்கு வைத்து இருப்பவர்களுக்கு இந்த இணைப்பு லாபம். நேற்று மட்டும் இந்த பங்கு 20% அளவு உயர்ந்ததை காண முடிந்தது.

அதே நேரத்தில் தேனா வங்கியை தூக்கி சுமைக்கும் பரோடா, விஜயா வங்கிகளுக்கு இது நஷ்டம் தான்.

அதனால் பரோடா மற்றும் விஜயா வங்கிகளுக்கு இந்த இணைப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை.

விஜயா வங்கி தன்னுடன் சேர்வதால் பரோடா வங்கிக்கு தென்னகத்தில் அதிக கிளைகள் மற்றும் சந்தை கிடைக்க வாய்ப்புள்ளது.

அரசுக்கு இனியும் தேனா வங்கிக்கு நிதி உதவி அளிக்க வேண்டாம் என்பதும் ஒரு நிம்மதி.

கேயாஸ் தியரி என்பது இது தான். தேனா வங்கியில் சிலர் செய்த தவறுகளுக்கு ஒன்றும் அறியாத மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மொத்தத்தில், இந்த மூன்று வங்கிகளிலும் பங்குகளை வைத்து இருக்காமல் இருப்பது நமக்கு நலம்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக