வியாழன், 6 செப்டம்பர், 2018

OYO ROOMS பிசினஸ் மாடல் எவ்வாறு இயங்குகிறது?

சுயதொழில் பற்றி கட்டுரைகள் எழுதி நீண்ட நாள் ஆகி விட்டது. அதனை மீண்டும் தொடர்கிறோம்.


இனி அவ்வப்போது ஏற்கனவே இருக்கும் சில நிறுவனங்களின் பிசினஸ் மாடலையும் அடிக்கடி எழுதுகிறோம்.



புதிய ஐடியாக்களை வைத்து ஸ்டார்ட் அப் தொடங்குபவர்களுக்கு இது பெரிதும் உதவலாம்.

21 வயதில் ஒருவர் தனது சுய வியாபரம் மூலம் பல நூறு  கோடிகளுக்கு அதிபதி ஆகுகிறார். அவர் தான் OYO ROOMS நிறுவனத்தின் நிறுவனர் Ritesh Agarwal.

அவரிடம் இருந்த ஒரு வித்தியாசமான ஐடியாவே அதற்கு முதற்காரணம்.

ஒரு வருடத்திற்கு முன் தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்ற போது OYO வழியாக தான் ஹோட்டல் அறைகள் எடுத்து இருந்தோம்.

அப்போது OYO Rooms என்பது goibibo போல் ஹோட்டல் புக் செய்ய உதவும் மற்றொரு இனையதளம் என்று தான் நினைத்து இருந்தோம்.

அதன் பிறகு வந்த செய்திகளில் OYO Rooms சீனா போன்று மற்ற நாடுகளுக்கும் விரிவாக்குகிறார்கள். பெரிய முதலீட்டு நிதி நிறுவனமான SoftBank நிறுவனமும் அதிக அளவில் முதலீடு செய்ய முன் வந்தது.

என்ன என்று சில விவரங்களை திரட்டினால் கொஞ்சம் வித்தியாசமான முயற்சியாகவே பார்க்க முடிந்தது.

எப்படி என்றால்,

நாம் ஒரு சிறிய தாங்கும் விடுதி ஹோட்டல் நடத்தி வருவதாக கருதுவோம்.

சிறிய விடுதி என்பதால் மார்கெடிங் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை.

பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாததால் அறைகள் நிரம்புவது என்பது ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். அதனால் நஷ்டமும் அதிகமாக இருக்கும்.

அதே நேரத்தில் ஆன்லைனில் ஒரு வாடிகையாளர் நமது ஹோட்டல் அறைகளை புக் செய்தவதாக நினைத்தால் அவருக்கும் 'தெரியாத ஒரு சிறிய விடுதி, எப்படி இருக்குமோ?' என்ற பயம் இருக்கும்.

இந்த இரண்டு முனைகளையும் இணைக்கும் ஒரு பாலமாக தான்  OYO Rooms இருக்கிறது.

ஹோட்டல் உரிமையாளர் என்ற முறையில் நம்மிடம் இருக்கும் சில அறைகளை OYO Rooms ஒரு நீண்ட குத்தகை முறையில் எடுத்துக் கொள்வார்கள்.

இதனால் மினிமம் க்யாரண்டி என்பது ஹோட்டல் நடத்துபவருக்கு கிடைத்து விடும்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு அந்த அறையின் உள் அலங்காரம் மற்றும் வசதிகளை மாற்றிக் கொள்வார்கள்.

அவ்வாறு மாற்றும் செலவை ஹோட்டல் உரிமையாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு OYO Rooms என்பதற்கு சில குறைந்தபட்ச விதி முறைகள் உள்ளன.

அதனை ஹோட்டல் நடத்துபவர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டி வரும்.

உதாரனத்திற்கு காலை ஏழு மணிக்குள் பிரேக்பாஸ்ட் சாப்பாடு கொடுக்க வேண்டும். சூடாக இருக்க வேண்டும் என்பன போன்ற விதி முறைகள்.

இதை மீறும் போது காண்ட்ராக்ட் கூட பாதிக்கப்படலாம்.

இவ்வளவு குறைந்த பட்ச வசதிகளும் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு எல்லா OYO அறைகளிலும் ஒரு வித தரம் இருக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது.

கிட்டத்தட்ட OLA, UBER போல் இதுவும் Aggregator மாடல் தான்.

'ஓட்டுனர்கள் மீதான பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பு' என்பதை OLA, UBER நிறுவனங்கள் எடுத்துக் கொள்வது போல் ஹோட்டல் அறை தரத்தின் பொறுப்பை OYO எடுத்துக் கொள்கிறது.

ஆனால் goibio போன்ற பிற தளங்களில் இவை உறுதி செய்யப்படுவதில்லை. அவற்றை புக்கிங் செய்யும் தளமாகத்  தான் கருத வேண்டியுள்ளது.

அதே போல் மார்கெட்டிங் செய்யப்படும் போதும் ஒவ்வொரு அறைக்கும் Oyo Rooms + ஒரு குறியீடு என்ற அளவில் விளம்பரம் செய்யப்படும். ஹோட்டல் பெயர், தொடர்பு எண் போன்றவை இருக்காது. புக்கிங் செய்த பிறகு தான் பகிரப்படும்.

இதனால் வாடிகையாளர்கள் நேரடியாக ஹோட்டல் உரிமையாளர்களை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளும் குறைந்து விடுகிறது.

பாதுகாப்பு பிரச்சினை உள்ள இந்தியா போன்ற நாடுகளில்  Oyo Rooms தேவைக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதும் வெற்றிக்கு முக்கிய காரணம்.

தற்போது Home Stay போன்றவற்றிற்கு கூட Oyo Rooms வந்து விட்டது.

அதனால் முக்கிய நகரங்கள் அல்லது சுற்றுலா தலங்களில் உங்கள் வீடுகள் காலியாக இருப்பின் கூட இதில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது!

தொடர்பான பதிவுகள்:
பெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது?



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக