ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

சந்தையின் உயர்விற்கு தோள் கொடுக்கும் ஜிடிபி எழுச்சி

தற்போது ஒவ்வொரு நாளும் இந்திய சந்தைகள் உயரும் போது எப்பொழுது இறங்கி விடுமோ என்ற ஒரு வித பயம் ஏற்படுகிறது.

கச்சா எண்ணெய், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அந்நிய செலாவணி பற்றாகுறை என்று பல விடயங்கள் ஒரு பக்கம் தாக்க ஆரம்பித்து இருக்கிறது.



மேலே உள்ள எதுவும் சில நாட்கள் மட்டும் வந்து போவதில்லை. குறைந்த பட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளாவது நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து வரும் தேர்தல்களில் கூட சந்தை பிஜேபியை எதிர்பார்க்கிறது. ஆனால் தற்போதுள்ள அளவு நிலை வருமா? என்பதிலும் பலத்த சந்தேகம் இருக்கிறது.


இதனால் இந்த உயர்வுகளை ஒரு தற்காலிகமான ஒன்றாகத் தான் பார்க்க நேரிடுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் வந்த சில புள்ளி விவரங்கள் சந்தையின் உயர்வை மேலும் சில வர்த்தக தினங்களுக்கு காப்பாற்றும் என்று நம்பலாம்.

கடந்த காலாண்டு வந்த ஜிடிபி தரவுகள் யாரும் எதிர்பாராதது என்றே சொல்லலாம்.

பன்னாட்டு முதல் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வரை அனைத்தும் இந்திய ஜிடிபி வளர்ச்சி 7.5% என்பதன அருகில் தான் இருக்கும் என்று கணித்து இருந்தார்கள்.

ஆனால் புதிய தரவுகள் படி, கடந்த காலாண்டு 8.2% அளவு ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளது.

அதிலும் வளர்ச்சி விவசாயம் மற்றும் உற்பத்தி துறைகளில் அதிகம் காணப்பட்டுள்ளது.

இந்த துறைகள் தான் அதிக வேலை வாய்ப்பு வழங்கும் துறைகள்.

வேலை வாய்ப்பு தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வரும் மோடியின் அரசுக்கு 'இது' அடுத்த தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ள சாதகமான அம்சமாகும்.

அடுத்து,

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் வர்த்தக பற்றாகுறை போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கி கையிருப்பு குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் பணத்தை உள்ளே செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதனால் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் டாலர் கையிருப்பு சிறிது கூடி இன்னும் 400 பில்லியன் டாலருக்கு மேல் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதனால் ரூபாய் மதிப்பு 71க்கு கீழ் வீழ்ந்தது கூட பெரிதாக பேசப்படவில்லை.

நாளை சந்தையில் இந்த நேர்மறை காரணிகள் எதிரொலிக்கலாம். அதனால் சந்தை சிறிது உயர்வைக் காணலாம்.

ஆனால் சந்தை ஏற்கனவே அதிக அளவு உயர்ந்து விட்டால் புதிய உயர்வுகள் என்பது தற்காலிகமான ஒன்றாகவே இருக்கலாம்.

அதே போல் இந்த ஜிடிபி வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதும் சவாலான ஒன்று. இந்த மகிழ்ச்சி தொடர்ந்து தக்க வைக்கப்படுமாயின் நீண்ட கால முதலீட்டிற்கு வீழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக