சனி, 8 செப்டம்பர், 2018

ஏன் நுகர்வோர் பங்குகள் வீழ்கின்றன?

கடந்த வாரத்தில் FMCG பங்குகளின் விலை பத்து சதவீதம் வரை வீழ்ந்துள்ளது.


நண்பர் ராஜா அவர்களும் இது தொடர்பான கேள்வியினை கேட்டு இருந்தார். அதனால் விவரமாக பார்ப்போம்.நாம் ஐந்து வருடங்களுக்கு முன்பு கொடுத்த இலவச பங்கு போர்ட்போலியோவில் Britannia பங்கினை பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க: Revmuthal மாதிரி போர்ட்போலியோ

பரிந்துரை செய்யும் போது ஒரு பங்கின் விலை 750 ரூபாய் தான். அப்பொழுது P/E மதிப்பு 35 என்ற அளவிலே இருந்தது.

இருக்கிற FMCG பங்குகளிலே பிரிட்டானியா தான் மலிவாக இருந்தது. மேலும் வளர்ச்சியும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப பிரிட்டானியா லாபமும் வருடத்திற்கு 40%க்கும் மேலே கூடி வந்தது.


அதனால் பங்கு விலையும் 6000 ரூபாயை இந்த வருடம் தாண்டியது.

இந்த வருடம் என்றால் பிப்ரவரியிலே கடந்து விட்டது.

ஐந்து வருடமாக வைத்து இருந்தால் எட்டு முதல் ஒன்பது மடங்கு வரை முதலீடு ஏறி இருக்கும்.

தனிப்பட்ட முறையில் நாமும் அதில் முதலீடு செய்து இருந்தோம்.

ஆனால் 6000 ரூபாயை கடந்த போது P/E மதிப்பு என்பது 75 என்பதனை தாண்டி விட்டது.

இன்னும் வளர்ச்சி மீதி இருக்கிறது. ஆனால் பங்கு விலை இவ்வளவு கூடி விட்ட பிறகு Saturation நிலையை அடைந்து விட்டதால் இனி நிறுவன வளர்ச்சி இருக்கலாம். ஆனால் பங்கின் விலை கூடுவதற்கு வாய்ப்பல்ல என்பதால்  அப்பொழுதே விற்று விட்டோம்.

இதே மதிப்பீடல் காரணம் தான் கடந்த வாரமும் பெரும்பாலான நுகர்வோர் பங்குகளிலும் எதிரொலித்து உள்ளது. மற்றபடி, நிறுவனங்கள் தொடர்பாக எந்த வித எதிர்மறை செய்திகளும் இல்லை.

இது போக, சந்தை வெளியுலக காரணிகளால் ஒரு வித பதற்றமான நிலையிலே உள்ளது.

இந்த நிலையில் ம்யூச்சல் பண்ட்கள் உட்பட பலவும் பாதுகாப்பு கருதி நுகர்வோர் பங்குகளில் அதிகம் முதலீடு செய்து வருகின்றன.

அதனால் அதிக அளவு பணம் அந்த பங்குகளில் உள்ளே புக, பங்குகளின் மதிப்பீடு என்பது உச்சக்கட்டத்தை தோற்று விட்டது.

நிப்டி இந்த வருடத்தில் 11% அளவு உயர்ந்துள்ளது என்றால் FMCG பங்குகள் 23% அளவு உயர்ந்து விட்டன.

உதாரணத்திற்கு, உலக அளவில் அமேசான் நிறுவனம் அடுத்த சில வருடங்களில் இன்னும் கணிசமான வளர்ச்சியை எதிர்பார்க்கிறது.

அதனால் அமேசான் பங்கிற்கு கணிசமான அளவு ப்ரீமியம் கொடுக்கப்படுகிறது.

அதனை விடவும் நமது நுகர்வோர் பங்குகளான Britannia, HUL போன்றவை அதிக ப்ரீமியத்தில் வர்தகமாகிக் கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தங்கமாக இருந்தாலும் கற்பனைக்கு மிஞ்சிய உயரிய மதிப்பை யாரும் கொடுக்க தயாராக இல்லாதது தான் கடந்த வார நுகர்வோர் பங்குகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லலாம்.

ஆனால் இன்னும் ஒரு ஐந்து முதல் பத்து சதவீதம் வீழ்ந்தால் நுகர்வோர் பங்குகள் ஓரளவு மலிவாகவும் வாய்ப்புகள் உள்ளது என்பதையும் கவனிக்கவும்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக