ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

சென்செக்ஸின் 1500 புள்ளிகள் சரிவிற்கு காரணம் என்ன?

நேற்று முன்தினம் வெள்ளியன்று சந்தையை முழுமையாக பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு மாரடைப்பே வந்து இருக்கலாம்.


சில மணித்துளிகள் என்ன நடக்குதென்றே புரியவில்லை.நண்பர்களிடம் இருந்து எமக்கும் whatsapp வழியாக அதிக கேள்விகள்.

எமக்கும் காரணம் புரியவில்லை. தேடினாலும் சரியான காரணங்கள் கிடைக்கவில்லை.

ஆனால் சந்தை சீட்டுக் கட்டு போல் சரிவதை பார்த்த பிறகு பிற வேலைகள் செய்வதில் தடங்கல்கள் ஏற்பட்டதால் அப்படியே விட்டு விடுவோம் என்று அந்த இரண்டு மணி நேரமும் சந்தை பக்கம் வரவே இல்லை.


மதியம் காரணத்தை தேடி பார்த்தால் பாதிக் காரணங்கள் வதந்திகளின் தாக்கமே என்று புரிந்தது.

இனி காரணத்தை பார்போம்.

ILFS என்றதொரு நிறுவனம்.

கடந்த இரு வாரங்களாக செய்திகளில் பேசப்பட்டு வரும் நிறுவனம்.

கட்டுமானத் தொழிலில் அதிக அளவு ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் நிதி பிரிவு ILFS Finance.

முழுக்க, ILFS குழும நிறுவனங்களுக்கே கடன் அளித்து வருகிறது.

ஆகஸ்ட் மாத இறுதி வரை நிதி ஆய்வு நிறுவனங்கள் இந்த நிறுவனத்திற்கு AA+ அளவு தரம் அளித்து இருந்தன.

ஆனால் திடீர் என்று இந்த மாதம் ILFS நிறுவனம் கடன் பத்திரங்களில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை.

இதனையடுத்து மேற்சொன்ன ஆய்வு நிறுவனங்கள் இந்த நிறுவனத்திற்கு D அளவு மோசமான தரத்திற்கு குறைத்து விட்டன.

அப்படி என்றால், ஒரு மாதத்திற்கு முன்னர் வரை இவர்கள் என்ன நிதி ஆய்வு செய்வார்கள் என்று தான் புரியவில்லை. இவர்களை நம்பினால் நாமும் அவ்வளவு தான் போல.

இதனால் ILFS நிறுவனத்திற்கு கடன் கொடுத்த மேலும் சில வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்றொரு செய்தி சந்தையில் ஒரு வாரமாக உலவி வந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று DSP Mutual Fund தங்களிடம் இருந்த DHFL நிதி நிறுவனத்தின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் பத்திரங்களை சந்தையில் விற்றது.

ஆனால் சந்தையில் உள்ளவர்கள் DHFL நிறுவனம் ILFS நிறுவனத்திற்கு கடன் கொடுத்து இருக்கும். அதனுடைய பாதிப்பால் தான் DSP Mutual Fund இப்படி மொத்தமாக விற்கிறார்கள் என்று கருதினார்கள்.

அதனால் DHFL நிறுவன பங்குகள் அடித்து துவைக்கப்பட்டன. 50%க்கும் மேல் வீழ்ந்தன.

இது DHFL மட்டுமல்லாமல் மற்ற வங்கி அல்லாத கடன் தரும் நிறுவனங்களையும் பாதித்தது.

இந்த நிதி நிறுவனங்களுக்கு Cost Of Borrowing என்ற ஒன்று இருக்கிறது. அது இந்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்தால் மேலும் அதிகரிக்கும். அதனால் லாபமும் பாதிக்கப்படலாம் என்பதும் ஒரு காரணம்.

இதனால் L&T Finace, LIC Finance என்று பல நல்ல நிதி நிறுவனங்களும் 15%க்கும் வீழ்ச்சி அடைந்தன.

அதன் பிறகு DHFL நிறுவன MD செய்திகளில் தங்களுக்கு ILFS நிறுவனத்திடம் எந்த கடன் உறவுகளும் கிடையாது என்று பேட்டியளித்த பிறகு தான் நிலைமை மாறியது.

அதோடு DSP ம்யூச்சல் தாங்கள் ILFS காரணத்திற்காக பத்திரங்களை விற்கவில்லை. Redemption தேவைக்காக தான் பத்திரங்களை விற்றோம் என்று பேட்டியளித்தனர்.

மொத்தத்தில் தவறான அணுகப்பட்ட ஒரு செய்தி சென்செக்ஸ் புள்ளிகளை ஒரு சில நிமிடங்களில் 1500 புள்ளிகளுக்கும் கீழே இழுத்து சென்றது.

இது போக, இன்னொரு காரணம்.

YES Bank நிறுவனருக்கு CEO பதவியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க சொல்லி RBIக்கு வேண்டுகோள் விடுத்தது இருந்தார்கள்.

ஆனால் அதனை RBI நிராகரித்து விட்டது. மேலும் ஆறு மாதங்களில் வேறு ஆளை பாருங்கள் என்று சொல்லி விட்டது.

இதனை YES Bank பங்குதாரர்கள் எதிரமறையாக எடுத்துக் கொள்ள அந்த பங்கும் 25% அளவு சரிந்தது.

ஒரு நிறுவனர் அளவுக்கு மற்றவர்களுக்கு அந்த வங்கியில் அவ்வளவு ஈடுபாடு இருக்குமா? என்ற சந்தேகமும் ஒரு காரணம்.

ஆனால் ஒரு தனி மனிதனால் தான் ஒரு நிறுவனம் இயந்குகிறது என்றால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யாமல் இருத்தலே சேமம்.

இதில் வெள்ளியன்று நிகழ்ந்த முதலீட்டாளர்கள் பார்வை தவறானது என்றே கருதுகிறோம்.

மேலும் இது முழுக்க YES Bank என்ற ஒரு தனிப்பட்ட பங்கு சமந்தப்பட்டது தான்.

அதனையும் மற்ற வங்கி பங்குகளுடன் சேர்த்து Bank Nifty புள்ளிகளை பாதாளத்தில் எடுத்து சென்றது.

மொத்தத்தில், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். அது தான் வெள்ளியன்று நடந்தது...மற்றபடி, பதற்றப்பட ஒன்றுமல்ல..


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக