வெள்ளி, 1 மே, 2020

நிச்சயமற்ற நிலையும், முதலீடுகளும்

நேற்று சந்தை மீண்டும் ஏற்றத்தை கண்டது. வாய்ப்பை விட்டு விட்டோம் என்று தோன்றி இருக்கலாம். அதனால் பல நண்பர்களிடம்  முதலீடு செய்யலாமா? என்ற கேள்வியை பார்க்க முடிந்தது.

இந்த வாரம் முழுவதும் சந்தை உயர்ந்தாலும் அதற்கான ஒரு நேர்மறை காரணியை உருப்படியாக சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனம்.



கச்சா எண்ணெய் விலை இந்த அளவிற்கு எதிர்மறை நிலையில் செல்லும் என்று யாரும் கனவில் கூட நினைத்து இருக்க முடியாது.


பல கம்மாடிட்டி வர்த்தக நிறுவனங்கள் தங்கள் மென்பொருளை கூட பூஜ்யத்திற்கு கீழே செல்லும் என்று கணித்து வடிவமைக்க வில்லை. அதில் அந்த நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய்கள் நஷ்டம் என்றும் செய்திகள் வருகின்றன.

தங்கத்தை லாக்கரில் வைப்பதற்கு நாம் பணம் கொடுப்பது போல் தான் இந்த நிகழ்வும்.

கொரோனா வந்து எல்லாமே சாத்தியம் என்பதை கண்ணில் காட்டி சென்று விட்டது.

கடந்த காலம் போல் மின்சாரம் இல்லாமல், எரிவாயு இல்லாமல், பெட்ரோல் இல்லாமல் என்று எல்லாவற்றிக்கும் தற்சார்பு பொருளாதார நிலையில் மனிதன் பழகிக் கொள்வதும்  அவசியமாகி விட்டது.

அரசு தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல இன்று அனுமதித்து உள்ளது. தொழிலார்கள் பார்வையில் நல்ல விடயம். ஆனால் இந்த தொழிலாளர்கள் சொந்த ஊரில் இருந்து திரும்பி வருவது என்பது கடினமான நிலை தான்.

கஷ்ட காலங்களில் சொந்த ஊரில் இருக்கும் தன்னம்பிக்கை என்பது வேறு தான். அவர்கள் சொந்த ஊரே போதும் என்று நினைத்து விட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் நிறுவனங்களுக்கு குறைந்த ஊதியத்தில் பணியாளர்கள் கிடைப்பது என்பது கடினம் தான்.

இன்று ஊரடங்கு மீண்டும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முழுமையாக பார்த்தால் இரண்டு மாதங்கள் ஊரடங்கிலே சென்று விட்டோம்.

இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு சென்றால் பொருளாதாரத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பு ஏற்படுவதாக கணிப்புகள் கூறுகிறது. இது வரை கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய் கோடி அளவிற்கு பாதிப்பு வந்து இருக்கலாம். இந்த சூழ்நிலையில் எந்த நம்பிக்கையை பங்குச்சந்தையை கண்டு விட்டது என்பதில் ஆயிரம் கேள்விகள் வரத் தான் செய்கின்றது.

பிரிட்டனில் பணியாளர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில்  80% அரசு தற்காலிகமாக வழங்குவதாக கூறி உள்ளது. அமெரிக்காவோ ஒவ்வொருவருக்கும் 90 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூடி உள்ளது. ஆனால் நமது அரசிடம் இருந்து இது வரை எந்த ஊக்க நிகழ்வும் இல்லை.

அபராதம் கட்டுவதை தவிர்க்கலாம் என்று மட்டும் சொல்லியுள்ளார்கள். கையில் காசு எதுவும் இல்லாவிட்டால் அபராதம் போடுவதும், போடாததும் அரசின் விருப்பம் என்று மக்கள் விட்டு விடுவார்கள்.

மக்களிடம் பணம் இருந்து செலவு செய்யாத வரை பொருளாதார மீட்பு நீட்சி என்பதும் மிக மெதுவாகவே இருக்கலாம்.

இது போக, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளின் உறவுகள் வரும் காலங்களில் பதற்ற நிலைக்கு கூட போகலாம். கொரோனாவிற்கு ஒரு பழி வாங்கல் என்பது கண்டிப்பாக இருக்கலாம்.

அப்படி இருக்கும் நிலையில் இது Recession என்ற நிலையும் தாண்டி Great Depression நிலைக்கு கூட செல்லலாம்.

அதனால் நிப்டியில் இன்னும் தாழ்வு நிலை என்பது அதிகமாக இருக்கலாம். வாரன் பப்பெட் கூட தன்னிடம் இருக்கும் பெருமளவு பணத்தை பணமாக தான் வைத்து உள்ளார்கள். இவ்வளவு இறங்கியும் கூட முதலீடு செய்யவில்லை.

அதனால் கவனமாக இருங்கள்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

  1. பொருளாதாரத்தைப் பற்றிய அறிவுதான் இன்றைக்கு முக்கியமானது. பொருளாதாரத்தைப் பற்றி தமிழில் சிறப்பாக எழுதிவரும் வலைதளங்களில் உங்களுடையது மிக முக்கியமானது. கடந்த ஓராண்டாக படித்து வருகிறேன். எனக்கு தெரிந்த அளவில் பேஸ்புக்கில் மூன்று அல்லது நான்கு பேர் பொருளாதாரத்தைப் தொடர்ந்து எழுதுகின்றனர். பேஸ்புக்கில் எழுதுவதைவிட இதுபோன்ற வலைதளங்களில் எழுதுவதுதான மிகச்சிறந்தது. காரணம் என்னவென்றால் இதுபோன்ற தளங்களில் தகவல்களை தேடி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பேஸ்புக்கில் தேடுதல் வேலை செய்யாது. அதோடு தேடுபொறிகளில் அந்ததகவல்கள் தேடும்போது காண்பிக்கப்படாது.

    தொடர்ந்து எழுதுங்கள். மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு