செவ்வாய், 7 ஜூலை, 2020

Kisan Credit Card - விவசாய கடன்களுக்கு மாற்று வழி

கிராமப்புறங்களில் தங்க நகைகளுக்கான விவசாய கடன் என்பது பிரபலமான ஒன்று.

தங்க நகையை ஈடாக வைத்து எளிதில் விவசாய கடன் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதற்கான வட்டியில் பகுதியை மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு அளித்து வந்தது. இதனால் வட்டியும் 4% என்ற அளவிலே இருந்தது. அதிக பட்சம் மூன்று லட்சம் வரை கடனாக பெற்று கொள்ளலாம். ஒரு வருடத்திற்குள் திருப்பி செலுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் அண்மையில் மத்திய அரசு இந்த கடனுக்கான மானியத்தை நீக்கி விட்டது. இதனால் வட்டி என்பது வழக்கமான கடன் போல மீண்டும் 8~9% அளவிற்கு சென்று விட்டது.

இதற்கு காரணம் என்று சொல்வதை பார்த்தால் எல்லோரும் இஷ்டத்திற்கு இந்த கடன் வசதியை பெறுகிறார்கள் என்பது தான். ஆனாலும் இந்த கடனில் நடுத்தர வர்க்கத்தினர் தான் பெரும்பாலும் பயன்படுகிறார்கள் என்பதால் இந்த திட்டத்தினை கொண்டு சென்று இருக்கலாம். 

3 லட்சம் ரூபாய் என்பது தான் உச்ச வரம்பு என்ற சூழ்நிலையில் பெரிய அளவு தவறுகள் காணுவதும் குறைவு தான். சிலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக முழுவதுமாக நீக்குவதை தவிர்த்து இருக்கலாம்.

அதற்கு பதிலாக Kisan Credit Card என்ற திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் முழுவதுமாக பிரபலமாகவில்லை.

ஆனாலும் இந்த லாக்-டவுன் சூழ்நிலையில் விவசாயிகளுக்கு பயன்படும் என்பதால் விரிவாக பார்ப்போம்.

இது கிட்டத்தட்ட Credit Card முறையை போன்றது. ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் கடன் அளவு கொடுக்கப்படும். அதில் 1.60 லட்ச ரூபாய் அடமானம் எதுவுமில்லாது கடன் கொடுக்கப்படும். அதற்கு மேல் செல்லும் போது விவசாய நிலம் அடமானமாக கருதப்படும். 

இந்த கடன் தொகையானது  வங்கி மேலாளரின் ஒப்புதலோடு மாறுபடும். இந்த பணமானது விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் அட்டையில் பணமாக ஏற்றப்படும். அதனை வைத்து விவசாய பணிகளை மேற்கொள்ளலாம்.  இது போக, EMI முறையிலும் பெற்ற கடனை திருப்பி செலுத்திக் கொள்ளலாம்.

மத்திய அரசு இந்த திட்டத்திற்கும் மானியமாக வட்டியை கொடுக்கிறது. இந்த வட்டியானது விண்ணப்பிக்கும் போது வட்டி 4% அளவு இருக்கும். ஒழுங்காக அந்த வரைமுறை காலத்திற்குள் செலுத்தி விட்டால் 3% அளவு தான் வட்டி வசூலிக்கப்படும். அதே நேரத்தில் நேரம் தவறி கட்டினால் வட்டி 7% அளவில் இருக்கும்.

அரசு அணைத்து வங்கிகளிலும் இந்த கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது. ஆனால் நடைமுறையில் வங்கிகளிடம் இருந்து பெரிய அளவு ஆதரவு இல்லை என்றே அறியப்படுகிறது. அதிக அளவில் தாமதம் ஏற்படுகிறது. 

ஒவ்வொரு வங்கியும் இஷ்டத்திற்கு வேறு வேறு நடைமுறைகளை வைத்துள்ளது என்பதும் பாதகமான விடயம். சில வங்கிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிலவற்றில் வங்கி கிளைகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும், வங்கிகளுக்கு ஏற்றவாறு வட்டியும் மாறுபடுகிறது என்பதையும் கவனிக்கவும்.

இந்த காலத்தில் மூன்று லட்ச ரூபாய் என்பது பெரிய தொகை இல்லை. அதற்கு பத்திரத்தை கொண்டு வைத்து தான் கடன் பெற வேண்டும் என்பதும் கடினமாக உள்ளது.

இதற்கு முந்தைய கடன் முறையே எளிதாக உள்ளது என்பது எமது கருத்து.  வேறு வழியில்லாத சூழ்நிலையில் இந்த கடனையும் ஒரு அவசரத்திற்கு அறிந்து வைத்து இருப்பது உதவும்.

இதில் பெரிதளவு நடைமுறை தகவல்களை பெற முடியவில்லை. நீங்கள் அனுபவம் பெற்று இருந்தால் கருத்துக்களை பகிருங்கள்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக