ஞாயிறு, 6 அக்டோபர், 2013

ரகுராம் ராஜன் அறிக்கை நியாயம் தானா?

கடந்த வாரம் RBI கவர்னர் ரகுராம் ராஜன் அவர்கள் தலைமயில் அமைக்கப்பட்ட ஒரு குழு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் ஒரு புதிய முறையை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி அவர்கள் மாநிலங்களை வளர்ச்சியின் அடிப்படையில் பிரித்துள்ளார்கள். பீகார், உத்திரப்ரதேசம் போன்ற சில மாநிலங்கள் மிக குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் என்றும், அடுத்து ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் குறைவான வளர்ச்சி அடைந்தவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன,


இறுதியாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்களாக கருதப்படும்.இதில் தமிழ்நாடு மிக வளர்ச்சி அடைந்த பிரிவில் இருப்பது மிக்க மகிழ்ச்சி கொடுக்கிறது.


வளர்ச்சி அடைந்த பட்டியலில் இடம் பெற்ற தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களைப் பார்த்தால் இயற்கையிலே நீர், சுரங்கம் என்று பல வளங்களை கொண்டவையாக உள்ளன.

ஆனால் மிகக் குறைவான வளங்கள் பெற்ற ஒரு மாநிலமான தமிழ்நாடு இந்த பட்டியலில் இருப்பது அந்த மாநில மக்களின் கடின உழைப்பும் ,திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்திய நமது மாநில அரசும் ஒரு வித முக்கிய காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.

நாம் சுதந்திரம் அடைந்த போது மக்கள் தொகை மட்டும் முக்கியமாக கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு பல நிதி குழுக்களின் பரிந்துரைகள் படி மாறி, மாறி இறுதியாக கோட்ஜே அறிக்கையின் படி கடந்த சில வருடங்களாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
கோட்ஜே அறிக்கையின் படி, ஒரு முக்கியமாக சாராம்சமாக சிறப்பு பிரிவின் கீழ் வரும் சில மாநிலங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அதிக நிதி ஒதுக்கும்.

இந்த சிறப்பு பிரிவின் கீழ் வரும் மாநிலங்கள் எல்லையோரம் இருக்க வேண்டும், மலைகள் சூழ இருக்கலாம், தொழில்கள் செய்ய ஏற்ற இடம் இல்லாமல் இருக்கலாம், வளங்கள் மிக குறைவாக இருக்கலாம் என்று ஏதேனும் விதிமுறைக்குள் வரும் படியாக இருக்க வேண்டும்.

அதனால் காஷ்மீர், அருணாச்சல் பிரதேஷ், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் இந்த பிரிவின் கீழ் வந்தன. இயற்கையே அவர்களால் ஒன்றும் மாற்றம் செய்திற முடியாததால் இது ஓரளவு ஏற்று கொள்ளத்தக்கதே.

ஆனால் ராஜன் அறிக்கை மேலும் சொல்கிறது. அதாவது 'சிறப்பு அந்தஸ்து' என்ற பிரிவின் கீழ் மிகவும் பின் தங்கிய  எல்லா மாநிலங்களையும் சேர்த்து  சேர்த்து மொத்த திட்ட நிதியில் குறைந்தபட்சம் 30% அளவு இந்த மாநிலங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட வேண்டும்.

இங்கு தான் எமது சில கருத்துகளை பகிர விரும்புகிறோம்.

ஏற்கனவே கோட்ஜே அறிக்கையின் படி பின் தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டு வருகிறது. இப்பொழுது இவர்கள் பின் தங்கிய மாநிலங்கள் அனைத்தையும் சிறப்பு பிரிவில் சேர்த்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய சொல்கிறார்கள்.

நாட்டின் மொத்த 28 மாநிலங்களில் 15 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்துக்கு உள்ளாக வரும் என்று தெரிகிறது. அதாவது நாட்டின் பாதி மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தில் இருக்கும்.

இந்த மற்ற மாநிலத்தவர் நிதி இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இப்படி பகிர்ந்து கொடுக்கப்படும் என்று தெரிய வில்லை. அவர்கள் முன்னேறும் வரை என்றால் எத்தனை ஆண்டுகளில் முன்னேறுவார்கள் என்று நேர நிர்ணயம் செய்யப்படவில்லை. இது வரை அதிகமாக கொடுக்கப்பட்ட நிதிக்கு பலன் கிடைத்ததா என்றால் அதற்கும் பதில் கிடையாது.

இந்த மாநிலங்கள் ஒன்றும் இயற்கையால் பாதிக்கப்பட்டவைகளோ அல்லது வளம் குறைந்த மாநிலங்களோ அல்ல. பீகார், உ.பி மாநிலங்களைப் பார்த்தால் இயற்கையிலே எங்கும் நீர் வளமும், விவசாயம் பண்ண ஏதுவான சமவெளியும் அதிகமாக உள்ள மாநிலங்கள். இருந்த இடத்தில் இருந்தபடி வாழ ஏற்ற மாநிலங்கள்.

ஆனால் இந்த மாநிலங்களில் தான் இடம் பெயர்வு அதிகமாக உள்ளது, அதற்கு முக்கியக் காரணம் சமூக பிரச்னையே. சுதந்திரம் அடைந்து அறுபத்து ஆறு ஆண்டுகள் ஆகியம் ஜமீன்தாரி முறை ஒழிந்த பாடில்லை. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து காணப்படுகிறது. சமூகத்தில் கீழ் உள்ளவர்கள் அப்படியே தான் உள்ளார்கள். எப்பொழுதும் சமூக மோதல்கள்.இது எமது பீகார் நண்பர் சொன்னது. பீகாரில் புது கார் வாங்கினால் முதலில் செய்வது எங்காவது காரில் உரசல் செய்து பழைய கார் போன்ற தோற்றத்திற்கு மாற்றுவார்களாம். காரணம் என்னவென்றால் புது கார் என்று தெரிந்தால் ரவுடிகள் காரை எடுத்துக் கொண்டு போய் விடுவார்களாம்.

அந்த அளவுக்கு தான் மக்களது உடைமைகளுக்கு பாதுகாப்பு உள்ளது. தமது சொந்த மாநில மக்களே முதலீடு செய்ய யோசிக்கும் வேளையில் எப்படி மற்ற மாநிலத்தவர், மற்ற நாட்டவர் முதலீடு செய்ய விரும்புவார்கள்?

இது வரை பெரும்பாலான பிரதம மந்திரிகள், ரயில்வே மற்றும் முக்கிய துறை மந்திரிகள் இந்த இந்தி பெல்ட் மாநிலங்களில் இருநது தான் வந்து உள்ளார்கள். இந்திய அரசியலிலும் இவர்கள் தான் அதிக அதிகாரம் படைத்தவர்கள்.

இந்த அடிப்படை சமூக பிரச்சனைகளை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக தீர்க்க இவர்கள் முயற்சி செய்ததே இல்லை. ஆனால் குறுக்கு வழியில் நிதிகளை தங்கள் மாநிலத்துக்கு திருப்பி விட்டு வருகிறார்கள்.

வளர்ந்து வந்த மாநிலங்கள் தங்கள் கல்வி, சுகாதாரம், மக்கள் தொகை குறைப்பு, சட்டம் ஒழுங்கு என்று பல பிரச்சனைகளை தங்கள் சுயமுயற்சியிலே தீர்த்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு முதலீடுகளும் எளிதாக கிடைத்து வருகிறது.

5.96% மக்கள் தொகை கொண்ட தமிழகம் இந்திய மொத்த உற்பத்தியில் 7.67% மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் 8.58% மக்கள் தொகை கொண்ட பீகார் வெறும் 1.96% மட்டுமே வளர்ச்சியில் பங்களிப்பாக வருகிறது. இயற்கை நிதிப்படி நீண்ட காலம் இந்த சூழ்நிலை நிலைத்து இருக்க வாய்ப்பு குறைவே.

போகிற போக்கைப் பார்த்தால் மாநிலங்கள் முன்னேற முயலாமல் சிறப்பு அந்தஸ்து கிடைக்கவே போட்டி போடும் என்றே தோன்றுகிறது.

இப்படியே சென்றால் இந்திய ஒருமைப்பாடு அந்தரத்தில் தான் தொங்கும்.

தொடர்பான சில பதிவுகள்:
ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது?
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?
ஈரான் எப்படி இந்தியாவைக் காப்பாற்றும்?« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

  1. முன்னேறுவதே குற்றம் என்று ஆக்கிவிடுவார்கள் போல!

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே! பிராந்திய ஏற்றத்தாழ்வு இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. ஆனால் அதை தீர்க்க எந்த உருப்படியான வழியும் அரசு எடுக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  3. மக்களுக்கு இலவசங்களை அள்ளிகொடுக்கும் அளவுக்கு தமிழகம் செழிப்பாகவே இருக்கிறது என்பது நிஜமே.

    பதிலளிநீக்கு