வியாழன், 21 ஜனவரி, 2016

ஏன் பொதுத்துறை அரசு வங்கி பங்குகள் சரிகின்றன?

தற்போதைய சந்தை நிலவரத்தில் கிட்டத்தட்ட எல்லா பங்குகளும் கடுமையாக சரிந்து வருகின்றன.

பல பங்குகளுக்கும் பொத்தாம் பொதுவாக எண்ணெய், சீனா என்று தான் காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் நன்கு செயல்படும் பங்குகளுக்கு இது தேவையில்லாத சரிவுகள் என்றே கருத வேண்டியுள்ளது.ஆனாலும் சில துறைகளில் வேறு சில காரணங்களும் சரிவுகளின் பின் மறைவில் உள்ளன. அதில் ஒன்று பொதுத்துறை வங்கிகள்.

கடந்த இரு மாதங்களில் 30% வரை இந்த அரசு வங்கிகளில் சரிவுகளை பார்க்க முடிகிறது.

அதற்கு முக்கிய காரணம் ஆர்பிஐ எடுத்துள்ள முடிவுகளும் ஒரு காரணமாக உள்ளது.

கடந்த வருடத்தில் பார்த்தால் ஆர்பிஐ 0.75% அளவு அடிப்படை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

ஆனால் நஷ்டத்தில் இயங்கி வரும் சில அரசு வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்காமல் இந்த வட்டி இடைவெளியில் லாபம் சம்பாதிக்க முனைகின்றன. அதனால் இந்த வட்டிக் குறைப்பு பலன் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையாமல் உள்ளது.

இதனைக் கண்ட ஆர்பிஐ இனி பேஸ் ரேட் வட்டி விகிதத்தைக் கணக்கிட சூத்திரங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

இதனால் முந்தையது போல் வங்கிகள் தங்கள் அடிப்படை வட்டி விகிதங்களை இஷ்டத்திற்கு கூட்டி வைத்துக் கொள்ள முடியாது. இது வரும் காலாண்டுகளில் இந்த வங்கிகளின் லாபத்தைப் பாதிக்கும் என்று தெரிகிறது.

இது போல், மற்றொரு ஆர்பிஐ அறிவிப்பும் முக்கியமானது. ஆர்பிஐ ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான புதிய கடன்களை NPA என்று சொல்லப்படும் வாராக்கடன்களாக அறிவிக்க உள்ளது.

அப்படி அறிவிக்கப்படும் பட்சத்தில், இந்த கடன்களில் வட்டியை வசூலிப்பது என்பது கடினமாகும். அசலை மட்டுமே திருப்பி பெற முனைப்பு காட்ட வேண்டும்.

வாராக்கடன்கள் என்பது தனியார் வங்கிகளை விட அரசு வங்கிகளில் மிக அதிகமாக உள்ளதால் இந்த முடிவு குறுகிய காலத்திற்கு அந்த வங்கிகளை பாதிக்கும்.

ஆனாலும் அரசு வங்கிகளிலே எஸ்பிஐ போன்ற சில வங்கிகள் வட்டி விகிதங்களை தனியார் வங்கிகளுக்கு போட்டியாக வைத்துள்ளன. அதே போல் வாராக் கடன்களும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே உள்ளன.

அவைகள் எல்லாம் பெரிதளவு பாதிக்கப்படாது என்று கருதலாம். ஆனால் மற்ற வங்கிகளில் எச்சரிக்ககையாக இருப்பது அவசியம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக