ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மருந்து, நுகர்வோர் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.

சீனாவால் உலக சந்தைகள் அனைத்தும் ஆடிப் போய் இருக்கும் சூழ்நிலையில் இந்திய உள்நாட்டுக் காரணிகளும் வலுவாக இல்லை.


மேலும் சீனா முன்பை போல் யுவான் மதிப்பபை தானாக குறைத்து ஒரு பதற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.  இதனால் அடுத்த சில நாட்கள் சந்தையில் உயர்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்று கருதிக் கொள்ளலாம்.



வழக்கமாக ஒரு பங்கு முதலீடு போர்ட்போலியோவை உருவாக்கும் போது எல்லா துறைகளையும் கிட்டத்தட்ட சமநிலைகளில்  ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நுகர்வோர், மற்றும் மருந்து நிறுவனங்களில் அதிக அளவு முதலீடை வைப்பது பாதுகாப்பானதாக கருதலாம். முப்பது சதவீதம் வரை இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டால் சரிவுகளில் கொஞ்சம் தப்பி விடலாம்.

நுகர்வோர் மற்றும் மருந்து பொருட்கள் எந்த வித பெரிய பொருளாதார தேக்கத்திலும் பெருமளவு பாதிக்கப்படுவதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம்.

சீனாவில் இருந்து ரப்பர்,உலோகங்கள் போன்றவை மிக மலிவாக இங்கு வந்து கொட்டப்படலாம். இதற்காக அரசு ஆண்டி டம்பிங் என்ற இறக்குமதி வரியை விதித்தாலும் ஒரு நிலைக்கு மேல் கட்டுப்படுத்துவது கஷ்டம் தான். அதனால் இந்த துறைகளில் போட்டி கடுமையாகவே இருக்கும்.

இது போக, சென்னை வெள்ளத்தால் ஐடி நிறுவனங்கள் உட்பட சிலவற்றின் வருமானம் 15,000 கோடி ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது என்று அறிக்கைகள் வந்துள்ளது. இதனால் இந்தக் காலாண்டில் ஐடி நிறுவனங்களின் மேல் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்ளலாம்.

எண்ணெய் விலை குறைந்து இந்திய அரசின் நிதி நிலைமை கூட மற்ற நாடுகளை விட பரவாயில்லாமல் இருக்கும் போது எளிதில் வர வேண்டிய மசோதாக்கள் கூட தேங்கி கிடப்பது நல்ல வாய்ப்புகளை வீண் செய்வது போலே தெரிகிறது.

இப்படியொரு மந்தமான சந்தையில் சீனா, GST என்று பங்குச்சந்தையில் அரைத்த மாவே அரைப்பது கூட போரடிக்கத் தான் செய்கிறது. அதனால் நாளை பங்குச்சந்தை அல்லாத வேறு முதலீடுகளை பற்றி பார்ப்போம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: