ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

அமெரிக்கா - வட கொரியா மோதல், சந்தையில் என்ன செய்வது?

நேற்று சில நண்பர்கள் வட கொரியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் மோதல் சந்தையில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று கேட்டு இருந்தனர்.
இதில் வட கொரியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் வருமா? என்பது தான் முதல் கேள்வியாக வருகிறது.



அமெரிக்கா தற்போது சிரியா மீது ஏவுகணை வீசி தாக்கியது. ஆனால் அதனை ஆதரித்தோ அல்லது தட்டிக் கேட்கவோ யாருமே இல்லை.

வளைகுடா முஸ்லீம் நாடுகளுக்கிடையே ஒற்றுமை இல்லாததை அமெரிக்கா சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.

ஆனால் வட கொரியா நிலை அப்படி இல்லை.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வட கொரியா என்ன செய்தாலும் ஆதரிக்கும் நிலையில் உள்ளன. ஆனால் அது உண்மையான ஆதரவு என்றால் இல்லை.

அதற்கு வட கொரியா போன்ற நாடு அணு ஆயுதத்தை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டு இருந்தால் தான் அமெரிக்காவின் பிடியில் இருந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்ற நிலையும் காரணம்.

இல்லாவிட்டால், வட கொரியாவை அமெரிக்கா பிடித்து விட்டால் அடுத்து சீனா, ரஷ்யா போன்றவற்றின் முக்கிய எல்லை அருகே நெருங்கி தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருப்பார்கள்.

அதே நேரத்தில் அமெரிக்காவை பார்த்தால் பலவீனமாக நிலையில் இருக்கும் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா போன்றவற்றின் மீது தான் எளிதில் கல் எறிவார்கள்.

அணு ஆயுதத்தை வைத்துக் கொண்டிருக்கும் வட கொரியா தம்மை ஏதாவது செய்து விடுவார்களோ? என்ற உட்பயம் அவர்களுக்கு எப்பொழுதுமே உண்டு. வட கொரியாவுக்கும் அமெரிக்காவை தாக்கும் அளவிற்கு கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளும் உண்டு.

ஆனால் வட கொரியாவை பொறுத்தவரை அங்கு இழப்பதற்கு என்று எதுவுமில்லை. உண்ணும் உணவினை கூட விட்டு விட்டு தான் ஆயுதங்களை மட்டுமே தயாரித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் அமெரிக்காவிற்கு எல்லாமே இழப்பு தான். அதுவும் தற்போதைய நெருக்கடியான பொருளாதார காலக்கட்டத்தில் போர் என்று வந்தால் அமெரிக்கா நிறைய விலை கொடுக்க வேண்டி வரும்.

தென்கொரியாவில் பத்து வருடங்களுக்கும் மேல் வசித்துள்ளோம். அதில் ஒரு பதினைந்து முறையாவது வட கொரியா மிரட்டி இருக்கும். கடைசியில் ஏதாவது சொல்லி சமாதானமாகி விடுவார்கள்.

ஆனால் தற்போது அமெரிக்காவை ஆண்டு வரும் ட்ரம்ப் வட கொரியாவின் கிம் ஜாங்கிற்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்ற சூழ்நிலையில் போருக்கு தயங்காமல் இறங்குவார்.

ஆனால் இன்னும் அமெரிக்கா தன்னை தயார் படுத்திக் கொள்ளாத சூழ்நிலையில் அவருக்கு கொடுக்கப்படும் அழுத்தம் போர் என்பதனை தடுப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன.

அதையும் மீறி வட கொரியாவுடன் போர் என்று வந்தால் சீனா, ரஷ்யா போன்றவற்றை மீறி தான் வெற்றி பெற வேண்டும். அது யாருக்கும் வெற்றி இல்லை என்ற சூழ்நிலையே உருவாக்கும்.

அந்த சூழ்நிலையில் பங்குச்சந்தை சரிவுகள் என்பதை தடுக்க முடியாது.

பொதுவாக போர் போன்ற நம்மை மீறிய நிகழ்வுகளில் வரும், வராது என்றெல்லாம் நம்மால் கணிக்க முடியாது.

ஆனால் தற்போதைக்கு வராது என்பதற்கான சாத்தியக் கூறுகளின் நிகழ்தகவு அதிகமாக இருப்பதால் சந்தையில் அந்த பயத்தினை புறந்தள்ளி விட்டு பங்கு விலைகள் இறங்கினால் வாங்கி போடலாம்.

தொடர்பான பதிவுகள்:
ஸ்பீக்கர் செட்டால் போருக்குத் தயாராகும் கொரியா


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக