சனி, 15 ஏப்ரல், 2017

நிதி முடிவுகளை எதிர்நோக்கும் சந்தை, திருத்தத்திற்கு வாய்ப்பு

இரண்டு மாதங்களுக்கும் மேலாக சந்தை காளையின் பிடியில் உள்ளதால் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.


இது வரைக்கும் பெரிய அளவில் எதிர்மறை நிகழ்வுகள் இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.



தற்போது சென்செக்ஸ் நிறுவனங்களின் சராசரி P/E மதிப்பானது 22க்கும் அதிகமாக உள்ளது.

இது வரலாற்றில் சென்செக்ஸ் சராசரியை விட மிக அதிகமாகும்.

இந்த P/E மதிப்பினை தேவையானது என்று நிரூபிக்க வேண்டும் என்றால் நமது நிறுவனங்களின் பங்கு லாபம் (Earning Per Share) உயர வேண்டும்.

அதற்கு தான் பெரிதளவில் 2017ம் ஆண்டின் ஏப்ரல் முடிந்த நான்காவது காலாண்டு நிதி அறிக்கையை பெரிதும் எதிர்நோக்கி உள்ளனர்.

இதன் முதல் கட்டமாக இன்போசிஸ் நிதி அறிக்கை கடந்த வாரம் வெளிவந்தது.

ஆனால் எதிர்பார்ப்புகளுக்கும் கீழே தான் நிதி அறிக்கை இருந்தது. அதோடு எதிர்கால வளர்ச்சி சதவீதம், லாப மார்ஜின் என்ற ரெண்டும் குறைவாக தான் இருக்கும் என்று கணித்து இருந்தனர்.

இதனால் இன்போசிஸ் பங்கு ஐந்து சதவீதத்திற்கும் கீழே விழுந்தது.

ஐடி துறையை பொறுத்தவரை ட்ரம்ப், கடுமையான போட்டி என்பதோடு ரூபாய் மதிப்பு உயர்வும் எதிர்மறையாக சேர்ந்து உள்ளது.

இதனால் அடுத்த வாரம் வரும் டிசிஎஸ் நிதி அறிக்கை கூட பொய்க்கலாமோ என்று தான் கருத வேண்டி உள்ளது.

அடுத்து, ஆட்டோ நிறுவனங்களை பொறுத்தவரை BS-3 தொடர்பான நீதி மன்ற உத்தரவு காரணமாக அதிக அளவில் தள்ளுபடி கொடுத்து வாகனங்களை விற்க வேண்டி வந்தது.

அதோடு ஒன்றரை லட்சத்திற்கும் மேலான வாகனங்களை விற்க முடியாமல் ஒதுக்கியும் வைத்துள்ளார்கள்.

இதனால் ஆட்டோ நிறுவன நிதி முடிவுகளும் சாதகமாக இருக்கும் என்றே கருத வேண்டி உள்ளது.

பார்க்க:
BS-3 தடை, ஆட்டோ நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கலாம்?

ஐடி, ஆட்டோ என்ற இரண்டு துறைகளும் சென்செக்ஸ், நிப்டி என்ற இரண்டிலும் கணிசமான சதவீத பங்கை வைத்துள்ளன.

அதனால் சென்செக்ஸ் கொஞ்சம் கீழ் நோக்கி வந்தால் தான் மதிப்பீடல் சரியாக இருக்க முடியும்.

இன்னும் மூன்று முதல் ஐந்து சதவீத தாழ்வு நிலையை சென்செக்ஸ் அல்லது நிப்டியில் அதிகமாக எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில், அலுமினியம் போன்ற உலோகங்களின் விலை சர்வதேச சந்தையில் கணிசமாக கூடி உள்ளதால் இந்த நிறுவனங்கள் நல்ல நிதி அறிக்கைகளை கொடுக்கலாம். மற்ற துறைகளை பொறுத்தவரை கடந்த காலாண்டு நிதி முடிவுகள் போலவே தொடரும் என்று தெரிகிறது.

இறுதியாக, இந்த திருத்தங்கள் என்பது கடந்த கால உயர்வுகளை தவற விட்டவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. எதிர்கால லாபங்களில் அதிக பங்கு கிடைக்கும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: