புதன், 26 ஏப்ரல், 2017

விளம்பர வருவாய் மூலம் முகம் மாறும் ரயில்வே, எதை வாங்கலாம்?

காலங்காலமாக இந்தியன் ரயில்வே நஷ்டத்தை தான் காட்டி வந்தது. இடையில் லல்லு பிரசாத் காலத்தில் லாபம் வெளியே தெரிய வந்தது.


அந்த பிறகு மம்தா பானர்ஜி கையில் சென்ற போது மீண்டும் சுணக்கம் காட்டியது.



இதற்கு எரிபொருள் மற்றும் இதர செலவுகள் உயர்ந்த அளவு பயணிகள் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்பதும் ஒரு காரணம்.

சரக்கு ரயில் கட்டணத்தில் வந்த வருவாயை கொண்டு பயணிகள் ரயிலில் வந்த வருவாயை ஈடு செய்து வந்தது.

தற்போதைய ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு வந்த பிறகு ரயில்வேயின் வருவாயை பெருக்க முயற்சித்து வருகிறார்.

ஆனாலும் வட இந்தியாவில் உள்ள ஓட்டு வங்கி பிரச்சினை காரணமாக பயணிகள் கட்டணத்தில் எதுவும் கை வைக்க முடியவில்லை.

அதே நேரத்தில் மற்ற வருவாய் மூலங்களை ஆராய்ந்து வருவது பாராட்டத்தக்கது.

சதாப்தி போன்ற உயர் ரக ரயில்களில் டிமேண்ட்-சப்ளை தியரி படி கட்டணத்தில் ஏற்ற இறக்கங்களை அறிவித்தார். இது கடந்த ரயில்வே நிதி ஆண்டில் நேர்மறையாக எதிரொலித்தது.

அடுத்து, இரண்டு லட்சத்துக்கும் மேல் டிவி மற்றும் டிஜிட்டல் கருவிகளை ரயில்வே நிலையங்கள் மற்றும் வண்டிகளில் பொருத்த திட்டமிட்டுள்ளார்.

கூகிள், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் இதில் ஏற்கனவே ஆர்வம் காட்டி உள்ளன.

இது தவிர ரயில்களில் திருக்குறள் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் என்று கேட்டு இருப்போம். இனி Paytm பொதிகை எக்ஸ்பிரஸ், Amazon திருக்குறள் எக்ஸ்பிரஸ் என்று ஸ்பான்சர் பெயர்கள் சூட்டப்பட வாய்ப்புள்ளது.

இந்த விளம்பரங்கள் மூலம் மட்டும் மேலும் 10,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று தெரிகிறது. இது ரயில்வேயின் மொத்த வருவாயில் பத்து சதவீதம் என்பது குறிப்பிட்டதக்கது.

மேலும், ரயில்களில் பயணிக்கும் நாம் எங்கே செல்கிறோம் போன்ற தகவல்கள் டிஜிட்டல் விளம்பர நிறுவனங்களுக்கு பகிரப்பட்டு அது தொடர்பான விளம்பரங்கள் நமது மொபைலில் வருமாறும் ஒரு திட்டம் உள்ளது.

உதாரணத்திற்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் பயணிக்கு சென்னையில் உள்ள தாங்கும் விடுதிகள், ஹோட்டல் போன்ற விவரங்கள் கொடுத்தால் உபயோகமாக இருக்கும்.

அதனை விளம்பரம் வடிவில் கொடுக்கும் போது ரயில்வேக்கும் வருவாய் கிடைக்கும்.

இந்த திட்டங்கள் முழுமையாக முடிக்கப்படும் போது ரயில்வே வருவாய் கணிசமாக கூடி சேவையும் தரமாக மாற வாய்ப்பு உள்ளது.

இறுதியாக ஒவ்வொரு செய்தியும் பங்குச்சந்தையில் இருப்பவர்களுக்கு முதலீடு வாய்ப்பு.

அந்த வகையில் ரயில்வேக்கு டிவி, டிஜிட்டல் சாதனங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள், ரயில்வே சுத்தப்படுத்தும் நிறுவனங்கள் போன்றவை அதிக அளவில் பலன் பெறலாம்.

நாம் ஏற்கனவே கட்டண போர்ட்போலியோவில் பல முறை இது தொடர்பான ஒரு நிறுவனத்தை பரிந்துரை செய்து இருந்தோம். அந்த நிறுவனமும் இந்த செய்தியால் அதிக அளவில் பலன் பெற வாய்ப்பு உள்ளது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக