புதன், 20 செப்டம்பர், 2017

அமைதிபடுத்த அதிக அளவு செலவழிக்க தயாராகும் அரசு

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஐபிஒக்கள் வெளிவந்ததால் நாமும் அது தொடர்பாகவே அதிகமாக எழுத வேண்டி இருந்தது.

அதனால் பங்குச்சந்தை நிகழ்வுகளை பற்றி அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.



 ஆனால்  ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது.

காளையின் பிடியில் இருக்கும் பங்குச்சந்தையில் திவாலான கம்பெனியைக் கூட மார்க்கெட் உள்ளது என்று சொன்னால் வாங்கி விட ஆட்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக ஐபிஒக்கள் என்பது சந்தைக்கு வரும் போது மலிவான பங்கு விலையில் வரும். அதனால் ஒரு செயற்கையாக டிமேண்ட் உருவாக்கப்பட்டு பங்கு விலை கூடுவது தான் காலங்காலமாக நடந்து வருகிறது.


ஆனால் தற்போது வரும் ஐபிஒக்கள் எதுவுமே மலிவாக இல்லை. சந்தையில் கூட இதே துறையை சார்ந்த நிறுவனங்கள் மலிவான P/Eயில் கிடைக்கின்றது.

ஆனால் இந்த ஐபிஒக்களின் விலை என்பது மிக அதிகமாகவே உள்ளது.

எல்லாவற்றிற்கும் இனி அதிக வளர்ச்சி எதிர்பார்க்கிறோம். அதனால் அதிக பரிமியம் கொடுங்கள் என்று சொல்கிறார்கள்.

ஆக, இருக்கிற சரக்கு மலிவாக விற்கப்படவில்லை.

அந்த நிலை தான் இன்று வெளிவந்து இருக்கும் SBI Life ஐபிஒவும் கூட..

அடுத்து நாம் உண்மையான பங்குச்சந்தையின் பக்கம் கவனத்தை திருப்புவோம்.

ஒரு கட்டுரையில் சீனா முழுமையாக ஈடுபடாத வரை வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் வாய் ஜவடால் யுத்தம் முடிய போவதில்லை என்று சொல்லி இருந்தோம்.

பார்க்க: குழந்தையின் ராக்கெட் விளையாட்டால் குழப்பத்தில் சந்தை

அது தான் நடந்து வருகிறது.

இன்னும் கிம் ஜாங் தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லாமலே தீபாவளிக்கு விடுவது போல் ஜப்பான் மீது ராக்கெட்டை விட்டு வருகிறார்.

எங்கே பசிபிக் கடலில் சென்று விழும் ராக்கெட் தங்கள் இடத்தில் தப்பி தவறி கூட விழுந்து விடக்கூடாது என்று ஜப்பான் நினைக்க, ட்ரம்ப்போ தனக்கு இருக்கும் கோபத்திற்கு வட கொரியாவை முழுமையாக சாம்பலாக்காமல் விட  மாட்டேன் என்று இன்று கொக்கரித்து உள்ளார்.

எமக்கு என்னவோ, இது இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி சண்டை போல் சவ்வு இழுவையாக தான் இருக்கும் என்று தெரிகிறது.

அதனால்  எப்பொழுதெல்லாம்  கிம் ஜாங் ராக்கெட் விடுகிறாரோ, அப்பொழுது பங்குகளை வாங்கி சராசரி செய்து கொள்ளுங்கள்! :)

அடுத்து, நமது மத்திய அரசை நோக்கி கவனத்தை திருப்புவோம்.

எல்லோரும் ரூபாய் ஒழிப்பு, GST போன்ற அதிரடி ஆக்சன்களை உச்சி புகழ்ந்து சொல்வார்கள் என்று பிஜேபி எதிர்பார்க்க,  ஆனால் வெளிவந்த GDP தரவுகளை பார்த்து கழுவி கழுவி ஊத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இத்துடன், கடந்த மூன்று வருடங்களாக வேலை வாய்ப்புக்கள் எண்ணிக்கை உயரவே இல்லை.

அதனால் அடுத்த தேர்தலை சந்திப்பது  அவ்வளவு எளிதல்ல என்று யோசித்த அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாகத் தான் இன்று ஜெட்லி வர்த்தக, பவர், ரயில்வே அமைச்சர்களை வைத்து ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தி உள்ளார்.

அதன் அடிப்படையில் பல திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய பாக்கேஜ் திட்டத்தைக் கொண்டு  வரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அப்படி ஒரு பேக்கஜ் வரும் பட்சத்தில் இது அடுத்து வரும் தேர்தலை கருத்தில் கொண்டு இருக்கும். அதனால் விவசாயம், கட்டுமானம், ரயில்வே, மின்சாரம் போன்றவற்றிற்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.

இந்த துறையில் சிறந்து விளங்கும் பங்குகள் மேல் ஒரு கவனத்தை வைத்துக் கொள்ளுங்கள்! நல்ல பலன் தர வாய்ப்பு உள்ளது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக