வியாழன், 14 ஜூன், 2018

ASM பங்குகளை எப்படி கையாளுவது?

இந்த மாத தொடக்கத்தில் பங்குச்சந்தை அமைப்புகள் சில பங்குகளை ASM என்ற பிரிவிற்குள் மாற்றியது.


அதனால் இந்த பங்குகளில் வீழ்ச்சி என்பது ஐம்பது சதவீதம் வரை இருந்தது.ASM என்பதன் விரிவாக்கம் Additional Surveillance Measures என்பது தான்.

செபியின் இந்த உத்தரவு பங்குசந்தையில் சில்லறை முதலீட்டாளர்களை காப்பாற்றுவதற்காகத் தான் தரப்பட்டது.


ஆனால் சில நல்ல பங்குகளும் இந்த பிரிவிற்கு உள்ளே சென்றதால் மிட் கேப் பங்குகளின் முதலீடு செய்த பலரும் பாதிக்கப்பட்டனர்.

செபி உத்தரவின் இந்த பகுதியை பார்த்தால்,

"ASM framework is purely on account of market surveillance and it should not be construed as an adverse action against a company/entity"

அதன்படி, இந்த உத்தரவு ஒரு நிறுவனத்திற்கு எதிரானதல்ல என்பதை புரிந்து கொள்ளலாம். அதனால் நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தால்   பெரிதளவு பயம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அடுத்து,

இந்த பிரிவிற்குள் ஒரு பங்கு எவ்வாறு வருகிறது என்ற கேள்வி வரலாம். அதற்கு செபி சில நிபந்தனைகளை வைத்துள்ளார்கள்.

ஒரு நிறுவன பங்கு விலை வரலாற்றில் கீழ்க்கண்ட விதிமுறைகள் பொருத்தி பார்க்கப்படும்.

  • உச்ச மற்றும் குறைந்த பட்ச பங்கு விலைகளில் அதிக இடைவெளி இருக்கிறதா?
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் எத்தனை முறை குறைந்த மற்றும் அதிக பட்ச பங்கு விலைகளை தொடுகிறது?
  • சில முதலீட்டாளர்கள் மட்டுமே இருக்கிறார்களா? அப்படி என்றால் அதில் ஒரு சிலர் மட்டுமே பங்கு விலையை மாற்றி விளையாடுகிறார்களா?
  • P/E விகிதத்தில் பெருமளவு மாற்றம் ஏற்படுகிறதா?


மேல் உள்ள கேள்விகளுக்கு ஆமாம்  சொல்லும் பங்குகளே ASM பிரிவிற்குள்ளும் வரும். அதுவும் நிரந்தரமல்ல. மற்ற பங்குகள் உள்ளே வரலாம். சில வெளியே போகலாம்.

மேல் சொன்ன நிபந்தனைகளை பார்த்தாலே தெரியும். முழுக்க ஆபரேடர்களை கட்டுப்படுதவற்கு கொண்டு வரப்பட்டது தான் என்று. அதனால் முதலீட்டாளராக பயம் கொள்வது தேவையில்லை.

இந்த ASM பங்குகளை அதிகபட்சம் ஐந்து சதவீதத்திற்கு மேலோ அல்லது ஐந்து சதவீதத்திற்கு கீழோ செல்ல  முடியாது என்பது தான் முக்கிய விதி முறை.

இதனால் ஒரே நாளில் பத்து, இருபது சதவீத விலை மாற்றங்கள் ஆபரேடர்களால் ஏற்றி, இறக்கப்படுவது பெரிதளவு குறையும்.

அதோடு, இந்த பங்குகளுக்கு 100% மார்ஜின் பணத்தை முதலிலே கொடுத்து விட வேண்டும். இதனால் வர்த்தக முறையில் இந்த பங்குகளை கையாளுவதும் குறையும்.

ஆனால் என்ன எதிர்மறை விடயம் என்றால், Liquidity என்பது மிகவும் குறைந்து விடும். அதாவது நல்ல பங்குகளாக இல்லாவிட்டால் பங்குகளை விற்பது என்பது எளிதல்ல.

அதனால் நமக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத அல்லது ஏன் வைத்து இருக்கிறோம் என்றே தெரியாத பங்குகள் ASM பிரிவில் இருந்தால் விற்று விட்டு வெளியே வரலாம்.

அதே நேரத்தில் முதலீட்டாளராக முழு நம்பிக்கை இருந்தால் பங்கினை தொடர்ந்து வைத்துக் கொள்ளளலாம். நிறுவன மேலாண்மையில் இதன் தாக்கம் என்பது குறைவாகவே இருக்க வாய்ப்புகள் உள்ளன.

எந்த பங்குகள் ASM பட்டியலில் உள்ளன என்பதை இந்த இணைப்பில் பார்க்கலாம்...
https://www.nseindia.com/invest/content/equities_surv_actions.htm


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக