திங்கள், 11 ஜூன், 2018

RERA: அபார்ட்மென்ட் வாங்குமுன் அவசியம் கவனிக்க ...

நகர்ப்புறங்களில் அபார்ட்மென்ட் வாங்கும் போது இருக்கும் முக்கிய பிரச்சினை விற்பவரை எப்படி நம்புவது? என்பது தான்.


பங்குச்சந்தை அளவிற்கு இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை படுத்தப்படாததால் பெரிய அளவில் ஏமாற்றங்கள் இருந்து வந்தது.



பல மடங்கு சம்பாதிப்பதில் இருக்கும் ஆர்வம் அதே அளவு தரத்துடன் இருக்க வேண்டும் என்பதில் ரியல் எஸ்டேட் விற்பவர்களுக்கு ஆர்வம் மிகவும் குறைவாக தான் இருந்தது.

அது தான் மொத்தமாக ரியல் எஸ்டேட் வீழ்ச்சிக்கும் கூட காரணமாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.


அரசும் இவர்களை கட்டுப்படுத்துவதற்கும் முயலவில்லை. அதே நேரத்தில் தேவையான தகவல்களை பொது வெளியில் வைக்காததால் ஏமாற்றங்கள் தொடர்ந்தே வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு கடந்த வருடம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.

இதன் பெயர் RERA. அதாவது Real Estate Regulation Act என்பதன் சுருக்கம் தான் இது.

இந்த சட்டத்தினை தமிழ்நாடு உட்பட 27 மாநிலங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.

இதன் படி, 5000 சதுர அடி இடம் அல்லது எட்டு வீடுகளுக்கு மேல் கட்டும் எந்த ஒரு பில்டரும் RERAவிடம் பதிவு செய்து இருக்க வேண்டும்.

அந்த ப்ராஜெக்ட்தானது அரசின் Approval வாங்கிய பின் முழு விவரங்களும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு பொது பார்வைக்கு வைக்கப்படும்.

இதில் ப்ராஜெக்ட் தொடர்பானது, பில்டர்கள் விவரங்கள், அரசு ஒப்புதல், கார்பெட் ஏரியா  போன்றவை விரிவாக பகிரப்படும்.

தமிழ்நாடு RERA விவரங்களை இங்கு பார்க்கலாம்.

http://www.tnrera.in/reg_projects_tamilnadu/2018.php

முன்பெல்லாம் ஒரு பில்டர் நாம் அபார்ட்மென்ட் வாங்குவதற்கு கொடுக்கும் பணத்தை வேறு ப்ராஜெக்ட்களுக்கு திருப்பி விடுவது வழக்கமான ஒன்று.

இதனால் ப்ராஜெக்ட்டானது ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை தாமதமாகி வந்தது.

இது வாங்குபவர்களுக்கு வங்கியில் தேவையில்லாமல் வட்டி கட்டும் சூழ்நிலையை உருவாக்கியதோடு, வாடகையும் கொடுக்கும் நிலையம் உருவாக்கி வந்தது.

ஆனால் தற்போது புதிய விதி முறைகள் படி, ஒரு ப்ராஜெக்ட்க்கு என்று பெறப்பட்ட தொகையானது ஒரு தனிப்பட்ட வங்கி கணக்கிலே வைக்கப்பட வேண்டும்.

பில்டர்கள் அந்தக் கணக்கில் பெறப்பட்ட தொகையில் 70% பணத்தை இதே வங்கி கணக்கில் வைத்து அந்த ப்ராஜெக்ட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த செலவானது ஒரு ஆடிட்டரால் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

இது போக, பில்டர் சொன்ன நேரத்தில் அபார்ட்மெண்டை தராவிட்டால் மாதத்திற்கு 1% அளவு வட்டியும் நமக்கு தர வேண்டும்.

பாதிக்கு மேல் அபார்ட்மெண்ட் கள்  விற்று விட்டால் குடியிருப்பு சங்கம் (Association) அமைக்கும் பணியையும் பில்டர்கள் தொடங்கி விட வேண்டும்.

RERA விதி முறைகளின் படி, ப்ராஜெக்ட் தொடர்பான புகார்கள் 60 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்பட வேண்டும். அதனால் RTI போன்று இதுவும் ஒரு பயனுள்ள சட்டமாக மாற வாய்ப்பு உள்ளது என்று நம்பலாம்.

இந்த விடயத்தில் அரசும் முடிந்த அளவு செய்துள்ளது என்றே சொல்லலாம்.

இனியும் ஏமாறினால் அதில் நமது தப்பும் உள்ளது என்றே கருத வேண்டும்.

அதனால் கொஞ்சம் அதிகமானாலும், RERA Approved ப்ராஜெக்ட்களை வாங்குங்கள்! தேவையில்லாத தலைவலிகள் மிகவும் குறையும்...


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக