வியாழன், 28 ஜூன், 2018

பொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை

சந்தையில் ஒரு பெரும் சோதனை காலத்தில் உள்ளோம்!


இந்திய பங்குசந்தையை பொறுத்தவரை Buying Interest என்று சொல்லப்படுவது தான் மிகவும் குறைந்துள்ளது.



தினசரி, வெளிநாட்டு FIIகள் எவ்வளவு வாங்குகிறார்கள்? உள்நாட்டு DII எவ்வளவு வாங்குகிறார்கள்? என்பதை கவனிப்பதுண்டு.

சமீப காலமாக இது மிகவும் குறைந்து போனது.

அதிலும் FIIகள் தொடர்ந்து விற்றுக் கொண்டே இருக்கிறார்கள். DIIகள் விற்கவில்லை. ஆனால் மிகக் குறைந்த அளவே வாங்குகிறார்கள்.

நிறுவனங்கள் தற்போதைய நிலையை விட நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாக போனது என்பதும் ஒரு காரணம்.

இது தவிர, கச்சா எண்ணெய் 60 டாலரில் தான் இருக்கும் என்று அனுமானித்தவர்களுக்கு 80$க்கு சென்றது அச்சத்தைக் கொடுத்துள்ளது.

அதனால் அந்நிய செலாவணி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ஆனால் 90களில் தங்கத்தை அடமானம் வைக்கும் நிலைக்கு நம்மை இழுத்து செல்லாது என்று நம்பலாம்.

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சொல்வது போல, 2017 நல்ல வருமானம் கொடுத்தது என்றால், அதிலுள்ள மிதமிஞ்சிய லாபத்தை ஈடு செய்யும் வகையில் 2018 இருக்கும் என்று சொல்லி இருந்தார்.

ஆமாம். இந்த வருட இறுதி வரை Consolidation தான் அதிகமாக இருக்கும். நாமும் பொறுமையாக இருப்பது நல்லது!

தற்போது சந்தையில் பங்குச்சந்தை நிலவரத்தைக் கவனிப்பவர்களை விட ஜோசியம் சொல்பவர்களே அதிகம் உள்ளனர்.

திடீர் என்று முளைத்த இந்த ஆபரேடர்கள் பங்குகள் விலை அதிகமாக இருக்கும் போது வாங்க சொல்கிறார்கள். பங்கு விலை சரியும் போது விற்க சொல்கிறார்கள்.

வாரன் பப்பெட்டின் கருத்துகளுக்கு முற்றிலும் எதிரான இந்த கருத்துக்கள் ஆபரேடர்களுக்கு தான் பணம் பண்ண உதவுமே தவிர நம்மைப் போன்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தையே கொடுக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய நேரமிது!

முடிந்தால், தினசரி சந்தையோ, அல்லது இவர்களது கருத்துக்களை பார்த்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம்.

வரும் பார்லிமென்ட் தேர்தல் முடியும் வரை யாருக்குமே சந்தையின் போக்கை கணிக்க முடியாது என்பது தான் உண்மை.

அதனால் மதிப்பீடல், நல்ல மேலாண்மை, வளர்ச்சி கொண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து விட்டு டென்சன் இல்லாமல் இருக்கவும்.

இன்னொரு செய்தியையும் பகிர்கிறோம்.

HNI என்று சொல்லப்படும் High Networth Individuals சந்தையில் இருக்கும் பகுதி பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகவும் செய்தி.

கடந்த ஐந்து  ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் விலைகள் வீழ்ந்ததாக தெரியவில்லை. ஆனால் பணவீக்கத்திற்கு தக்கவாறு கூட அதிகரிக்கவில்லை. அதனால் மதிப்பீடலும் மலிவாகவே உள்ளது.

அதனால் மேல் வந்த செய்தி உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதுவும் சந்தை வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.

நாமும், பங்குசந்தையை மட்டும் நம்பி இருக்காமல் பகுதியை மட்டும் நிலம், தங்கம், Fixed Deposit போன்றவற்றில் சிறிது காலத்திற்கு முதலீடு செய்வது நல்லது!

பகுதியை மட்டும் மாற்ற வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க!

எப்பொழுதுமே,

ஒரு வருடத்தில் கடுமையான திருத்தத்திற்கு செல்லும் சந்தை அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு நல்ல ரிடர்னை கொடுப்பது தான் வரலாறு.

அதனால் எல்லாவற்றிலும் விகிதாசாரத்தில் முதலீடு செய்து ரிடர்னை சமப்படுத்திக் கொள்ளுங்கள்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக