சனி, 2 ஜூன், 2018

திடீர் ஆடிட்டர் விலகல்களும், சரியும் பங்குகளும்

பங்குச்சந்தை முதலீட்டில் ரிஸ்க் என்பது எந்த விதத்தில் எப்படி வரும் என்றே சொல்ல முடியாது.


வியாபர ரீதியாக ஏற்படும் மாற்றங்களை கூட காலப்போக்கில் அனுமானித்து விட முடியும்.

ஆனால் நிர்வாக ரீதியாக திடீர் என்று முறைகேடு, கணக்கு சரியில்லை என்றால் மொத்த நம்பிக்கையும் மொத்தமாக போய் விடுகிறது.




அப்படித் தான் கடந்த சில மாதங்களில் சில நல்ல பங்குகள் சரிந்து வருவதை பார்க்க முடிகிறது.

Manpasand, Vakrangee, Atlanta என்ற மூன்று பங்குகளில் கவனிக்கலாம். இவை அனைத்துமே நிதி ஆய்வு நிறுவனங்களால் வாங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டவை.

ஆனால் திடீர் என்று ஆடிட்டர்கள் முன் அறிவிப்பின்றி விலகி விட்டனர். இதனால் இந்த பங்குகளின் மீதான நம்பிக்கை குறைந்து ஐம்பது சதவீத அளவிற்கு கூட பங்குகள் வீழ்ந்து விட்டன.

இதில் கடைசியாக மாட்டியது Manpasand பங்கு தான்.

குளிர்பானங்களில் வெளிநாட்டு நிறுவனங்களோடு கடுமையான போட்டி கொடுத்து முன்னேறி வந்த ஒரு நிறுவனம்.

நல்ல நிதி அறிக்கைகளால் கடந்த ஐந்து வருடங்களில் மூன்று மடங்கு பங்கு மதிப்பு கூடி விட்டது.

இந்த நிலையில் கடந்த வருட நிதி நிலை அறிக்கை கொடுப்பதற்காக கடந்த வாரம் போர்டு மீட்டிங் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக Deloitte Haskins & Sells என்ற அவரது ஆடிட்டர் நிதி நிலை அறிக்கைக்கு தேவையான சரியான தகவல்கள் இல்லை என்று கூறி ராஜினாமா செய்து விட்டனர்.

அதற்கு நிறுவனமோ கணினி சிஸ்டம் upgrade செய்யப்பட்டு இருப்பதால் டிஸ்டரிபடர்களிடம் இருந்து பெற முடியவில்லை என்று பதில் கொடுத்துள்ளார்கள்.

இந்த பதில் முதலீட்டாளர்களை திருப்தி படுத்தாததால் பங்குவிலையும் ஏழு தினங்களில் 40% அளவு சரிந்து விட்டது.

அத்துடன் இந்த பங்கினை பரிந்துரை செய்த நிதி ஆய்வு நிறுவனங்களும் தங்கள் பரிந்துரையை வாபஸ் பெறுவதாக கூறி விட்டன.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் நிறுவன ப்ரொமோட்டர்கள் இந்த நிதி முறைகேடுகளில் ஈடுபடுவது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

சத்யம் ஐடி துறையில் இன்போசிஸ், டிசிஎஸ்க்கு போட்டியாக இருந்த நிறுவனம். அது தொடர்ச்சியாக ஆறு காலாண்டுகளுக்கும் மேலாக தவறான நிதி அறிக்கைகளை கொடுத்து வந்து சிக்கியது.

அதே போல் அண்மையில் போர்டிஸ் மருத்துவமனை நிறுவனர்கள் 500 கோடி அளவு பணத்தை தங்கள் சொந்த நிதிக்கு திருப்பி விட்டதாக புகார் வந்து நிறுவனமே விற்கப்படும் நிலைக்கு வந்து விட்டது.

இவ்வாறு சிறு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களே முறைகேடுகள் செய்து நம்பிக்கையைக் கெடுத்துக் கொள்கின்றன.

சத்யம் முறைகேடிற்கு பின் அவர்களுக்கு ஆடிட் செய்த பிரபலமான PwC நிறுவனம் கூட இந்தியாவில் எதுவும் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டு விட்டது.

இதனால் தான் தற்போது ஆடிட்டர்கள் நமக்கு ஏன் வம்பு என்று முறைகேடுகள் தெரிய வரும் போது விலகி விடுகின்றனர்.

ஆடிட்டர்கள் வேலை என்பது அந்த முறைகேடுகளை வெளிக் கொண்டு வருவது தான்.

ஆனால் பல வித பயங்களுக்கு பயந்து விலகி விடும் போது அது தான் நமக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கையாக பார்க்க வேண்டி உள்ளது.

இதற்கு எச்சரிக்கையை நாமே சில விதங்களில் அனுமானிக்க முடியும்.

ஒரு துறையில் மற்ற எல்லா நிறுவனங்களும் நஷ்டம் அல்லது லாபம் கொடுக்காமல் ஒருத்தர் மட்டும் நல்ல லாபத்தை கொடுத்து வந்தால் அது எப்படி என்று ஆராய வேண்டும்.

திடீர் என்று ஒரு நிறுவனம் மிக அதிக அளவில் காரணமே இல்லாமல் கடனை வாங்கி குவிக்கிறது ஆராய்வோம்.

ஒரு நிறுவனம் அதிக அளவில் காரணமே இல்லாமல் துணை நிறுவனங்களை உருவாக்குகிறது என்றால் ப்ரொமோட்டர் பணத்தை எங்கோ திருப்பி விடுகிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.

இப்படி சீராக இல்லாமல் அவசரம் அவசரமாக எதுவும் நடந்தால் அந்த பங்குகளில் இருந்து உடன் விலகி விடுவது பெரிய நஷ்டங்களில் இருந்து நம்மைக் காப்பாற்ற உதவும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக