வெள்ளி, 4 அக்டோபர், 2013

பங்கு ஒரு பார்வை: Finolex Cables

நாம் பரிந்துரை செய்த பங்குகளில் Britannia ஒரு மாதத்தில் 15% வரை லாபம் கொடுத்து இருப்பது மகிழ்ச்சி. நாம் நீண்ட கால நோக்கில் பரிந்துரை செய்தது. அதனால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

விரைவில் பங்கு விலை ஆயிரம் தாண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அடுத்த மாதம் காலாண்டு முடிவுகள் வந்த பிறகு அதன் நிதி நிலை செய்திகளை பகிர்கிறோம்.

நமது போர்ட் போலியோவின் அடுத்த பங்காக Finolex Cables என்ற பங்கை இந்த பதிவில் பரிந்துரைக்கிறோம்.



இந்த நிறுவனம் சிறிது கேள்விப்பட்ட நிறுவனமாக இருக்கலாம். இந்த குழுமம் PVC பைப் மற்றும் எலக்ட்ரிகல் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறார்கள்.

இதனுடைய எலக்ட்ரிகல் உற்பத்தி பிரிவு தான் Finolex Cables. இந்த நிறுவனம் புனேவை மையமாகக் கொண்டு 1958லிருந்து இயங்கி வருகிறது. சாதாரண எலக்ட்ரிகல் கடையில் ஆரம்பித்து இன்று இவ்வாறு வளர்ந்து உள்ளார்கள்.

Finolex Cables நிறுவனம் PVC கேபிள், காப்பர் கேபிள், பைபர் கேபிள், சுவிட்சுகள் மற்றும் பல்புகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறார்கள்.

இது போக தொழில் துறைக்கு தேவையான அதிக மின்னழுத்த கேபிள், தகவல் தொழில் நுட்ப கேபிள் போன்றவற்றையும் வழங்கி வருகிறார்கள்.

இந்த நிறுவனம் எலக்ட்ரிகல் கேபிள், தகவல் தொழில் கேபிள், காப்பர் ராட் மற்றும் இதர எலக்ட்ரிகல் பொருட்கள் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் 87% வருமானம் எலக்ட்ரிகல் கேபிள் பிரிவில் வருகிறது.

கடந்த நிதி ஆண்டில் தகவல் தொழில் கேபிள் பிரிவு 22% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் இதன் தேவை அதிகமாக இருப்பதால் இன்னும் சில ஆண்டுகள் இதே வேகத்தில் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கொடுத்து இருந்த எலக்ட்ரிகல் கேபிள் தற்போதைய பொருளாதார தாக்கம் காரணமாக அண்மையில் சுணக்கம் கொடுத்தது. ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ பிரிவில் மீண்டும் வளர்ச்சி ஏற்படும் பட்சத்தில் எலக்ட்ரிகல் பிரிவு நல்ல வளர்ச்சி கொடுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

காப்பர் ராட் பிரிவின் முக்கிய நுகர்வோரே Finolex Cables நிறுவனத்தின் மற்ற பிரிவுகள் தான். அதனால் இதனுடைய லாபம் மற்ற பிரிவுகளில் லாபத்தை சார்ந்தே இருக்கும்.

இது போக இந்த நிதியாண்டில் இந்த நிறுவனம் LED பல்பு, தெரு விளக்குகள் என்று புதிய பொருட்கள் உற்பத்தியில் தமது சந்தையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. தமது சொந்த தேவைக்காக 5MW மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது நிறுவனத்தின் செலவினைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்.

நிறுவனத்தின் பிராண்ட்டும், 3000க்கும் மேற்பட்ட டீலர்களை கொண்டு இயங்குவதும் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. தமது சந்தையை வெளிநாட்டுக்கும் விரிவாக்கி உள்ளது.

இதன் சந்தை மதிப்பு 860 கோடியாகவும், முக மதிப்பு (Book value) 60 ரூபாய் அளவிலும், P/E 5.58 என்றும், EPS 10 ரூபாயாகவும் உள்ளது.

பங்கு மதிப்பீடலும் நல்ல விலையில் பங்கை குறிக்கிறது.

நாம் கடந்த வாரமே இந்த பங்கை பரிந்துரை செய்ய நினைத்து இருந்தோம். அப்பொழுது பங்கு 51 ரூபாயில் விற்று கொண்டு இருந்தது. தற்போது 56 ரூபாய்க்கு சென்று உள்ளது. சந்தை சரியும் போது 51~53 ரூபாய்க்குள் வாங்கி போடுங்கள். இரண்டு அல்லது மூன்று வருட நீண்ட கால முதலீட்டு நோக்கில் நல்ல பலனை தரலாம்.

மற்ற பங்கு பரிந்துரைகள்

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்: