ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

சிவநாடார் விலகினால் HCL பங்கினை எவ்வாறு அணுகலாம்?

கடந்த வெள்ளியில் சிவநாடார் HCL நிறுவனத்தில் இருந்து விலகி விடுவார் என்று ஒரு செய்தி வந்தது. அதனால் HCL நிறுவன பங்கு ஒரே நாளில் 4% அளவு அதிகரித்தது. அதனைப் பற்றிய எமது பார்வையை இந்த பதிவில் பார்க்கலாம்.


HCL நிறுவனம் தமிழரான சிவநாடார் அவர்களால் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக அளவில் லாபம் கொடுத்து சிறப்பான முறையில் செயல்படும் நிறுவனம். இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் சேவையை மட்டும் சார்ந்திராமல் PC, Tablet என்று உற்பத்தியிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம்.

இப்படி நன்றாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகுவதாக வரும் செய்தியை புறந்தள்ளவும் முடியவில்லை. அதே நேரத்தில் முழுவதுமாக நம்பவும் முடியவில்லை. அதனால் இரண்டு சாத்தியங்களுக்கும் முதலீட்டாளர்களாகிய நாம் தயார் செய்து கொள்வது அவசியம்.

அதே நேரத்தில் நமது போர்ட்போலியோவிலும் HCL பங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொன் முட்டையிடும் வாத்து போல் கிட்டத்தட்ட 40% லாபம் ஐந்து மாதங்களில் கொடுத்து உள்ளது.

அதனால் இந்த செய்தி பற்றிய பின்புலத்தையும், அதில் எமது கருத்துகளையும் பகிர்வது இங்கு அவசியமாக உள்ளது.

கடந்த ஓராண்டாக சிவநாடார் தமது பங்குகளையும் நிருவனத்தின் உயர் பொறுப்புகளையும் தமது மகள் ரோஷினிக்கு மாற்றும் வேலைகளை ஆரம்பித்து விட்டார்.



ஆனால் செய்திகளின் படி ரோஷினிக்கு IT துறையில் விருப்பமில்லை என்று கருதப்படுகிறது. அதனால் தம்முடைய 60000 கோடி மதிப்புடைய பங்குகளை விற்று விட முயற்சிக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

இதே மாதிரியான வதந்திகள் கடந்த நான்கு மாதங்களாகவே உலவி வருவதால் HCL நிறுவனமும் அவ்வப்போது இந்த வதந்திகளை மறுத்து வருகிறது.

சிவநாடார் தன்னுடைய ஒரு பேட்டியில் அடுத்த பத்து வருடங்களுக்கு HCL நிறுவனத்தை விட்டு விலகும் திட்டம் இல்லை என்கிறார். கடந்த வெள்ளியன்று வதந்த செய்திக்கும் HCL நிறுவனம் தமது மறுப்பை பங்குச்சந்தைக்கு தெரிவித்துள்ளது.

கார்பரேட் நிருவனங்களில் வரும் வதந்தியை சினிமா கிசு கிசு போல் எளிதில் மறுக்கவும் முடியாது. அதே நேரத்தில் நிறுவனம் கொடுத்து இருக்கும் தெளிவான விளக்கங்களையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.

அதனாம் நாம் இரண்டிற்கும் தயாராகவே இருப்போம்.

எம்மைப் பொறுத்த வரை தற்போதைய நிலையில் இந்த பங்கில் தொடரலாம்.

ஆனால் இந்த வதந்திகள் மீண்டும் தொடரும் பட்சத்தில் நம்மிடமுள்ள பாதி HCL பங்குகளை முதலில் விற்று 40% லாபத்தை உறுதி செய்து விடலாம்.

அதன் பிறகு HCL நிறுவனத்தை பெரிய நிறுவனங்கள் வாங்க முயற்சித்தால் பங்கு விலை கூட வாய்ப்புள்ளது. அந்த சூழ்நிலையில் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு மீதி பாதி பங்குகளை விற்றுக் கொள்ளலாம்.

அப்படியொரு சந்தர்ப்பத்தில் ஒரு புது நிறுவன மேலாண்மையின் கீழ் நிறுவனம் எவ்வாறு செயல்படும் என்று நமக்கு ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதால் பங்குகளை விற்று வெளியேறுவது நல்லது.

அதே நேரத்தில் மற்றொரு விதமாக நிறுவனர்கள் "Block Deals" என்ற முறையில் நிறுவனர்கள் தங்கள் பங்குகளை விற்றால் பங்கு விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. அப்படியான செய்திகள் வரும் போது உடனடியாக விற்று விடுவது நல்லது.

எந்த சூழ்நிலையிலும் நமது பரிந்துரைத்த விலைக்கு கீழ் பங்கு விலை போக வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம். முதலுக்கு மோசம் வர வாய்ப்புகள் குறைவே. அதனால் இந்த நிகழ்வை எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: