வியாழன், 3 ஏப்ரல், 2014

வாரிசு வரியும், மறைமுக சமத்துவமும்..

இது இந்தியர்களுக்கு புதிய தகவலாக இருக்கலாம். சில நாடுகளில் 'Inheritance Tax' என்று நமக்குத் தெரியாத புது வித வரி உண்டு. தமிழில் சொன்னால் 'வாரிசு வரி'..இதனைப் பற்றி விவரமாகப் பார்ப்போம்,


ஒருவர் தன்னுடைய சொத்தினை தனது வாரிசுகளுக்கு கொடுக்க நினைக்கிறார். கொடுப்பதற்கு முன் அரசாங்கத்திற்கு இவ்வளவு சதவீதம் என்று வரி கட்ட வேண்டும். இந்த சதவீத அளவு ஒவ்வொரு நாடுகளிக்கிடையும் வேறுபடுகிறது.

பெரும்பாலான மேலைநாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் இந்த வரி முறை கடைபிடிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு,

கொரியாவில் இரண்டரை கோடி அளவிற்கு மேல் சொத்தினை தமது வாரிசுக்கு கொடுப்பதாக இருந்தால் 40% அரசிற்கு வரி கட்ட வேண்டும்.

இதனால் கொரியாவில் உள்ள பெரிய கம்பனிகளான சாம்சங், LG, ஹயுண்டாய் போன்ற நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் அரசினை ஏமாற்றி வருகின்றன.

அதாவது, தங்களது வாரிசின் பெயரில் துணை நிறுவனங்களை ஆரம்பிக்கின்றன. அதன் பிறகு தாய் நிறுவனத்தில் இருந்து பெரும்பாலான வியாபாரங்களை 'Outsourcing' என்ற பெயரில் துணை நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இதனால் லாபமும் வெளியே செல்வதில்லை. அரசாங்கத்துக்கும் வரி கட்ட வேண்டிய தேவை இல்லை. இப்படி மிக விவரமாக அரசினை ஏமாற்றி வருகின்றன.

இந்த நேர்முக வரி நமது நாட்டில் இல்லை என்று நாம் பரவசம் அடையலாம்.

ஆனால் இதில் மறைமுகமாக சமத்துவம் என்ற கம்யுனிச கொள்கை ஒளிந்து இருப்பதை அழகாகப் பார்க்கலாம்.

அம்பானியின் பில்லியன் டாலர் வீடு 
தற்போதைய தனி நபர் வருமான வரியில் கூட அரசிற்கு கிடைக்கும் வருமானம் மற்ற வரி வசூல்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே.

ஏன், நமது நாட்டில் தனி நபர் வருமான வரி இல்லாமலே அரசை நடத்த முடியும்.  அந்த அளவிற்கு மறைமுக வரி வசூல்கள் அதிகமாக உள்ளது.

ஆனால் தனி நபர் வருமான வரியின் முக்கிய நோக்கமே ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசத்தைக் குறைப்பதே.

உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு வருட வருமானம் 10 லட்சம் என்பது தாராளமாக போதுமானது. அதன் மேல் வருமானம் அதிகப்படியான வருமானமே.இந்த அதிகப்படியான வருமானம். கண்டிப்பாக அன்றாடத் தேவைகளுக்கு பயன்படாது. பிற்காலத்தில் ஓய்விற்கோ, ஏழு தலைமுறைகளுக்கோ சேர்த்து வைக்கும் தொகை. அல்லது கேளிக்கை, பொழுதுபோக்கு போன்ற விடயங்களுக்கே அதிகமாக பயன்படும்.

ஆனால் மறுபக்கம் உணவு, உடை, உறைவிடம் போன்ற மூன்று அத்தியாவச தேவைகள் இல்லாமல் நிகழ்காலத்திலே அல்லல்படுபவர்கள் அதிகம்.


இந்த அதிகப்படியான வருமானத்தின் ஒரு பகுதியை எடுத்து மற்றொரு பிரிவினரை உயர்த்த பயன்படுத்துவதன் மூலம் இடைவெளியைக் கண்டிப்பாக குறைக்க முடியும். இதனால் தான் தனி நபர் வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது.

இதே போல் தான் வாரிசு சொத்துகளும்..

ஒரு மனிதன் பிறக்கும் போதே தேவைக்கு மிஞ்சிய பணத்துடன் பிறந்து விட்டால் அப்புறம் உழைப்பு தேவையில்லை. பணம் முதலீடாக இருந்தாலே மீண்டும் மீண்டும் பணத்தை ஈட்டிக் கொடுக்கும்.

அதனால் 'ஒருபக்கம், உழைக்காமலே வருமானம், மற்றொரு பக்கம் உழைத்தும் போதிய கூலி இல்லாமை'. என்று சமநிலை இன்மை ஏற்படுகிறது.

அப்புறம் ஏழை, ஏழையாகவே இருப்பான். அம்பானி மும்பையில் தேவையே இல்லாமல் பில்லியன் டாலர்களில் வீட்டினைக் கட்டிக் கொண்டு இருப்பார்.

இதனைத் தான் வளர்ந்த நாடுகள் வாரிசு வரி என்ற பெயரில் எளிதாக சமாளிக்கின்றன.

விவசாயத்தில் ஈடுபடும் பப்பெட் மகன்
அமெரிக்காவில் பப்பெட் மகன் விவசாயத்தில் ஈடுபடுகிறார்.

அதே நேரத்தில் பொறுப்பில்லாமல் முகேஷ் அம்பானி மகன் குடித்து விட்டு கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தி தப்பிக்கிறார்... சித்தார்த் மல்லையா அடிக்கும் கூத்துகளை சொல்லவே வேண்டாம்.

இவர்களுக்கும் கஷ்டத்தின் பலனை கொஞ்சம் அனுபவிக்க வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும்.

இந்தியாவைப் போன்ற பொருளாதார இடைவெளி அதிகமாக உள்ள நாடுகளுக்கும் இந்த அணுகுமுறை கட்டாயம் தேவை.

ஆனால் அரசியல்வாதிகளும், அம்பானிகளும் இருக்கும் வரை வராது என்று நம்புவோமாக!

English Summary:
<!–- google_ad_section_start -–> Inheritance tax helps to equalize wealth to each people of country and gives more income to plan for country development.
<!–- google_ad_section_end -–>
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக