புதன், 9 ஏப்ரல், 2014

P/E விகிதத்தால் பங்கினை எப்படி மதிப்பிடலாம்? (ப.ஆ-10)

இந்தக் கட்டுரையில் P/E என்றதொரு விகிதத்தினை பயன்படுத்தி பங்கினை எவ்வாறு மதிப்பிடலாம் என்பதனைப் பார்க்கலாம்.


பங்குச்சந்தையில் பலர் பயப்படுவதன் முக்கியக் காரணம் இது ஒரு சூதாட்டமோ இருக்குமோ என்ற ஒரு அச்ச உணர்வே.ஏதோ லாட்டரி வாங்குவது போல் வாங்கி விட்டு நஷ்டப்படுவதை அதிகம் பார்த்து இருக்கலாம்.

ஆனாலும் சில மதிப்பீடல் முறைகளை ஓரளவு அறிந்து கொள்வதன் மூலம் நல்ல பங்குகளை நாமாகவே பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இதற்கு முன் ஒரு எளிய வழியாக பங்குகளின் விலையை மதிப்பிட முடிவதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம்.

அதனை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

அதே போல்  'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.

தற்போது P/E என்ற விகிதத்தை பயன்படுத்தி எப்படி ஒரு பங்கினை அளவிடலாம் என்பதைப் பார்ப்போம்.

P/E என்பதன் விரிவாக்கம் Price To Earning Ratio.

இது இந்த சூத்திரத்தைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறது.
P/E = Market Price / Earning Per Share (EPS)


இதில் Market Price என்பது பங்கின் தற்போதைய சந்தை மதிப்பு.

Earning Per Share(EPS) என்பது ஒரு பங்கின் மூலம் நிறுவனத்திற்கு கிடைத்த லாபம். அதாவது நிகர லாபத்தை மொத்தமுள்ள பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பு.

EPS = Net Profit / Total No. of shares

EPS மதிப்பினை நிறுவனத்தின் Profit & Loss அறிக்கையில் நேரடியாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக P/Eயின் மதிப்பு குறைவாக இருக்கும் போது நல்ல நிலையில் இருப்பதாகவும், அதிகமாக இருக்கும் போது கொஞ்சம் யோசித்தும் வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது என்றும் கருதலாம்.

உதாரணத்திற்கு நமது போர்ட்போலியோவில் பரிந்துரை செய்யப்பட Finolex Cables என்ற நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்.

இந்த நிறுவனத்தின் பங்கு விலை 113.60 என்று உள்ளது.

இந்த நிறுவனத்தின் EPS மதிப்பு 11.58 என்று உள்ளது. அதாவது ஒரு பங்கிற்கு 11 ரூபாய் அளவு லாபம் ஈட்டுகிறது.

அப்படி என்றால்,
P/E = 113.60/11.58 = 9.81 என்ற அளவில் இருக்கிறது.

இது பங்குச்சந்தையைப் பொறுத்த வரை நல்ல நிலை ஆகும்.

இதன் அர்த்தத்தை இப்படியும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். இதே வளர்ச்சி விகிதத்தில் இருந்தால், உங்களது முதலீடு 9.81 வருடங்களில் இரட்டிப்பாக மாறி விடும். அதாவது போட்ட முதலீடு லாபமாக கிடைக்கும்.

அப்படி என்றால், மற்றொரு நிறுவனம் P/E விகிதத்தினை 20 என்ற அளவில் கொண்டு இருந்தால் 20 வருடத்தில் போட்ட முதலீடு லாபமாக கிடைக்கும்.

ஆனால் எப்பொழுதும் இந்த விகிதங்கள் சரியாக இருக்குமா?

இருக்காது...

ஏனென்றால் இந்த விகிதம் தற்போதைய நிதி நிலை அறிக்கையை மட்டுமே கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்ட விகிதம். அதாவது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை P/E விகிதம் எதிரொலிக்கவில்லை.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் என்னவாகிறது?

நிறுவனம் தற்போதைய வளர்ச்சியை விட அதிகமாக வளர்ந்தால் உங்கள் முதலீடு ஒன்பது வருடங்களுக்கு முன்னரே இரட்டிப்பாக மாறி விடலாம். ஆனால் தற்போதைய வளச்சியை விட குறைவாக இருந்தால் இரட்டிப்பாக பத்து வருடங்களுக்கும் மேல் எடுக்கலாம்.

இதனால் நிறுவனத்தின் விரிவாக்கங்கள், எதிர்கால லாப வீதங்கள் மாறும் சூழ்நிலையில் இந்த அளவீடு சில சமயங்களில் தவறாக மாறி விடும் வாய்ப்பு உள்ளது.

இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் பங்கு விலை சரியாக உள்ளதா என்பதைப் பார்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

கீழே உள்ள P/E மதிப்புகளை ஒரு எல்லையாக வைத்துக் கொண்டு பங்குகளை வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

  • <10:  குறைந்த விலையில் பங்கு இருந்தால் P/E மதிப்பு பத்துக்குள் இருக்கும். 
  • <20:  சராசரி விலையில் பங்கு இருந்தால் P/E மதிப்பு 10 முதல் 25க்குள் இருக்கும். 
  • >20:  அதற்கு மேல் இருந்தால் பங்கு விலை அதிகமாக உள்ளது. யோசித்து வாங்க வேண்டும். நுகர்வோர் மற்றும் மருந்து நிறுவன பங்குகளில் P/E 25 வரையும் சராசரி அளவாக கருதப்படுகிறது. 

தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் மற்ற விகிதங்களையும் பார்க்கலாம்.

தொடரின் அடுத்த பாகம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: