வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

ஐடி நிறுவனங்களின் BuyBack எந்த அளவு பலனளிக்கும்?

நேற்று TCS நிறுவனம் பங்குகளை ஒரு குறிப்பிட்ட அளவு சந்தையில் வாங்கி கொள்வதற்காக முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது.


இது மற்ற ஐடி நிறுவனங்கள் மீது பெரிய அளவு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனர்கள் பெரிய அளவில் வாக்குவாதங்களை துவக்கியுள்ளதும் அறிந்ததே.



ஏற்கனவே பொதுவான BuyBack தொடர்பாக அடிப்படை விடயங்களை நாம் இந்த தளத்தில் எழுதி இருந்தோம். அதனை இங்கு பார்க்கலாம்.
நிறுவனங்கள் BuyBack முறையில் ஏன் பங்குகளை திரும்பி வாங்குகின்றன? (ப.ஆ - 44)

முதலில் ஏன் ஐடி நிறுவனங்களின் பங்குதாரர்கள் BuyBack முறையில் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பது ஒரு கேள்வியாக எழுகிறது.

பொதுவாக ஒரு நிறுவனம் தமது லாபத்தை டிவிடெண்ட் முறையில் பங்குதாரர்களுக்கு கொடுக்கும். வழக்கமாக  மூன்றில் ஒரு பங்கு அல்லது இரண்டில் ஒரு பங்கு லாபத்தை தான் பகிர்ந்து அளிப்பார்கள். டிவிடெண்ட் வழங்கும் போது அரசுக்கு டிவிடெண்ட் வரி கட்ட வேண்டும். ஆனால் BuyBack முறையில் வரி எதுவும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது நிறுவனங்களுக்கு சாதகமான விடயம்.

இந்த லாபத்தின் டிவிடெண்ட் போக மீதி பெரும்பகுதி நிறுவனத்திடம் பணமாக சேர்த்து வைக்கப்படும். அந்த பணம் நிறுவன வளர்ச்சிக்காக அல்லது புதிய நிறுவனங்களை வாங்குவதற்காக பயன்படுத்தப்படும். அதற்கேற்ப நிறுவனம் வளர்ச்சி அடையும் போது பங்கு விலை கூடும். அவ்வாறு பங்கு விலை கூடினால் பங்குதாரர்களின் முதலீடு பெருகும்.

ஆனால் இந்திய ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை கிடைக்கும் லாபம் பணமாக சேர்த்து வைக்கப்பட்டு தற்போது ஒரு பெரிய பணக் குவியலாக மாறி உள்ளது. TCS நிறுவனம் 40,000 கோடி ரூபாய் அளவு பணமாக வைத்துள்ளது. இன்போசிஸ் 30,000 கோடி ரூபாய் பணமாக வைத்துள்ளது. இது தவிர HCL, WIPRO கூட கணிசமான பண இருப்பைக் கொண்டுள்ளது.

ஆனால் இந்த பணம் நிறுவன வளர்ச்சிககாகவோ அல்லது புதிய நிறுவனங்களை வாங்குவதற்கோ பயன்படுத்தப்படவில்லை என்பது தான் இங்கு ஒரு பெரிய குறை. பதினைந்து வருடங்களுக்கு முன் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருந்ததோ அதே தான் இன்றும் செய்து கொண்டிருக்கின்றன. வியாபாரத் தன்மையிலோ அல்லது அறிவு திறனிலோ பெரிய அளவில் முன்னேற்றத்தை காட்டவில்லை.

அதனால் கையிருப்பு பணம் அப்படியே வங்கியில் போடப்பட்டு 6% வட்டியைக் கொடுத்து வருகிறது. ஆனால் வியாபாரம் என்று வரும் போது ஆறு சதவீத ரிடர்ன் என்பது கிட்டத்தட்ட ஒன்றுமே அல்லாதது.

அதே நேரத்தில் வெளுப்புறக் காரணிகள் அமெரிக்கா, ட்ரம்ப் என்று பலவற்றால் கணிசமாக பாதிக்கப்பட மென்பொருள் பங்குகளின் விலைகளும் அகல பாதாளத்தில் உள்ளன.உள்ளே வளர்ச்சிக்கான அறிகுறியும் இல்லை, அதே நேரத்தில் பங்கு விலையும் உண்மை மதிப்பை விட பெரிய அளவில் குறைவாக உள்ளது.

முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் பங்கை விட்டு தற்போது வெளியே சென்றால் லாபம் என்று எதுவும் இருக்காது.அதனால் தூங்கி கொண்டிருக்கும் பணத்தை வைத்து வெளிச்சந்தையில் இருந்து பங்குகளை BuyBack முறையில் வாங்க சொல்கிறார்கள்.

அவ்வாறு வாங்கினால் எப்படி பலன் கிடைக்கும்? என்ற கேள்வியம் வரலாம்.

பொதுவாக பங்கு மதிப்பீடல்களின் முக்கிய காரணிகளான Price-To-Earnings Ratio, Price-To-Book போன்ற மதிப்புகள் வெளிச்சந்தையில் இருக்கும் Outstanding Shares என்பதை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகின்றன.

இந்த பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க மேலே சொன்ன P/E, P/B மதிப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதே நேரத்தில் பங்கு எண்ணிக்கை குறைந்தால் P/E, P/B மதிப்புகள் அதிகரிக்கும்.  அந்த சூழ்நிலையில் பங்கு விலைகளும் கூடும். இது மறைமுகமாக பங்கு விலைகளை செயற்கையாக கூட்டுவதற்கு பயன்படுத்தும் யுக்தி.

மேலும் விவரங்களுக்கு பார்க்க:
P/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்? (ப.ஆ-10) 
புத்தக மதிப்பை வைத்து நல்ல நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்க? (ப.ஆ - 15)


ஒரு நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி அடையும். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அதன் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கருதினால் இந்த BuyBack முறை நீண்ட கால நோக்கில் அதிக பலனளிக்கும். நிறுவனத்திடம் அதிக கட்டுப்பாடு வருவதால் நிறுவனத்திற்கும் அதிக பலனளிக்கும்.

ஆனால் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை சமாளிக்க மாற்று திட்டங்கள் இல்லை எனும் சூழ்நிலையில் ஏற்கனவே இருக்கும் பங்குதாரர்கள் அதிக லாபத்தில் வெளியேறுவதற்கு தான் இந்த BuyBack முறை உதவும். அதன் பிறகு பங்கு வளர்ச்சி பெரிய அளவில் இருக்காது.

அதனால் TCS, இன்போசிஸ், விப்ரோ பங்குகளை வைத்து இருப்பவர்கள் வெளியேறுவதற்கு இந்த BuyBack முறையை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக