புதன், 15 பிப்ரவரி, 2017

ஜியோவால் வேலை இழக்க போகும் டெலிகாம் ஊழியர்கள்


முகேஷ் அம்பானி ஜியோ பெயரில் தனது நீண்ட கால கனவான டெலிகாம் சேவையில் இறங்கினார்.



பெரிய ஜாம்பவான்கள் ஏற்கனவே குடியிருக்கும் இந்திய டெலிகாம் துறையில் அவ்வளவு எளிதில் நுகர்வோர்களை பெற முடியாது என்பதால் சலுகைகளை அறிவித்தார்.



எல்லோரும் சலுகைகள் என்ற பெயரில் சிறிது சதவீத அளவில் தள்ளுபடிகளை அறிவித்து சந்தையை பிடிக்க நினைப்பார்கள். ஆனால் அம்பானி தமிழ்நாடு அரசு பாணியில் முற்றிலும் இலவசம் என்ற ஆயுதத்தை எடுத்தார்.

ஏர்டெல், ஐடியா போன்ற போட்டி நிறுவனங்கள் மூன்று மாதத்திற்கு மேல் இந்த இலவசம் தாக்க பிடிக்காது. அதன் பிறகு என்ன செய்கிறார்கள் பார்ப்போம் என்று காத்திருந்தார்கள்.

ஆனால் அம்பானி மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து ஆறு மாதங்கள் இலவச சலுகையை கொடுத்தார். இதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் காசாக இருப்பில் இருக்கும் பெரிய தொகையையும் காரணம்.

ஆனால் ஏர்டெல் தவிர மற்ற டெலிகாம் நிறுவனங்கள் இந்திய அரசின் அலைக்கற்றை ஏலத்தில் வந்த பெரிய கடன் பெரிய சுமையாக இருந்தது. அதனால் இந்த நிறுவனங்களால் அம்பானியின் ஆறு மாத சலுகையெல்லாம் தாக்க பிடிக்க முடியவில்லை.

அதனால் மாற்று வழியை யோசிக்க நினைக்க ஆரம்பித்துள்ளன.

அதற்கு ஒரே வழி செலவை கட்டுப்படுத்துவது.

நலிந்து போயிருக்கும் நிறுவனங்கள் தங்களை இணைத்துக் கொள்ள முனைந்துள்ளன. இதன் மூலம் தேவையற்ற பணியாளர்களை நீக்கி கொள்ளலாம். ஒரே இடத்தில இரண்டு நிறுவனங்களின் தனித்தனி டவர்கள் தேவையில்லை என்று பல விதங்களில் செலவை குறைக்க வழிகள் உள்ளன.

தற்போது Vodafone நிறுவனம் IDEA நிறுவனத்திடம் பேச ஆரம்பித்துள்ளது.  அந்த சூழ்நிலையில் இந்த புதிய நிறுவனம் ஏர்டெல்லை விட பெரிய நிறுவனமாக மாறும். இது தவிர அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் ஏர்செல் நிறுவனத்திடம் இணைய முற்பட்டுள்ளது.

இந்த இரண்டு இணைப்புகளில் மட்டும் கிட்டத்தட்ட 25,000 பணியாளர்களின் வேலை போக வாய்ப்புள்ளது. 

இது தவிர ஏர்டெல் நிறுவனம் பணியாளர்கள் செய்வதை எல்லாம் ஆட்டோமேஷன் செய்து கொள்ளலாம் என்று ஐபிம் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. இது மேலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆனாலும் ஆச்சர்யம் என்னவென்றால், ஆரம்பித்தில் ஓரளவு நன்றாக சென்று கொண்டிருந்த ஜியோ வாடிககையாளர்கள் அதிகரிக்க அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. தற்போது மிக மோசமான டேட்டா மற்றும் கால் சேவை தான் கிடைக்கிறது.

மொத்தத்தில் ஜியோ தனக்கு ஒரு கண் போனால் மற்றவர்களுக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற உயரிய கொள்கையோடு சந்தையில் வந்துள்ளது.

எதுவானாலும், மொபைல் கட்டணத்தில் இவ்வளவு கொள்ளையடித்தார்களா என்று நமக்கு உணர வைத்ததற்காக நன்றி சொல்லலாம்.

ஆனாலும் இந்திய டெலிகாம் துறையை ஒரு பெரிய தள்ளாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். இப்போதைக்கு ரிலையன்ஸ் உட்பட எந்த டெலிகாம் பங்குகளை வாங்காமல் இருப்பது நமக்கு உசித்தம்!



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக