புதன், 22 பிப்ரவரி, 2017

ரிலையன்ஸ் பங்கை மகிழ்வித்த Jio 303 அறிவிப்பு, நீடிக்குமா?

நேற்று முகேஷ் அம்பானி ஒரு அறிவிப்பை வெளியிட ரிலையன்ஸ் பங்கு ஒரே நாளில் எட்டு வருட உயர்வை சந்தித்தது.


முற்றிலும் இலவசம் என்ற ஆரவார அறிவிப்போடு ஆரம்பிக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சலுகைகள் மார்ச் 31 அன்று முடிவடைகிறது. இந்த இலவசம் காரணமாக ஏர்டெல், ஐடியா போன்றவை கடந்த டிசம்பர் காலாண்டில் கடுமையான நஷ்டத்தை சம்பாதித்து வந்தன.



இதனால்  மார்ச் 31க்கு பிறகு இலவசமா? இல்லை காசு வாங்குவாரா? என்ற பேச்சுக்கள் மக்களோடு சேர்ந்து
தொழில் துறையையும் கலக்கி வந்தன. இந்த நிலையில் நேற்று முகேஷ் அம்பானி இனி இலவசம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஒரே நாளில் 10% உயர்வை கொடுத்தன.

இலவசம் இல்லை என்ற அறிவித்தாலும் சில சலுகைளை அம்பானி அறிவித்தார். மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை 99 ரூபாய்க்கு ப்ரீமியம் செலுத்தினால் அடுத்த ஒரு வருடத்திற்க்கு மாதம் 303 ரூபாய்க்கு எல்லையற்ற மொபைல் இன்டர்நெட் மற்றும் கால் அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் எல்லையற்ற என்ற வார்த்தை ஒரு நாளில் 1GBக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி முறைக்கு உட்பட்டது. அதாவது ஒரு மாதத்திற்கு 30GB பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சலுகை யில் மார்ச் 1 முதல் 31 வரை என்ற காலத்தை குறித்ததன் மூலம் இன்னும் ஒரு மாதத்தில் கணிசமான வாடிக்கையாளர்களை சேர்க்க முற்பட்டுள்ளார். இது வரை 10 கோடி வாடிக்கையார்கள் சேர்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஒரு மாதத்தில் குறைந்தது மூன்று முதல் ஆறு கோடி புதியவர்கள் சேர்க்கும் திட்டம் இருக்கும் போல் தெரிகிறது. அந்த சூழ்நிலையில் இரண்டாவது இடத்தில இருக்கும் ஐடியாவை ஜியோ நெருங்கும்.

இது வரை இருக்கிற காசை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் ஜியோ பிடுங்கி கொண்டிருந்தது. வருமானமே இல்லாததால் ஜியோவிற்கு பங்கு மதிப்பே வழங்கப்படவில்லை.

ஆனால் தற்போது ஏர்டெல், ஐடியா போன்றவற்றுடன் ஒப்பிடும் சூழ்நிலை வந்துள்ளது. அதனால் சராசரியாக ஒரு பங்கிற்கு 200 ரூபாயாவது ஜியோவிற்கு மதிப்பு இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இந்த மதிப்பை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகுடன் சேர்க்கும் போது இன்றைய உயர்வு நியாயமானது தான்.

இனி மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு உயருமா? என்பது ஜியோவில் இனி நடக்கும் நிகழ்வுகளை பொறுத்தே அமையும்.

அதனால் இந்த திட்டத்தில் இருக்கும் சில பாதகமான நிகழ்வுகளையும் இந்த நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது இந்தியாவில் ஒரு நபர் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் சராசரியாக 200 ரூபாய் வருமானம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜியோ 303 ரூபாய் என்ற சலுகை உயர்தட்ட வருமான பிரிவை குறி வைத்தே உள்ளது என்றும் யோசிக்க தோன்றுகிறது.

இந்த உயர்தட்டு பிரிவினர் வெறும் சலுகை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதிக வாடிககையாளர்கள் சேரும் போது ஜியோவால் சேவையின் தரம் பாதிக்கப்படுகிறது என்பது அறிந்த உண்மை. இதனால் ஆரம்பத்தில் இருந்த ஜியோவின் டேட்டா வேகம் தற்போது இல்லை.இந்த காரணத்தால் உயர்தட்டு வருமானம் கொடுக்கும் பிரிவினர் ஆர்வம் காட்டாமல் போகவும் வாய்ப்புகள் உண்டு.

பலர் மொபைலில் Dual Sim வைத்து ஜியோவை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களில் பலர் மீண்டும் தங்கள் முதன்மை சிம்மை நோக்கி போகவும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் டிசம்பர், மார்ச் காலாண்டுகளில் படுத்த நஷ்டத்தை ஈடுகட்ட ஏர்டெல்,  ஐடியா போன்றவற்றிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

சலுகை என்பதை நடுத்தர வருவாய் பிரிவினற்கு கீழ் உள்ளவர்கள் தான் பெரிதும் விரும்புபவார்கள். அதனால் 101, 202, 303 என்ற தரங்களில் திட்டத்தை அறிவித்து இருந்தால் எல்லா பிரிவினரையும் கவர்ந்து இருக்கலாம்.

இந்த நிலையில் முதலீட்டாளர்கள் பார்வையில் பார்த்தால் ஏற்கனவே சேர்ந்த பத்து கோடியில் ஐந்து கோடியாவது காசு கொடுத்து ஜியோவை வாங்கினால் தான் இந்த திட்டம் வெற்றி அடையும். இதிலும் கீழ் சென்றால் கஷ்டம் தான்.

அதற்கு ஜியோ முதலில் தமது டெக்னாலஜி, நெட்ஒர்க் போன்றவற்றை பலப்படுத்த வேண்டும். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். வெறும் இலவசம் வேலைக்கு ஆகாது!



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக