மோடியின் ரூபாய் மதிப்பு இழப்பு கொள்கை பெரிதளவில் பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் மூலம் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததை உணர முடிந்தது.
நிலக்கரி, உலோகம், மின்சாரம், வங்கி போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் அருமையான நிதி நிலை முடிவுகளை கொடுத்துள்ளன.
அதே நேரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நுகர்வோர் துறை, ஆட்டோமொபைல் விற்பனை போன்றவை கூட தப்பித்து விட்டன. கடந்த வாரம் வெளிவந்த நுகர்வோர் நிறுவனமான பிரிட்டானியா நிறுவனம் கூட ஆறு சதவீத வளர்ச்சியை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிட்டத் தக்கது.
இன்னும் மருந்து, மென்பொருள் நிறுவனங்கள் ட்ரம்பின் கொண்டை பிடியில் சிக்கி இருப்பதால் எதிர்மறை தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்தி வருகின்றன. இதில் மருந்து நிறுவனங்கள் நல்ல நிதி அறிக்கைகளை கொடுத்து வருவதன் மூலம் மீண்டு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
இடையில் வெளிவந்த ஜெட்லீயின் பட்ஜெட், வெளியுலக புறககாரணிகள் போன்றவை கூட சந்தைக்கு சாதகமாக இருந்ததால் 28,000 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு மேல் சென்றது. இன்னும் கீழ் இறங்கிய பாடில்லை.
ஆனாலும் ஒரு கீழிறங்கு திருத்தம் வரும் என்றே மனம் எதிர்பார்க்கிறது.
அதற்கு தகுந்த எதிர்மறை செய்திகள் ஏதும் இல்லாததால் நீண்ட நாள்கள் சந்தை காளையின் பிடியிலே உள்ளது.
இனி எப்பொழுது முதலீடு செய்யலாம் என்றும் கேட்டு சில மின் அஞ்சல்கள் வருகின்றன.
அடுத்து பார்த்தால், உத்திரபிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வரவுள்ளன. அது பெரிய அளவில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதுகிறோம்.
மோடியின் ஒரு குணம் இந்த முறை உத்திரபிரதேச மாநிலத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எல்லாவிடத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் மோடி உத்திரபிரதேச சட்ட சபை தேர்தலும் தொடர்கிறார். ஆனால் மோடியை மட்டும் பார்த்து ஓட்டு போட இது பார்லிமென்ட் தேர்தல் அல்ல.
மாயாவதி, முலாயம் சிங், அகிலேஷ் என்று வலுவான மாநில தலைவர்கள் இருக்கும் ஒரு மாநிலத்தில் யார் முதலமைச்சர் என்று அறிவிக்காமல் பிஜேபி போட்டி போடுகிறது. இது பிஹாரில் பிஜேபிக்கு கிடைத்த எதிர்மறை முடிவுகளை கொடுப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
400க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகள் கொண்ட பிஜேபி தோற்றால் ராஜ்யசபா பலம் பெரிய அளவில் கூட வாய்ப்பு இல்லை. அது போக, ரூபாய் ஒழிப்பு நடவடிககைக்கு ஆதரவு இல்லை என்ற ஒரு மாயையும் தோற்றுவிக்கும். அந்த நேரத்தில் சந்தை மீண்டும் 27,000 புள்ளிகளுக்கு கீழேயும் வர வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் ஜெயித்தால் சந்தை 30,000 சென்செக்ஸ் புள்ளிகளை தொட்டால் கூட ஆச்சரியமில்லை. ஆனால் அதற்கு வாய்ப்புகள் குறைவே! பொறுத்து இருந்து பார்ப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக