செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பங்குகளை திருப்பி வாங்கும் TCS, என்ன செய்வது?

TCS நிறுவனம் இன்று தமது BuyBack திட்டத்தை அறிவித்துள்ளது.


அதன்படி வெளிச்சந்தையில் புழங்கி கொண்டிருக்கும் 5.61 கோடி பங்குகளை திரும்பி வாங்குவதாக சொல்லியுள்ளார்கள்.கடந்த வாரம் வரை 2100 ரூபாயில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த TCS பங்கு தமது BuyBack திட்டம் தொடர்பான யோசனைகளை சொன்ன பிறகு 2500 ரூபாய்க்கு மேலே சென்றது. தற்போது 2850 ரூபாய்க்கு வாங்கி கொள்வதாக சொல்லியுள்ளார்கள். அப்படி பார்த்தால் கடந்த வாரம் வரை 2100 ரூபாயில் வைத்துக் கொண்டவர்களுக்கு 2850 ரூபாய் என்று வரும் போது 30%க்கும் மேல் பிரீமியம் வருகிறது.

அந்த வகையில் இந்த BuyBack திட்டம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றே சொல்லலாம்.

இதற்கிடையே ஏன் ஒரு நிறுவனம் BuyBack திடத்தை அறிவிக்கிறது என்பது போன்ற விவரங்களை நாம் கடந்த வாரம் எழுதிய ஒரு பதிவில் விவரமாக பார்க்கலாம்.

பார்க்க:
ஐடி நிறுவனங்களின் BuyBack எந்த அளவு பலனளிக்கும்? 

இனி TCS பங்கினை வைத்து இருப்பவர்கள் BuyBack முறையில் விற்று விடுவதா? வேண்டாமா? என்ற ஒரு கேள்வி இயல்பாக வரும். அதனைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தற்போது TCS பங்கு 2500 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டு வருகிறது. இந்த நிலையில் 2016ம் வருட EPS (Earning Per Share) என்பது 133 மதிப்பில் வருகிறது.

தற்போது கிட்டத்தட்ட 2.8% பங்குகளை திரும்பி வாங்குவதாக சொல்லியுள்ளார்கள்.

அப்படியானால் திரும்பி வாங்கிய பிறகு EPS மதிப்பு 133+(2.8% of 133) = 137 மதிப்பில் வரும். அந்த சூழ்நிலையில் பங்கு விலை 2850 ரூபாய் என்று கருத்தில் கொண்டால் P/E (Price-To-Earning) மதிப்பு 20 என்பதன் அருகில் வரும். அதே நேரத்தில் தற்போதைய மதிப்பான 2500 என்பதில் கணக்கிட்டால் 18க்கு அருகில் வரும்.

இந்த நேரத்தில் மற்ற மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, HCL போன்றவற்றின் P/E மதிப்புகள் 15க்கு அருகில் தான் உள்ளன.

அதனால் BuyBack முடிந்த பிறகு TCS பங்கு விலை மீண்டும் 2500 ரூபாய்க்கு அருகில் வர வாய்ப்புகள் உள்ளன. ஏன் மென்பொருள் துறையில் நிலவி வரும் தேக்கம் காரணமாக அதனை விட கீழ் போவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஏற்கனவே TCS பங்கினை வைத்திருப்பவர்கள் BuyBack முறையை வாய்ப்பாக கருதி வெளியே வருவது சிறந்தது.

பொதுவாக அதிக வளர்ச்சி எதிர்பார்த்து இருக்கும் நிறுவனங்கள் சந்தையில் பங்கு விலை குறைவாக இருந்தால் வாங்கிப் போடும். இந்த சூழ்நிலையில் BuyBack என்பது நேர்மறையாகத் தான் கருதப்படும்.  ஆனால் இங்கு வளர்ச்சி குறைவாக செல்லும் என்று எதிர்பார்க்கும் சூழலில் திரும்பி வாங்கலை எதிர்மறையாகவே கருத வேண்டியுள்ளது.

இதே போல் TCS நிறுவனத்தின் திரும்பி வாங்கல் நடவடிக்கை காரணமாக மற்ற மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ கூட BuyBack முறையை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

அதனால் மென்பொருள் துறையின் எதிர்மறை செய்திகளை கண்டு துவண்டு போனவர்கள் BuyBack முறைகளை ஒரு நல்ல வாய்ப்பாக கருதிக் கொண்டு வெளியேறுவது நல்லது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக