வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பல மடங்கு ரிடர்னுக்காக பிரகாசிக்கும் பாதுகாப்பு துறை முதலீடு

முன்பொரு பதிவில் விப்ரோவில் 1000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் தற்போது 43 கோடி ரூபாய் கூடி இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

பார்க்க: விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி


ஆனால் அதே மடங்கு தற்போது கூடும் என்று எதிர்பார்த்தால் நடக்காது.


மென்பொருள் துறை அதிக அளவில் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்த்து எண்பதுகளிலே கணிசமான ரிஸ்க் எடுத்து முதலீடை செய்தவர்களுக்கு கிடைத்த வெகுமதி தான் அந்த பல மடங்கு வளர்ச்சி.



அதே போல் ஒரு துறையை நாம் இப்பொழுது பகிர்கிறோம்.

நாம் முன்னர் சொன்னது போல் ரிஸ்க் என்பது அதிகம் தான். கடந்து ஏழு வருடங்களில் L&T நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்தால் சராசரிக்கும் கீழ் தான். அதற்கு ஒரு முக்கிய காரணம் பாதுகாப்பு துறையில் 10,000 கோடி அளவு டாங்கிகளை உற்பத்தி செய்யும் தொழிலுக்கு முதலீடு செய்து இருந்தார்கள்.


ஆனால் பாதுகாப்பு துறையில் இருந்த அரசின் பல வித கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் முதலீடு செய்த பத்தாயிரம் கோடி எந்த வித ரிடர்னும்  கொடுக்கவில்லை. இதனை L&T நிறுவனத்தின் தலைவர் நாயக் தனது தவறு என்று ஒத்துக் கொண்டார். ஆனால் இதனை தவறு என்று சொல்வதை விட தவறான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரிவு என்று எடுத்துக் கொள்ளலாம்.

அந்த சமயத்தில் பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடுகளின் பங்களிப்பு அரசினால் மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது Make In India என்ற பெயரில் வரவேற்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்திய நிறுவனங்களுக்கு டாங்கிகல், ஏவுகணைகள் போன்றவற்றை பற்றிய புரிதல் என்பது சுத்தமாக கிடையாது. ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்தால் உலகின் மற்ற நிறுவனங்களை விட பல வருடங்களுக்கு பின் தங்கி இருக்க வேண்டி வரும்.

ஆனால் மோடி அரசு பாதுகாப்பு துறையில் 49% அந்நிய முதலீடுகளை அனுமதித்து உள்ளது. அதாவது எந்தவொரு நிறுவனத்திலும் 51% பங்குகள் இந்திய நிறுவனத்திடம் இருக்க வேண்டும். இதை அடிப்படையாக வைத்து பல நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடம் Joint Venture முறைப்படி ஒப்பந்தங்கள் போட்டுள்ளன.

இதனை கடந்த வாரம் பெங்களூரில் நடந்த ஏர் ஷோவின் மூலம் நேரிலே கண்கூடாக பார்க்க முடிந்தது. L&T நிறுவனம் ஐரோப்பாவின்MBDA என்ற நிறுவனத்துடன் சேர்ந்து ஏவுகணைகள் தயாரிப்பிற்கு ஒப்பந்தம் செய்து உள்ளார்கள். ரிலையன்ஸ் நிறுவனம் Dassault Aviation என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளார்கள். கல்யாணி குரூப் இஸ்ரேல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளார்கள்.

இந்த Joint Venture முறையானது இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு அனுபவ நிறுவனங்களிடம் இருந்து அறிவு சார் அனுபவத்தை பெற பெரிதும் உதவும்.

இது போக, மத்திய அரசு அண்மை கால இடைவெளியில் மட்டும் 333 லைசென்ஸ்களை தனியார் நிறுவனங்களுக்கு அளித்து உள்ளார்கள். அதே நேரத்தில் இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்தியா இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பாதுகாப்பு துறைக்கு செலவிடுகிறது. இதில் பாதி கிடைத்தாலும் இந்திய நிறுவனங்களுக்கு யோகம் தான்.

இந்த Joint Venture என்பது ஆரம்பித்தில் அதிக அளவில் முதலீடுகளை எடுத்து விடும். ஆனால் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகள் என்று பார்க்கும் போது கணிசமான ரிட்டர்னை கொடுக்கும்.

ரிஸ்க் மிக அதிகம் தான். ஆனால் அதற்கு தக்க ரிவார்டு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பங்குசந்தையின் பார்வையில் மேலே உள்ள முதலீடுகளை சொன்னோம்.
 
அதே நேரத்தில் சுயதொழில் முனைவோர்கள் பார்வையில் பார்த்தால் ஒரு கோயம்புத்தூர் நிறுவனம் போர் விமானங்களில் எடுத்து செல்லும் டூல்ஸ் பெட்டிகளை மட்டும் செய்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. மற்ற பெட்டிகளை விட பல மடங்கு எடை குறைவாக இருக்கும் என்பது அதன் சிறப்பம்சம்.

இப்படி போர் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் கூட புதிய பாதுகாப்பு துறை முதலீடுகளால் அதிக பலம் பெறும். தொழில் ஆரம்பிக்க இ-காமெர்ஸ் மட்டும் தான் வழி என்ற எண்ணம் தற்போது பரவலாக உள்ளது. அதற்கு மாற்று வழிகளும் இது போன்று பல உள்ளன.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக