திங்கள், 13 பிப்ரவரி, 2017

ட்ரம்ப் அடியில் ஆங்கிலம் பேசாத நாடுகளை பார்க்கும் இந்திய ஐடி துறை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முரட்டு அடிகளில் இந்திய ஐடி நிறுவனங்கள் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.


இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் மென்பொருள் என்ஜினீயர்களுக்கு ஐடி நிறுவனங்கள் 60,000 அமெரிக்க டாலர்களையே வருட ஊதியமாக வழங்கி வந்தன.



ஆனால் தற்போது வருடத்திற்கு 120,000 டாலர்கள் சம்பளம் கொடுக்கும் ஆட்களுக்கு தான் H1B விசா வழங்குவோம் என்று சொல்ல இந்திய ஐடி நிறுவனங்கள் வேறு வழிகளை யோசிக்க ஆரம்பித்துள்ளன.

முன்பே தோன்றியது தான்...

இது வரை எப்பொழுதும் ஐடி நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை பார்த்தால் 90% வருமானத்தையும் ஆங்கிலம் பேசும் அமெரிக்கா அல்லது பிரிட்டன் மூலமாகத் தான் காட்டி வந்தன.

அதற்கு நம்மவர்கள் சீனா, ரஷ்யா நாட்டவர்களை விட ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் என்பது சாதகமாக இருந்தது.

ஆனால் இதை வைத்து மட்டுமே இறுதி வரை கழித்து விடலாம் என்று நினைத்தது ஐடி நிறுவனங்களின் அடிப்படை திட்டமிடலில் இருந்த ஒரு பெரிய குறையே.

உலகின் மொத்த ஜிடிபியில் 80% பங்கு ஆங்கிலம் தவிர்த்து பிரெஞ்சு, சீனம், அரேபியன், கொரியன், ஜப்பானிய மொழி பேசுபவர்கள் மூலம் வருகிறது.

ஆனால் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த நாடுகளைக் கண்டு கொண்டதே இல்லை. தமது ஊழியர்களுக்கும் இந்த மொழிகளை பயிற்று வித்ததாக தெரியவில்லை.

கூகிள், பேஷ்புக் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் கூட நமீபியா, கென்யா போன்ற வளர்ச்சி பெறாத நாடுகளை குறி வைத்து சந்தையை விரிவாக்க ஆரம்பித்துள்ளன.

இதற்கு இந்த வளர்ச்சி பெறாத நாடுகளில் எதிர்காலத்தில் வளர இருக்கும் மென்பொருள் சந்தையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பும் ஒரு காரணம்.

ஆனால் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க, பிரிட்டன் அல்லாத ப்ரோஜெக்ட்களை துச்சமாக மதித்து கைவிட்ட காலங்களும் உண்டு.

ஏன், இந்திய உள்நாட்டு சந்தையை கூட நமது ஐடி நிறுவனங்கள் கண்டு கொண்டது இல்லை. எப்பொழுதும் ஒற்றை இலக்கத்தில் குறைவான வளர்ச்சியை தான் இந்திய சந்தையில் காட்டி வந்தார்கள்.

அந்த அளவிற்கு குறைந்த உழைப்பை போட்டு அதிக லாபம் கொழிக்கும் சந்தையை பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கம் நமது மென்பொருள் நிறுவனங்களிடம் இருந்து வந்தது.

தற்போது ட்ரம்ப் ஓட ஓட விரட்டும் போது இதனையும் கவனத்தில் எடுத்து உள்ளார்கள்.

தற்போது பார்வையை சீனா, கொரியா, ஜப்பான் மட்டுமல்லாமல் நமீபியா, கென்யா என்று ஆப்ரிக்கா நாடுகள் பக்கமும் திருப்பி உள்ளார்கள்.

காலம் தாழ்ந்தது என்றாலும் தற்போதைய கடின சூழ்நிலையில் இந்த நாடுகள் ஓரளவு உதவி செய்யும் என்று நம்பலாம்.

என்னவாக இருந்தாலும், மென்பொருள் பங்குகளை வாங்காதீர்கள் என்ற முந்தைய எமது நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

தூர தொலைவில் கூட வளர்ச்சியின் அறிகுறி இன்னும் தெரியவில்லை!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக