திங்கள், 20 பிப்ரவரி, 2017

லிமிட்டை தாண்டிய HDFC பங்கு, திணறும் செபி

கடந்த சில நாட்களாக HDFC வங்கியின் பங்கு அதிக அளவு ஏற்ற, இறக்கங்களை கண்டு வருகிறது. என்ன காரணம் என்பதை கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.


எந்தவொரு  துறையிலும் இவ்வளவு தான் வெளிநாட்டு முதலீடுகள் வைத்து இருக்க வேண்டும் என்று அரசு கொள்கை உள்ளது. அரசு கொள்கையை வகுத்த பிறகு ரிசர்வ் வாங்கி தான் இதனை கண்காணிக்க வேண்டும்.பங்குசந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்களில் தினமும் வர்த்தகம் முடிந்த பிறகு ரிசர்வ் வாங்கி கண்காணிக்கும். ஏதேனும் நிறுவன பங்கு உச்ச வரம்பின் அருகில் வந்தால் பங்குசந்தைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் இந்திய வங்கித் துறையில் அதிக அளவு அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீடு 74% அளவாகும். இதில் HDFC வங்கி கடந்த வியாழனுக்கு முன்னதாக 74% என்ற உச்ச வரம்பை தொட்டிருந்தது. அதனால் மேலும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதே தினம் பணியாளர்களுக்கு ESOP முறையில் அதிக அளவு பங்குகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் புதிதாக அதிக அளவு பங்குகள் உருவாக்கப்பட்டதால் ஏற்கனவே இருந்த வெளிநாட்டு முதலீடுகளின் பங்கு 72%க்கும் குறைவாக சென்றது.

அதனை வியாழன் இரவு அன்று கவனித்த ரிசர்வ் வங்கி HDFC வங்கியில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையை நீக்கி உத்தரவிட்டது.நீண்ட காலமாக HDFC வங்கி கொடுத்து வலுவான நிதி அறிக்கைகளும், மற்ற வங்கிகளின் ஒப்பிடுகையில் வாராக் கடன்களை கட்டுக்குள் வைத்து நல்ல வங்கியாக தொடர்கிறது. இதனால் ஏற்கனவே நமது இலவச போர்ட்போலியோவில் HDFC வங்கி பங்கை 600 ரூபாய் அளவில் பரிந்துரை செய்து இருந்தோம். மூன்று வருடங்களில் 1400 ரூபாயை எட்டியுள்ளது என்பதையும் இங்கு பதிவு செய்கிறோம்.

இந்த டிமெண்ட் காரணமாக வெள்ளியன்று சந்தை துவங்கிய பிறகு பெருமளவு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் HDFC வங்கியின் பங்கை வாங்க துவங்கி விட்டனர்.  அதனால் அரை நாளிலே வெளிநாட்டு முதலீடு பங்கு 74%த்தை தாண்டியது.

வழக்கமாக தடை, தடையை  விலக்கல் போன்றவற்றை வர்த்தகம் முடிந்த பிறகே ரிசர்வ் வாங்கி மேற்கொள்ளும். ஆனால் இந்த அளவிற்கு பங்கின் தேவை உயரும் என்று எதிர்பார்க்கததால் ட்ரேடிங் சமயத்திலே அறிக்கை வெளியிட்டார்கள். அதனால் 5%க்கும் மேல் உயர்ந்த பங்கு உயர்ந்ததில் இரண்டு சதவீதத்தை உடனே இழந்து விட்டது.

ஆனால் எல்லையை தாண்டியதற்கும், ரிசர்வ் வங்கி அறிக்கை கொடுப்பதற்கும் இருந்த சில நிமிடத் துளிகளில் கோடிக் கணக்கான பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே வர்த்தகமாகி விட்டன. இப்பொழுது உச்ச வரம்பையும் தாண்டி விட்டார்கள்.

இதனை சொல்லி வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பங்குகளை திரும்பி வாங்க முடியாது. அவ்வாறு வாங்க சொன்னாலும் விற்றவர்களிடம் பங்குகளை ஒப்படைக்க முடியாது. அதற்கு விற்றவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று ஒரு இடியாப்ப சிக்கலில் செபி மாட்டி உள்ளது.

இந்த பிரச்னையை விவாதிக்க இன்றைக்கு செபி அதிகாரிகள் கூடி உள்ளார்கள். இந்திய பங்குசந்தை வரலாற்றில் ஒரு வித்தியாசமான பிரச்சினை. ஆனால் சுவராஸ்யமாக உள்ளது. யாரையும் குற்றம் சொல்ல முடியாத நிலை. என்ன முடிவு என்று நாளை தெரியும். பார்ப்போம்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக