வெள்ளி, 10 மார்ச், 2017

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 2

ராதாகிருஷ்னன் தமணியின் பங்குசந்தை வெற்றி தொடரின் முந்தைய பகுதியை இங்கு பார்க்கலாம்.

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 1


இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலே ஒரு தனி நபர் வெறும் பங்குச்சந்தையில் புழலும் பங்குகளை மட்டும் வாங்கி ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முயன்றார் என்றால் ஆர்.கே.தமணியாகத் தான் இருக்கும்.




2000த்தின் தொடக்கத்தில் VST Industries என்ற ஒரு நிறுவனம் தான் ITC நிறுவனத்திற்கு போட்டியாக சிகரெட் தயாரித்துக் கொண்டிருந்தது.

VST நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்த தமணி பங்குச்சந்தையில் கிடைத்த பங்குகளைக் கொண்டே நிறுவனத்தின் 15% பங்குகளை கைப்பற்றிக் கொண்டார்.


அந்த சமயத்தில் 88 ரூபாயில் VST பங்கு வர்த்தகமாகி கொண்டிருந்தது. திடீர் என்று தமணி தனது பங்கு சதவீதத்தை 30% என்று கூட்டிக் கொள்ள விரும்புவதாக கூறி Open Offer மூலம் 112 ரூபாய்க்கு பங்குகளை வாங்கி கொள்வதாக கூறினார்.

இதனை பார்த்த நிறுவனத்தின் அதிக பங்குதாரரான British America Tobecco (BAT) நிறுவனம் தமணியை தடுக்க முயன்றது.

ஆனால் BAT ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் அந்நிய முதலீடு தடை இருந்தது. ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் பங்குகளை வாங்க முடியாது.

அதனால் தாம் சார்பாக ITC நிறுவனத்தை இயக்கியது. ITC நிறுவனம் போட்டியாக 115 ரூபாய் ஒரு பங்கிற்கு தருவதாக அறிவித்தது. அதன் பிறகு 126 ரூபாய் தருகிறோம் என்று அறிவித்தது.

இதனைக் கண்ட தமணி 151 ரூபாய் தருவதாக அறிவித்தார்.

ஏட்டிக்கு போட்டியில் வங்கிகள், இன்சுரன்ஸ் நிறுவனங்களின் ஆதரவு இல்லாததால் தமனியால் Open Offer மூலம் மேலும் 5% பங்குகளையே வாங்க முடிந்தது.

நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வி அடைந்தாலும் அதன் பிறகும் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்குகளை வாங்கி VST நிறுவனத்தில் தனது பவரை 25% அளவில் உயர்த்திக் கொண்டார்.

அவர் அன்று 151 ரூபாய்க்கு வாங்கிய பங்கு இன்று 2700 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பதினைந்து வருடங்களுக்கு முன் அறுபது கோடி ரூபாய்க்கு VSTயில் செய்த முதலீடு இன்று 2000 கோடியாக பெருகி உள்ளது.

இந்த வெற்றியின் பின் சில ஆண்டுகள் தமணி பங்குச்சந்தையை விட்டு ஒதுங்கி விட்டார்.

தமணி முதலீடு செய்த நிறுவனங்களை பார்த்தாலே தெரியும். பெரும்பாலும் சூப்பர் மார்கெட்டில் சென்று எது நன்றாக செல்லும் என்று நினைக்கும் நுகர்வோர் பொருளைத் தான் குறி வைப்பார்.

அதனால் சூப்பர் மார்க்கெட் ரிடெயில் வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபாடுடன் இணைந்தார். அது தான் D-Mart.



D-Mart தொடங்கும் போது தமனிக்கு வயது ஐம்பதை தாண்டி விட்டது. ஆனாலும் இளைஞர் போன்று தொழில் முனைவோராக குதித்தார்.

ஐம்பது வயது, ஐயாயிரம் கோடிக்கு மேல் சொத்து அப்பொழுதே இருந்திருக்கும். ஆனாலும் மொத்த வியாபர சந்தைக்கு தானே செல்வார். காத்து இருந்து வியாபாரிகளிடம் பேரம் பேசும் முறையை கற்றுக் கொண்டார்.

நம்பிக்கையான தரகர்களை பிடித்து வைத்துக் கொண்டார். எல்லா நிறுவனங்களிலும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் பணத்தை கொடுப்பார்கள் என்றால் தமணி பத்தே நாட்களில் பணத்தை செட்டில் செய்து சப்ளை செயினை வலுப்படுத்திக் கொண்டார்.

நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து மலிவான விலையில் அதிக அளவில் பொருட்களை வாங்கி கொண்டார்.

புற நகர் புறங்களில் சொந்த கட்டிடங்களை வைத்துக் கொண்டார். மால்களில் D-Mart கடைகள் எதுவும் கிடையாது. அதனால் அதிக அளவில் வாடகையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஆடம்பர டெக்ரேசன் வைத்து அந்த செலவினை நுகர்வோர் தலையில் கட்டவில்லை. ஆனால் கடை முழுவதும் எது எங்கே இருக்கிறது என்ற தெளிவான குறியீடுகள் இருக்கும்.

எது தேவையோ அதை மட்டும் வைத்து மற்ற கடைகளை விட குறைந்த விலையில் பொருட்களை கொடுத்தனர். அதனால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் D-Mart மற்ற ரிலையன்ஸ், பிக் பசார் போன்ற நிறுவனங்களை பல மடங்கு பின்னுக்கு தள்ளி முன்னே சென்று கொண்டிருக்கிறது.

தற்போது ஆர்,கே,தமணியின் சொத்து மதிப்பு 12,000 கோடியைத் தொடும். ஆனாலும் வெள்ளை நிற உடையில் மீடியா வெளிச்சம் படாமல் வரும் சாந்தமானவராகத் தான் பங்குச்சந்தையில் அவரை பார்க்கிறார்கள்.

D-Mart IPOவை நமது முதலீடு தள வாசகர்களும் விண்ணப்பித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம். நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களில் ஏழில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கிடைத்தால் வெகு குறுகிய காலத்தில் 50% வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. லாபம் கிடைக்க வாழ்த்துகிறோம்!

தொடர்பான மற்ற பதிவுகள்:
இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக