வெள்ளி, 17 மார்ச், 2017

ஸ்டார்ட் அப்பும், மன்னாரன் கம்பெனியும்

நீண்ட நாட்களுக்கு பிறகு தனிப்பட்ட அனுபவம் சார்ந்த கட்டுரை.

கடந்த மூன்று நாட்களாக பதிவு எழுத முடியவில்லை.


நண்பர்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப் என்ற தொழில்முனையும் நிலையை நோக்கி பயணிக்க இருப்பதால் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை துறக்க வேண்டிய சூழ்நிலை.



அதனால் கடைசி நேர வேலைப்பளு அலுவலத்தில் அதிகமாக இருக்க, நமது தளத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

இனி எமது கவனம் அதிக அளவில் முதலீடு தளத்திலும் இருக்கும். அதனால் தொய்வில்லாமல் எமது கட்டுரைகள் வர முயற்சிக்கிறோம். அத்துடன் விரைவில் எமது கட்டண சேவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்து அறிவிக்கிறோம்.


பெரிய மாற்றங்கள் என்றால் சேவைக் கட்டணம் எதுவும் உயராது என்பது உறுதி. முதலீடு சேவையில் அடிக்கடி தொடர்பில் இருக்கும் வகையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவது தான் முக்கியமாக இருக்கும்.

எமது ஸ்டார்ட் அப்பை பற்றி சொல்வதென்றால் சமூகத்தின் தேவைகளை மென்பொருளுடன் இணைத்து பயன்பெறும் வகையில் மாற்றுவது தான் எமது முக்கிய நோக்கம். நேரம் கனியும் போது மற்ற விவரங்களையும் பகிர்கிறோம்.

ஆனால் நமது சொந்த நிறுவனம் அல்லது தொழில் தொடங்கும் போது சமூகத்தின் வாயிலாக எவ்வளவு அழுத்தம் வருகிறது என்பதை நன்றாக அனுபவிக்க முடிகிறது.

இந்த பதிவை சென்னை கன்னிமரா நூலகத்தில் வைத்து எழுதுகிறோம். அதற்கும் காரணம் உண்டு.

சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழர் ஒருவர் பேட்டியை பார்க்க நேரிட்டது. அலுவலக வேலையை துறந்து தொழில் முனைவோராக மாறி இருந்தார். அவர் வேலையை விட்டு வீட்டிற்கு வரும் போது வரும் வரை தனது மனைவியிடம் கூட வேலையை விடுவதை சொல்லவில்லை.

அதற்கு சொல்லிய காரணம். நான் புதிய தொழிலை தொடங்குவதாக இருந்தால் அது வெற்றி பெறுமா? இல்லையா? என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் குடும்பத்தில் சொல்லி விளக்க முற்பட்டால் இருக்கிற வேலையை விடுவதா? இல்லையா? என்பது தான் அதி முக்கியத்துவம் பெறும்.

அதனால் நோக்கம் திசை மாறுவதை விரும்பவில்லை என்று கூறி இருந்தார்.

எமக்கும் அது சரி என்று பட்டது. ஆனால் மனைவியிடம் கூட சொல்லாமல் இருந்தால் அவங்க கொடுக்க கூடிய மன அழுத்தம் ஸ்டார்ட் அப்பை விட அதிகமாக இருக்கும்.

அதனால் பல பொய்களை உண்மையுடன் கலந்து சொல்லி சமாதனம் செய்து கொண்டு, மற்ற எந்த உறவுகளுக்கும் தெரியாத வகையில் பார்த்துக் கொண்டோம்.

நேற்று அலுவலக கடைசி நாள், இன்று வீட்டில் இருந்து மற்ற வேலைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தால்,

திடீர் என்று ஊரில் இருந்து போன் கால். அம்மாவும் அப்பாவும் நாளை சென்னை வருகிறோம் என்று சொல்கிறார்கள்.

என்னடா என்று யோசித்த வேளையில் தான் கல்யாண பரிசு தங்கவேலுவின் மன்னாரன் கம்பெனி நினைவுக்கு வந்தது.

சரி என்று காலையிலே எழுந்து அலுவலக உடைகளை போட்டுக் கொண்டு, கிளம்பி விட்டோம். கூடவே கட்டு சோறும் லேப்டாப்பும்..

இடையில், மனைவி எங்கேயோ பதுக்கி வைத்து இருந்த பழைய 500 ரூபாய்களில் இருந்த ஆயிரம் காட்டி இதை மாற்ற முடியுமோ? என்று கேட்கிறார்.

கோபம் வந்தாலும் நம்ம நிலைக்கு இப்போதைக்கு காட்ட முடியாது. அதனால் சென்னை ரிசர்வ் வங்கி வாசலுக்கு சென்றால் அங்க வெளிநாட்டு காரர்களுக்கும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் தான் மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள்.

மோடியின் ரூபாய் ஒழிப்பை நாம் கணினியில் இருந்து ஆகா, ஓஹோவென்று புகழ முடிகிறது. ஆனால் ரியாலிட்டி வேறு மாதிரி தான் தெரிகிறது.

திருச்சியிலிருந்து வந்த ஒரு வயதான பெரியவர் ஆட்டு வளர்ப்பில் கிடைத்த 7000 ரூபாயை மாற்ற முடியாமல் திண்டாடும் போது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. இப்படி நிறைய பேர் வெயிட்டிங்.

மோடி சொன்ன இரண்டு மாதங்கள் என்பது மிகவும் குறைவே என்றும் தோன்றுகிறது. ஒரு சிறிய லிமிட்டில் இன்னும் சில மாதங்கள் கொடுத்து இருக்கலாம்.

சரி. அதை முடித்து வேறு எங்க போகலாம் என்று தோன்றிய போது தான்..கன்னிமரா லைப்ரரி.

வெளியே சென்னையின் வாகன இரைச்சல், ஆனால் உள்ளே அருமையான புத்தக அமைதி. பண்புடன் பணியாளர்கள். அமைதியான வாசிப்பதலுடன் வாசகர்கள்.

ஒரு தனியார் நிறுவனம் நடத்தி இருந்தால் கூட இவ்வளவு நேர்த்தியாக நடத்தி இருப்பார்களா என்பது சந்தேகம். அங்கு உட்கார்ந்து பதிவினை எழுதுகிறோம்.

இன்னும் பதினைந்து நாட்களில் பெங்களூரில் புதிய பயணம். அந்த இடைவெளியில் சென்னையில் முக்கியமானவற்றை தவற விடக் கூடாது என்ற நோக்கில் மன்னாரன் கம்பெனி வாயிலாக எழுத்தாளர் வைரவனாக தொடர்கிறோம்.

இந்த வேளையில் பொருளாதார ரீதியாக நம்பிக்கை கொடுத்த பங்குச்சந்தைக்கு நன்றி சொல்ல வேண்டியதும் எமது கடமை!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக