ஞாயிறு, 12 மார்ச், 2017

உ.பி.யால் துள்ளிக் கொண்டிருந்த சந்தை தாவ ஆரம்பிக்கிறது

இந்த வருடம் தமிழகத்திற்கு குழப்பமாக இருக்க, அம்மா சமாதி தியான மடமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய பங்குச்சந்தைக்கு அமர்க்களமாக இருக்கிறது.


நாமும் மோடியின் ரூபாய் ஒழிப்பை வரவேற்றோம். ஆனால் நீண்ட கால நோக்கில் தான் ஏதோ நல்லது நடக்கும் என்று நம்பினோம்.அதே நேரத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு கடினமாக தான் இருக்கும் என்று நம்பினோம்.

ஆனால் அது முழுமையாக பொய்த்தது. ரூபாய் ஒழிப்பு நடந்த அதே காலாண்டிலேயே நிறுவனங்கள் மோசமில்லாத நிதி அறிக்கைகளை கொடுத்தன.

சரி. அடுத்து ஜிடிபி வளர்ச்சியில் பெரிய அளவு தொய்வு இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் பரவாயில்லை என்று வந்தது.

இடையில் பட்ஜெட் நன்றாக இருக்கும் என்று நம்பினோம். அதனை மட்டும் தான் சந்தை நாம் நினைத்த விதத்தில் எடுத்துக் கொண்டது.

கடைசியாக ரூபாய் நோட்டில் பட்ட சிரமங்கள், முதல்வர் வேட்பாளரே இல்லாமல் தேர்தலை சந்தித்தால் காரணமாக உபியில் வெற்றி பெறுவது கடினம் என்று நம்பினோம்.

ஆனால் அதிலும் மோடி ஜெயித்து விட்டார். அதனால் மோடி விடயத்தில் எமது அனுமானங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டு தான் தீர வேண்டும்.

என்னவாக இருந்தாலும், சந்தைக்கு நல்லது நடந்தால் சரி என்ற அடிப்படையில் அடுத்து பார்ப்போம்.

சும்மாகவே காளையின் பிடியை விட்டு நகராமல் சந்தை தற்போது இருக்கிறது.

இந்த நிலையில் உத்திரபிரதேச வெற்றி சந்தையை முப்பதாயிரம் சென்செக்ஸ் புள்ளிகளுக்கு எடுத்து என்றாலும் ஆச்சர்யமில்லை.

நாளை சந்தை ஹோலியால் விடுமுறை. செவ்வாயில் சந்தை திறக்கும் போது எப்படியும் குறைந்தது 200 சென்செக்ஸ் புள்ளிகள் வரையாவது சந்தை கொண்டாடும்.

ஆனாலும் அந்த நிலைகளுக்கு பின்னர் சந்தை ஏற்கனவே மேல் உயர்ந்து விட்டதால் மதிப்பீடல் என்பது ஒரு பெரிய தடையாகவே உள்ளது.

தற்போது நிப்டியின் P/E மதிப்பு 22க்கு அருகில் வர்தகமாகிக் கொண்டு வருவதை கவனிக்கவும். இது கடந்த மூன்று ஆண்டுகளில் உச்ச நிலையில் உள்ளது.

தற்போது நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பார்த்தால் பிஜேபிக்கு ராஜ்யசபா எம்பிக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு குறைந்தது பத்துக்கு மேல் அதிகமாக கிடைக்கலாம்.

அடுத்து வலுவில்லாத அதிமுகவின்  இரண்டு அணிகளும் போட்டி போட்டு மோடியை ஆதரிக்க காத்திருக்கின்றன.

அதனால் லோக்சபாவில் ஜெயித்து ராஜ்யசபாவில் முட்டுக்கட்டையாக கிடந்த மசோதாக்கள் வேகமாக வெளிவர வாய்ப்பு இருப்பதை மறுக்க இயலாது.

அது மட்டுமில்லாமல் தற்போதைய தேர்தல் முடிவுகள் மோடி ஆட்சி நீண்ட காலம் செல்லும் என்ற நம்பிக்கையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வாய்ப்பு உள்ளது.

அதனால் இந்த வருடம் தொடக்கம் முதல் வெளியே மட்டும் சென்ற வெளிநாட்டு நிதி முதலீடுகள் இனி இங்கு குவியவும் வாய்ப்பு உள்ளது.

அதனால் இந்த வருட இறுதியில் சந்தை 32,000 சென்செக்ஸ் புள்ளிகளை எட்டினாலும் ஆச்சர்யமில்லை. ஒரு சிறிய திருத்தம் வந்தாலும் வாய்ப்புகளை தவற விட வேண்டாம்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக