ஞாயிறு, 26 மார்ச், 2017

வோடாபோன் - ஐடியாவின் சிக்கலான டீல், யாருக்கு லாபம்?

இந்தக் கட்டுரை சில நாட்களுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். சில வேலைப்பளு காரணமாக எழுத முடியவில்லை.


ஆனாலும் சில நண்பர்கள் இதனைப் பற்றி கொஞ்சம் விவரமாக எழுத வேண்டும் என்று கேட்டு இருந்தனர்.



அந்த அளவு உலக வரலாற்றில் சிக்கலான டீல் இதுவாக தான் இருக்கும் என்ற வகையில் இருந்தது.

வோடபோன் உலக அளவில் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம். அதே நேரத்தில் ஐடியா இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம்.

இரண்டு பெரிய நிறுவனங்களுக்கும் பாதகம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த இணைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

90 ரூபாய்க்கு வர்த்தகமாகும் ஐடியா பங்கிற்கு 72 ரூபாய் மதிப்பு கொடுத்து இருந்தனர். ஆனால் வோடாபோன் நிறுவனத்திற்கு அதன் உணமையான பங்கு மதிப்பான 130 என்பதனை எடுத்துக் கொண்டனர்.

அதனால் ஐடியா நிறுவனத்திற்கு பாதகம் என்று கருதும் வகையில் பங்குச்சந்தையில் இந்த பங்குகள் 15% அளவு வீழ்ந்தன.

உண்மையில் ஐடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான பிர்லா குடும்பத்தினர் இதனை தெரிந்தே விட்டுக் கொடுத்து இருப்பார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

இணைப்பிற்கு பின் பார்த்தால் வோடாபோன் 45% பங்குகளையும், பிர்லா குடும்பத்திடம் 26% பங்குகளும் இருக்கும்.

அப்படியானால் வோடபோன் நிறுவனம் தான் அதிக அதிகாரங்களை கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை. வோடபோன், ஐடியா இரண்டும் சம ஓட்டுரிமையை தான் கொண்டு இருக்கும்.

இந்த இடத்தில வோடபோன் தனது உரிமையை விட்டு கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சமநிலைப் படுத்தும் நோக்கில் ஐடியாவானது வோடபோன் நிறுவனத்திடம் 9.5% பங்குகளை 130 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம்.

ஒன்றை கவனித்தால் இப்பொழுது 130 ரூபாய் இருக்கும் பங்கு மதிப்பானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கண்டிப்பாக கூடி இருக்கும். அதனால் வோடபோன் நிறுவனம் தனது பங்கின் ப்ரீமிய மதிப்பை இங்கு விட்டுக் கொடுத்துள்ளது.

அடுத்து ஒரு வேளை ஐடியா நிறுவனம் 130 ரூபாய் என்பது அதிகம் என்று கருதினால் வாங்காமலும் போகலாம். அப்படியான வேளையில் வோடபோன் சமநிலைப்படுத்தும் அளவு பங்குகளை விற்க வேண்டும்.

இந்த இடத்தில் வோடபோன் நிறுவனம் பெரிய அளவு விட்டுக் கொடுத்துள்ளது.

ஆக, குறுகிய கால அளவில் ஐடியா நிறுவனம் தனது பங்கு மதிப்புகளை குறைத்துக் கொண்டு, நீண்ட கால நோக்கில் பல உரிமைகளை அதற்கு ஈடாக வாங்கி உள்ளது என்றே சொல்லலாம்.

வெறும் 3600 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு பிர்லா 72,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளார்.

அதே நேரத்தில், வோடபோன் நிறுவனம் கிடைத்ததை வாங்கி விட்டு இந்திய சந்தையை விட்டு வெளியேற முயற்சிப்பது போலவே இந்த டீல் தெரிகிறது.

ஒரு சிறு முதலீட்டு பங்குதாரராக பார்த்தால்,

இந்த இணைப்பிற்கு மட்டும் 13,000 கோடி ரூபாய் அளவு பணம் செலவிடப்பட வேண்டி வரும். அது ஐடியா நிறுவனத்தின் லாபத்தில் இரண்டு சதவீதம் வரை பதம் பார்க்கலாம் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் அடுத்தடுத்த வருடங்களில் இந்த இணைப்பானது 10,000 கோடி ரூபாய் அளவு பணத்தை சேமிக்க உதவும்.

அதனால் குறுகிய கால முதலீட்டில் இருப்பவர்கள் ஐடியா பங்கினை தவிர்க்கலாம். ஒரு ஐந்து வருடம் காத்து இருக்கலாம் என்றால் முதலீடு செய்யலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக