திங்கள், 13 மார்ச், 2017

IPOவில் பங்குகள் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது?

கடந்த வாரம் D-Mart ஐபிஒவை வாங்கலாம் என்று பரிந்துரை செய்து இருந்தோம். ஆனால் இந்த ஐபிஒ மட்டும் கிட்டத்தட்ட 108 மடங்குகள் அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.


இதனால் கிடைப்பது அரிது என்ற நிலையில் சில நண்பர்கள் IPOவில் பங்கு எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என்று கேட்டு இருந்தார்கள்.அதனைப் பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை பார்த்தால் IPOவில் பங்குகள் ஒதுக்கப்படும் முறை விண்ணப்பித்த தொகைக்கேற்ப வந்த விகிதாசாரப்படி தான் இருந்தது.

அதாவது 25,000 ரூபாய் அளவில் விண்ணப்பிப்பிவருக்கு குறைவாகவும், 2 லட்ச ரூபாய்க்கு விண்ணப்பித்தால் அதிகமாகவும் கிடைக்க சாத்தியம் இருந்தது.

இதனால் அதிக அளவில் Oversubscription ஆகும் போது குறைவான தொகையில் விண்ணப்பிவர்களுக்கு கிடைக்காமல் போகவும் அதிக வாய்ப்புகள் இருந்தது.

இது ஒரு வகையில் சிறு முதலீட்டாளர்களுக்கு தொய்வை ஏற்படுத்த, இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டது.

புதிய முறையின் படி, விண்ணப்பிப்பவர்கள் தொகையை விட, விண்ணப்பிபவர்கள் எண்ணிக்கை அதிக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்..

அதாவது ஒரு நிறுவனம் 10 லட்சம் மதிப்புள்ள 10,000 பங்குகளை 100 ரூபாய் என்ற விகிதத்தில் விநியோகிக்க முடிவு செய்து இருக்கிறது.

இதில் ஒரு லாட் என்பது 100 பங்குகள் 100 ரூபாய் விலையில் 10,000 ரூபாய் மதிப்பு என்று அனுமானித்துக் கொள்வோம்.

அதில் 35% பங்குகள் நம்மைப் போன்ற ரீடைல் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும். அப்படியானால் 3500 பங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அதனுடைய மதிப்பு 3,50,000 ரூபாய்.

இதற்கு 5000 நபர்கள் ஒரு லாட், இரண்டு லாட் என்று பல வகையில் மொத்தமாக 7,00,000 ரூபாய்க்கு விண்ணப்பித்து இருந்ததாக கருதுவோம்.

முதலில் இந்த 5000 விண்ணப்பதாரர்களில் 3500 பேரை கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பர். அவர்களுக்கு ஒரு லாட் என்ற அடிப்படையில் 100 பங்குகள் கிடைக்கும்.

இதனால் தான் சில சமயங்களில் 2,00,000 ரூபாய்க்கு விண்ணப்பித்து இருந்தாலும் 10,000 ரூபாய் அளவில் பங்குகள் கிடைத்து இருக்கும். ஒரு லாட் அளவில் விண்ணப்பித்து இருந்தாலும் 10,000 ரூபாய் அளவுக்கு பங்குகள் கிடைத்து இருக்கும்.

மேல் சொன்னதில் இருந்து மாறுபட்ட இன்னொரு நிகழ்வையும் இதில் கருத்தில் கொள்வோம்.

இதே ஐபிஒவிற்கு 2500 நபர்கள் ஒரு லாட், இரண்டு லாட் என்று பல வகையில் மொத்தமாக 5,00,000 ரூபாய்க்கு விண்ணப்பித்து இருந்ததாக கருதுவோம்.

அப்பொழுது விண்ணப்பித்த 2500 பேரும் முதலில் ஒரு லாட் பங்குகளை பெற்றிருவர். அதாவது 2500*10,000 = 2,50,000 ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

இனி மீதி இருப்பது 1,00,000 ரூபாய். இந்த மதிப்பிற்கு விண்ணப்பித்த இதர தொகைக்கேற்ப விகிதாச்சாரம் கருத்தில் கொள்ளப்படும்.

இறுதியாக  ஐபிஒவிற்கு விண்ணப்பிக்கும் போது ஒரு முக்கியமான டிப்ஸை தருகிறோம்.

தற்பொழுது எல்லா நல்ல ஐபிஒக்களும் Oversubscription ஆகி விடுகிறது.

இந்த சமயத்தில் இரண்டு லட்ச ரூபாயையும் ஒரே கணக்கில் வைத்து விண்ணப்பித்தால் ஒன்று கூட கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில் நமது பெரிய தொகையான பணமும் நிறுவனத்திடம் அடைபட்டு இருக்கும்.

அதற்கு பதிலாக ஒவ்வொருவர் பெயரில் இருக்கும் கணக்கிலும் ஒவ்வொரு லாட் விண்ணப்பிப்பது IPOவில் நமக்கு கிடைக்கும் நிகழ்தகவை கூட்டி விடும்.

உதாரணத்துக்கு நமது பெயரில், மனைவி பெயரில், பெற்றோர் பெயரில் என்று கணக்கு வைத்து ஒரு லாட் விண்ணப்பித்தால் அதிக அளவில் பங்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இப்பொழுது ஓரளவு புரிந்திருக்கும் என்பதால் D-mart ஐபிஒவில் எவ்வளவு பங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது வாசகர்களுக்கு ஹோம் ஒர்க்காக விட்டு விடுகிறோம்.

தொடர்பான பதிவுகள்:
Avenue Supermarts IPOவை வாங்கலாமா?


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: